டிமான்ட்டி காலனி - விமர்சனம்

ஹாரர் ப்ரியர்களுக்கு மட்டும்!

விமர்சனம் 22-May-2015 5:21 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : R.Ajay Gnanamuthu
Starring : Arulnithi, Raghavan, Ramesh Thilak
Music : Keba Jeremiah
Cinematography : Aravinnd Singh
Editing : Bhuvan Srinivasan
Production : Sri Thenandal Films, Mohana Movies

பேய்ப்பட வரிசையில் இன்னொரு வரவு. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

அருள்நிதியும் அவருடைய 3 நண்பர்களும் சேர்ந்து இரவு நேரம் ஒன்றில் பொழுதுபோகாமல் டிமான்ட்டி காலனியில் உள்ள பாழடைந்த பங்களா ஒன்றிற்கு விளையாட்டாக செல்கிறார்கள். பார்ப்பதற்கு அமானுஷ்யத் தோற்றமளிக்கும் அந்த பங்களாவிற்குள் சென்று வந்தபிறகு ஜோஷ்யரான எம்.எஸ்.பாஸ்கரை நான்கு பேரும் சென்று சந்திக்கிறார்கள். அவரிடம் ஜோதிடம் கேட்டுவிட்டுத் திரும்பும் வழியில், அருள்நிதிக்கு எம்.எஸ்.பாஸ்கர் போன் செய்து, அவரை திரும்பவும் தன்னை வந்து பார்க்குமாறு படபடப்புடன் பேசுகிறார். அருள்நிதிக்கும் அவருடைய குரலில் ஏதோ பீதி தெரிந்ததால் மீண்டும் அவரைப் பார்க்க தனியாகச் செல்கிறார். அங்கே போனால், எம்.எஸ்.பாஸ்கர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறார் அருள்நிதி.

எம்.எஸ்.பாஸ்கர் அருள்நிதியிடம் என்ன சொல்ல வந்தார்? எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்? டிமான்ட்டி காலனி பங்களாவின் ஃப்ளாஷ்பேக் என்ன என்பதே இப்படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

கோலிவுட்டில் வாரம் ஒரு பேய்ப்படம் ரிலீஸாகிக் கொண்டிருப்பதால், ரசிகர்களுக்கு புதிதாக எதையாவது காட்டியாக வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இப்படத்தின் கதைக்களம் காட்டுகிறது. உண்மையிலேயே ‘டிமான்ட்டி காலனி’ என்ற ஒரு இடத்தின் வரலாற்றுக் கதைகளைக் கேட்டு, அதனை ஒரு சிறு சம்பவமாக படத்தில் பதிவு செய்து, இதுவரை வெளிவந்துள்ள ஹாரர் படங்களின் பாதிப்பில் சிற்சில காட்சிகளை சேர்த்து ரசிகர்களை பயமுறுத்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து.

டிமான்டி காலனி பங்களாவிற்குள் ஹீரோவும் அவருடைய நண்பர்களும் போவதற்கு முந்தைய காட்சிகள் ஸ்லோவாகவும், எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வதால் ஆரம்பமே கொஞ்சம் போர்தான். பங்களாவிற்குள் போனதும் நிச்சயம் பயமுறுத்தப் போகிறார்கள் என்று பார்த்தால் அங்கேயும் சின்ன சின்ன பீதியை ஏற்படுத்திவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். இடைவேளை வரை இப்படியே பயணிக்கும் படம் இடைவேளைக்குப் பின்பே சூடு பிடிக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களில் சிற்சில பேய்ப்படங்களின் பாதிப்புகள் தெரிந்தாலும், சின்ன சின்ன ட்விஸ்ட்களால் இரண்டாம்பாதியில் கொஞ்சம் பீதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸும் ‘அட...’ போட வைத்திருக்கிறது.

ரசிகர்களை பயமுறுத்துவதற்கு ஒளிப்பதிவு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை ஓகே ரகம். எடிட்டிங், சவுன்ட் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவை தேவைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் ஹீரோ அருள்நிதிக்கு பொருத்தமான கேரக்டர். முடிந்தளவுக்கு செய்திருக்கிறார். அவரைவிட அவருடைய நண்பர்களாக வருபவர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். புதுமுகங்களாக இருந்தாலும் அந்தந்த கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த நான்குபேரைத் தவிர எம்.எஸ்.பாஸ்கர் ஒரு காட்சியில் வந்துபோகிறார். கதைக்கு தேவையில்லை என்பதால் ஹீரோயினைத் தவிர்த்திருக்கிறார்கள். அதற்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

பலம்

1. சின்ன சின்ன ட்விஸ்ட்களுடன்கூடிய படத்தின் இரண்டாம்பாதி
2. ஒளிப்பதிவு
3. சவுன்ட் எபெஃக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங்

பலவீனம்

1. மெதுவாகவும், சுவாரஸ்யமில்லாமலும் நகரும் முதல்பாதி
2. கொஞ்சம் குழப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை
3. பேய்ப் படங்களுக்குரிய திகில் காட்சிகள் குறைவாக இருப்பது

மொத்தத்தில்...

பெரிய அளவில் இந்த ‘டிமான்ட்டி காலனி’ ரசிகர்களை பயறுத்தவில்லையென்றாலும், வழக்கமான பேய்ப்படங்களாகப் பார்த்துப் போரடித்தவர்களுக்கு இப்படம் வித்தியாசமான உணர்வைத் தரலாம்.

ஒரு வரி பஞ்ச் : ஹாரர் ப்ரியர்களுக்கு மட்டும்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆறாது சினம் - டிரைலர்


;