புறம்போக்கு என்கிற பொதுவுடமை - விமர்சனம்

தூக்கு மேடையின் கருப்புப் பக்கங்கள்!

விமர்சனம் 15-May-2015 2:53 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : S. P. Jananathan
Production : UTV Motion Pictures
Starring : Arya, Shaam, Vijay Sethupathi, Karthika Nair
Music : Varshan
Cinematography : N.K.Ekambaram
Editing : N.Ganesh Kumar

இயற்கை, ஈ, பேராண்மை என தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சமூகக் கருத்தை அழுத்தமாக சொல்லிவரும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த முறை ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’யோடு வந்திருக்கிறார்.

கதைக்களம்

பல தேச துரோக செயல்களைச் செய்த காம்ரேடான பாலுச்சாமிக்கு (ஆர்யா) தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பாலுவை தூக்கில் போடும் பொறுப்பு சென்னை மத்திய சிறைச்சாலைக்கு புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரி மெக்காலே (ஷாம்) வசம் ஒப்படைக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஒருவரால்தான் பாலு தூக்கில் போடப்பட வேண்டும் என்பதால் ஏற்கெனவே அந்த வேலையைச் செய்த எமலிங்கத்திடம் (விஜய் சேதுபதி) அந்த வேலை கொடுக்கப்படுகிறது. அதேநேரம் பாலுவை தப்பிக்க வைக்க திட்டம் போடும் இன்னொரு காம்ரேடான குயிலி (கார்த்திகா) விஜய் சேதுபதியின் மனதை மாற்றி தன் டீமுடன் சேர்த்துக் கொள்கிறார். குயிலியும், எமலிங்கமும் பாலுவை தப்பிக்க வைக்கத் திட்டம்போட, மெக்காலே பாலுவை தூக்கில் போடுவதில் குறியாய் இருக்க, இறுதியில் பாலு தப்பித்தாரா இல்லையா என்பதே க்ளைமேக்ஸ்!

படம் பற்றிய அலசல்

உலகநாடுகளில் குவியும் எலக்ட்ரானிக் மற்றும் ஆயுதக் கழிவுகளை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என்ற கருத்தோடு ஆரம்பிக்கும் இப்படம் அதன்பிறகு வேறொரு பாதையில் பயணிக்கிறது. புறம்போக்கு என்பது தனிவுடமை அல்ல அது பொதுவுடமை என்பதை தலைப்பில் வைத்திருந்தாலும் உண்மையில் இப்படம் தூக்கு தண்டனைக் கைதியின் மனநிலையையும், அதைச் செய்பவரின் மனஉளைச்சலையும் மையப்படுத்தும் விதமாக இருக்கிறது.

இப்படத்திலும் நல்ல பல கருத்துகளை சினிமாத்தனத்துடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். காட்சிகளில் கொஞ்சம் அமெச்சூர்தனமும், லாஜிக் ஓட்டைகளும் இருந்தாலும் அவர் சொல்ல வந்த விஷயமும், அதற்கான மெனக்கெடல்களும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு பக்கத்தை இப்படத்தின் மூலம் பகீரங்கப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். சமீபகால தமிழ்சினிமாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய க்ளைமேக்ஸ் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னி மில்லில் போடப்பட்ட ஜெயில் செட்! நிஜமாகவே ஒரு ஜெயிலுக்குள் சில நாட்கள் தங்கியிருந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கலை இயக்கத்திற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே!

ஷாம், விஜய்சேதுபதியின் கேரக்டரை சரியாக வடிவமைத்த எஸ்.பி.ஜனநாதன் ஆர்யாவுக்கான பின்னணியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அதேபோல் ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக கார்த்திகா அன்ட் கோ எடுக்கும் முயற்சிகளும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் கொஞ்சம் அபத்தமாகவே இருக்கிறது. அதோடு தேவையில்லாத இரண்டு பாடல்கள் வேறு. இதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் எஸ்.பி.ஜனநதான் சொல்ல வந்த கருத்து இன்னும் ஆழமாக ரசிகனின் நெஞ்சில் இறங்கியிருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி ஆகிய 3 ஹீரோக்களுக்கும் சமமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தாலும், மூன்று பேரில் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது விஜய்சேதுபதிதான். எமலிங்கமாக சாதாரணமாக அறிமுகமாகி, கடைசியில் கண்கலங்க வைத்திருக்கிறார். ‘தில்லாலங்கடி’ படத்திற்குப் பிறகு ஷாம் மீண்டும் போலீஸாக கலக்கியிருக்கும் படம் இது. நேர்மையான அதிகாரியாக நம் மனதில் எளிதாக இடம் பிடித்துவிடுகிறார். க்ளைமேக்ஸுக்காகவே ஆர்யாவின் நடிப்பு பெரிதாக பேசப்படும். இப்படத்தின் கதைக்களத்திற்கு நாயகியின் தேவையில்லாததால் கார்த்திகாவின் கேரக்டர் கொஞ்சம் அந்நியப்பட்டே நிற்கிறது. இருந்தாலும் தன் வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறார் கார்த்திகா.

பலம்

1. விஜய்சேதுபதி, ஷாம், ஆர்யா ஆகியோரின் பங்களிப்பு
2. இதுவரை தமிழில் சொல்லப்படாத கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருப்பது
3. அழுத்தமான க்ளைமேக்ஸ்.
4. பின்னணி இசை

பலவீனம்

1. அமெச்சூர்த்தனமான சில காட்சிகளும் லாஜிக் ஓட்டைகளும்
2. தேவையில்லாத பாடல்கள்
3. படத்தின் நீளம்.

மொத்தத்தில்...

ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தை அதன் க்ளைமேக்ஸ் தரும் ஆழமான உணர்வுகளுக்காக இருகரம் நீட்டி வரவேற்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : தூக்கு மேடையின் கருப்புப் பக்கங்கள்!

ரேட்டிங் : 4.5/10

(Purampokku Movie Review, Purampokku Engira Podhuvudamai Movie Review, Purampokku Engira Podhuvudamai Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;