மேட் மேக்ஸ் : ஃப்யூரி ரோடு - விமர்சனம்

ஆக்ஷன் ப்ரியர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று!

விமர்சனம் 18-May-2015 5:26 PM IST Top 10 கருத்துக்கள்

சூப்பர் ஹீரோக்களைப்போல் ‘மேட் மேக்ஸ்’ எனும் கதாபாத்திரமும் ஹாலிவுட்டில் மிகப் பிரபலம். மெல் கிப்ஸன் மேட் மேக்ஸாக நடித்து 1979, 1981, 1985ஆம் ஆண்டுகளில் இதுவரை ‘மேட் மேக்ஸ்’ படத்தின் 3 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கெனவே 3 பாகங்களை இயக்கிய ஜார்ஜ் மில்லர் (George Miller) தற்போது 4ஆம் பாகமாக ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோடு’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

‘மேட் மேக்ஸ்’ கதாபாத்திரத்தில் இந்தமுறை நடித்திருப்பவர் டாம் ஹார்டி (Tom Hardy). அவருக்கு இணையான... இன்னும் சொல்லப்போனால் அவரைவிட ஒரு படி அதிகமான கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சார்லைஸ் தெரான் (Charlize Theron) நடித்திருக்கிறார். இப்படத்தின் ‘ஃப்யூரியோஸா’ (Imperator Furiosa) கேரக்டருக்காக தன் தலைமுடியைத் தியாகம் செய்திருக்கிறார் அழகுப் பதுமையான சார்லைஸ். ஏற்கெனவே வெளிவந்த 3 பாகங்களும் அதிரிபுதிரி ஹிட். இந்த 4ஆம் பாகம் எப்படி?

‘ஒரு சொட்டுத் தண்ணீருக்காக மொத்த மனித இனமும் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டால் என்னவாகும்..?’ எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோடு’. பூமியின் பெரும்பாலான இடங்கள் தண்ணீரின்றி வறண்டு பாலைவனமாகக் காட்சியளிக்க வல்ஹல்லா எனும் இடத்தில் மட்டும் பெரிய அளவில் தண்ணீர் ஆதாரம் இருக்கிறது. கொடூரமான வீரர்களைக் கொண்ட படையின் மூலம் வல்ஹல்லாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஒரு சர்வாதிகாரியைப்போல் ஆட்சி செய்கிறான் இம்மார்ட்டன் ஜோ (Hugh Keays-Byrne).

அவனிடம் படைத்தளபதிபோல் இருக்கும் ஃப்யூரியோஸா, அந்த இடத்தைவிட்டுத் தப்பிக்க திட்டம் போடுகிறாள். அப்படி அவள் தப்பித்துச் செல்லும்போது இம்மார்ட்டன் ஜோவின் 5 மனைவிகளையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். இந்த விஷயம் இம்மார்ட்டன் ஜோவுக்குத் தெரியவர, தன் படை பட்டாளங்களுடன் தன் மனைவிகளை மீட்கக் கிளம்புகிறான்.

அப்படிப் போகும்போது தங்கள் வாகனம் ஒன்றில் தங்களிடம் அடிமையாக இருக்கும் மேட்மேக்ஸையும் கட்டி இழுத்துச் செல்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இம்மாட்டன் ஜோ ஆட்களிடமிருந்து தப்பித்து, ஃப்யூரியோஸாவுடன் சேர்ந்து கொள்கிறான் மேட் மேக்ஸ். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை மயிர்கூச்செறியும் சாகஸங்களுடன் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர்.

கதைக்குத் தேவையென்றால் ஹீரோவைவிட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஹாலிவுட் படங்கள் முன்னோடி. இப்படத்தின் பிரதான பாத்திரத்திற்கு இணையாக ஹீரோயின் சார்லைஸ் தெரானுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது, அவரும் இந்த கேரக்டருக்காக மொட்டையடித்து, உடம்பை இரும்பாக்கி, ஆக்ஷனின் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார். மெல் கிப்ஸன் இல்லாத குறையை தீர்த்து வைத்திருக்கிறார் நாயகன் டாம் ஹார்டி. ஆக்ஷனில் மட்டுமல்ல தன் குடும்பத்தை நினைத்து ஏங்கும்போது நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். கொடூர வில்லனாக நடித்திருக்கும்Hugh Keays-Byrne, உத்தம வில்லனாக நடித்திருக்கும் நிக்கோலஸ் ஹால்ட் (Nicholas Hoult) என படம் நெடுக ஏகப்பட்ட கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன.

ஒரு ஆக்ஷன் படத்தின் சேசிங் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்படத்தை தாராளமாக உதாரணம் காட்டலாம். ‘டெத் ரேஸ்’ பட ஸ்டைலில் இப்படத்தின் வாகனம் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக நாயகி சார்லைஸ் தெரான் ஓட்டும் 18 வீல்களைக் கொண்ட வார் ரிக் வாகனம் படத்தில் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறது. பாலைவனப் பாறைகளின் மேல் பறந்து செல்லும் பைக் சாகஸங்களும் படத்தில் உள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பயிற்சிபெற்ற சாகஸ வீரர்களுடன் கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் நமீபியா பாலைவனத்திலேயே குடியிருந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கொட்டிய உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. குறிப்பாக மணல் புயல் ஒன்றிற்குள் பயணம் செய்துகொண்டே சண்டை போடும் காட்சி தியேட்டரை அதிர வைத்திருக்கிறது. கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவுக்கு உச்சபட்ச தரத்தை ‘மேட் மேக்ஸு’க்காக வழங்கியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை வார்னர் பிராஸ் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. ஐஎம்டிபியில் 8.8 ரேட்டிங் பெற்றுள்ள இப்படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்திருக்கிறதாம். குறிப்பாக ஐமேக்ஸ் 3டியில் இப்படத்தைப் பார்ப்பது பேரானந்தம் என்கிறார்கள்.

ஆக்ஷன் ப்ரியர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று!

(Mad Max: Fury Road Review, Mad Max: Fury Road Movie Review, Mad Max: Fury Road Hollywood Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;