சான் ஆன்ட்ரியாஸ் (San Andreas) - ஹாலிவுட் பட விமர்சனம்

 ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

விமர்சனம் 30-May-2015 7:57 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ 7ஆம் பாகத்தைத் தொடர்ந்து ‘ராக்’ புகழ் டிவைன் ஜான்ஸன் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இன்னொரு படம் ‘சான் ஆன்ட்ரியாஸ்’. பிராட் பெய்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வார்னர் பிராஸ், வில்லோஜ் ரோடு ஷோ பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பல கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளன. உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்கள்?

பேரழிவு ஒன்றிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றும் நாயகனின் கதையைத்தான் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸ்’ படத்திலும் காட்டியிருக்கிறார்கள். பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதை ரசிகர்களுக்கு படைத்திருக்கும் விதத்தில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

விபத்து நேரங்களில் மக்களைக் காப்பாற்றும் பேரிடர் மீட்பு குழு வீரரான ரேவை (டிவைன் ஜான்சன்) கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி எம்மா (கார்லோ ககினோ) விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் இது அவர்களின் டீன் ஏஜ் மகளான பிளாக்கிற்கு (அலெக்ஸான்ட்ரா தத்தாரியோ) பிடிக்கவில்லை. இப்படியாக இவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்காவின் சான் ஆன்ட்ரியாஸ் பகுதியில் தொடர் பூகம்பங்கள் நிகழத் தொடங்குகின்றன. வழக்கமாக வரும் சாதாரண பூகம்பங்கள் போல் அல்லாமல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகின்றன அந்த பூகம்பங்கள். இந்த இக்கட்டான சமயத்தில் மனைவி எம்மாவும், மகள் பிளாக்கும் தனித்தனி இடங்களில் கட்டிட இடிபாடுகளில் மாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் ரே காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே சான் ஆன்ட்ரியாஸ் படத்தின் கதை.

படத்தில் காட்டியிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது இப்போது இல்லாவிட்டாலும், இதுபோல் எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்பா மகள் சென்டிமென்ட், கணவன் மனைவி பிரிந்து பின் மீண்டும் சேர்வது, திடீரென முளைக்கும் டீன்ஏஜ் காதல், கடைசி வரை ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டேயிருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் என வழக்கமான விஷயங்களைத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிராட். மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்த காருக்குள் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் அந்த அறிமுகக் காட்சி அசத்தல். அதிலும் 3டியில் பார்க்கும்போது நாமே விழுவதுபோல் லேசாக பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

டிவைன் ஜான்ஸன் ஏற்கெனவே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், இப்படத்திலும் பாசமுள்ள அப்பாவாக நம் மனதை எளிதில் கவர்ந்து செல்கிறார். அவருடைய மகளாக நடித்திருக்கும் அலெக்ஸான்ட்ராவும் அழகு தேவதையாக மட்டுமில்லாமல் புத்திசாலிப் பெண்ணாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். அவருக்கு வரும் அந்த காதல் எபிசோடும் மினி ஹைக்கூ.

இதுபோன்ற பூகம்பங்கள் வந்தால் வளர்ந்த நாடுகளின் மிகப்பெரிய அணைக்கட்டுகளால் எத்தகைய பேராபத்து ஏற்படும் என்பதை சமூக அக்கறையோடு இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பார்த்து நாம் ஆச்சரியப்படும் வானுயர்ந்த கட்டிடங்கள், பூகம்ப நேரங்களில் எவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை தத்ரூபமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள். சான்பிரான்ஸிஸ்கோ நகரமே இரண்டாகப் பிளந்து நிற்கும் காட்சியை ரசிகர்கள் வாய் பிளந்து ரசிக்கிறார்கள். பின்னணி இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இப்படத்தில் உச்சபட்ச உழைப்பைக் கொட்டியிருக்கின்றன.

கதையும், காட்சிகளும் கொஞ்சம் ஏற்கெனவே பார்த்துவிட்ட உணர்வை ஏற்படுத்தினாலும் 2012, ஆர்ட்டிக் பிளாஸ்ட், தி டே ஆப்டர் டுமாரோ, ட்விஸ்ட்டர் போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘சான் ஆன்ட்ரியாஸு’ம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;