தூக்கு தண்டனை அவசியமா?

தூக்கு தண்டனை அவசியமா?

கட்டுரை 11-May-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இப்படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் ‘பைனரி’ நிறுவனமும், ‘ யுடிவி’ நிறுவனமும இணைந்து தயாரித்துள்ளது. எப்போதுமே தனது படங்கள் மூலம் சமூக கருத்துக்களைச் சொல்லும் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தில் தூக்கு தண்டனை அவசியமா என்பதை திரைக்கதை ஆக்கியிருக்கிறார். இப்படம் குறித்து எஸ்.பி.ஜனநாதனிடம் கேட்டபோது,

‘‘இந்த படத்தில் ஆர்யா ஒரு புரட்சியாளராக நடித்துள்ளார். தூக்கு தண்டனை கைதியாக வரும் அவருடைய பாத்திரம் தான் படத்தின் மையம். சிறை அதிகாரியாக ஷாம் நடித்திருக்கிறார். ரயில்வே தொழிலாளியாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். புரட்சிப் பெண்ணாக கார்த்திகா நாயர் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களை சுற்றித்தான் இப்படத்தின் கதை நடக்கும். இப்படம் தூக்கு தண்டனை அவசியமா என்ற விஷயத்தை விவாதிக்கும் விதமாக இருக்கும்.

மதுரை பாலு என்கிற பாலுசாமியின் வாழ்க்கையும் ஆர்யா கேரக்டரை மெருகேற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன பகத்சிங்கின் வாழ்க்கை சம்பவங்களையும் ஆர்யா கேரக்டர் வெளிப்படுத்தும். ஆர்யா ஏற்றிருக்கிற கேரக்டருக்கு மட்டுமல்ல, கார்த்திகா ஏற்றிருக்கிற கேரக்டருக்கும் சரித்திர பின்னணி உண்டு! கார்த்திகா ஏற்றிருக்கும் கேரக்டர் பெயர் குயிலி. வேலு நாச்சியார் படையில் இருந்தவர் குயிலி. இந்திய வரலாற்றில் முதல் தற்கொலை படைப் பெண் அவர் தான்! குயிலியின் தியாகத்தை நினைவு கூறவே கார்த்திகா கேரக்டருக்கு குயிலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இது மல்டி ஹீரோ கதை என்பதால் இதில் நடிக்கிறவர்களிடையே ஈகோ வருமோ என்கிற பயம் முதலில் இருந்தது. ஆனால் ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி மூவரும் எந்த பிரச்சனையும் செய்யாமல் என் மீதுள்ள மரியாதையில் அந்தந்த பாத்திரங்களில் சிறப்பாக நடித்து கொடுத்தனர். இப்படத்திற்கு 120 நாட்கள் படப்பிடிப்பு நடந்து. அத்தனை நாட்களும் எல்லோரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தார்கள்.

என் தனிப்பட்ட லாபத்துக்காக நான் இப்படத்தை தயாரிக்கவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கேட்டு வாங்கி செய்வது இடையூறான விஷயம். அதனால தான் இந்த படத்தை ‘யுடிவி’யிடம் மொத்தமாக ஒரு தொகையை வாங்கி நானே தயாரித்து இயக்கினேன். அதனால் பொறுப்பு அதிகமானது. அதே சமயம் சுதந்திரம் கிடைத்தது. அதனால் படத்தை நான் நினைத்தது மாதிரி எடுக்க முடிந்தது. இந்த படம் ‘யுடிவி’ நிறுவனத்திற்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கே மாறுபட்ட ஒரு படமாக இருக்கும்’’ என்றார் எஸ்.பி.ஜனநாதன்.

படம் குறித்து எஸ்.பி.ஜனநாதன் பேசுவதற்கு முன்னதாக இப்படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட ஜெயில் செட் குறித்த ஒரு வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டது. அந்த ஜெயில் செட் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அந்த ஜெயில் செட்டில் எடுக்கப்பட் ஒரு சில காட்சிகளும் வியக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.தூக்கு தண்டனை அவசியமா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;