மாஸ் - இசை விமர்சனம்

மாஸ் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 9-May-2015 1:01 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் 6வது படம், சூர்யாவுடன் 7வது படம், இருவருடனும் இணைந்து முதல் படம் என ‘மாஸ்’ படத்தின் மூலம் சூப்பர் காம்பினேஷன் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘மாஸ்’ ஆல்பம் என்ன சொல்கிறது?

தெறிக்குது தெறிக்குது மாஸ்...
பாடியவர்கள் : ரஞ்சித், ஷங்கர் மகாதேவன், யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள ஓபனிங் பாடல். யுவனின் அதிரடி இசையில், ஷங்கர் மகாதேவனின் குரலில் தெறிக்கிறது இப்பாடல். பாடல் வரிகளை ஓவர்டேக் செய்யும் வகையில் மியூசிக்கை அதிகமாக ஒலிக்கவிட்டிருக்கிறார் யுவன். ‘‘என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான். ஆனால் அதுவரை தினம் தினம் உயிர் எடுப்பான்!’’ என நட்பின் ஜாலிப் பக்கங்களை பாடல் வரிகளாக்கியிருக்கிறார் மதன் கார்க்கி. அனேகமாக இப்பாடலில் சூர்யாவுடன் இணைந்து பிரேம்ஜியும் சூப்பர் ஆட்டம் போட்டிருக்கலாம். எலக்ட்ரானிக் இசைகளுக்கு நடுவே, கொஞ்சம் நாட்டுப்புற இசையும் சேர்ந்துகொள்ளும்போது பாடலின் சுவாரஸ்யம் மேலும் அதிகரிக்கிறது. காட்சிகளுடன் பார்க்கும்போது பெரிய அளவில் கவனம் பெறும்.

நான் அவள் இல்லை...
பாடியவர்கள் : கார்த்திக், சின்மயி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


நாயகன் மேல் இரண்டவதாக காதல் கொள்ளும் நாயகியின் உணர்வுகளை அற்புதமாக இப்பாடலில் பிரதிபலித்திருக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி. கொஞ்சம் வேகமாக பயணிக்கும் இந்த மெலடிப் பாடலில் யுவனின் அனுபவம் பளிச்சிடுகிறது. கார்த்திக், சின்மயியின் குரல்கள் இப்பாடலை மேலும் இனிமையாக்கியுள்ளது. முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் ரகம் இது!

பூச்சாண்டி...
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பூஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்


ஆல்பத்தின் மிக வித்தியாசமான பாடல் இந்த பூச்சாண்டி. கொஞ்சம் பயமுறுத்தும் வகையில் சிறப்பு சப்தங்களுடன் தொடங்கும் இப்பாடல் முழுக்க வித்தியாசமான இசையால் வசீகரித்திருக்கிறார் யுவன். பாடலையும் அவரே பாடியிருப்பது கூடுதல் சிறப்பு. கிடார், பேஸ் ஆகியவற்றுடன் புல்லாங்குழலும் இணைந்து வித்தியாசமான இசையை பரவவிட்டிருக்கிறது. கங்கை அமரனின் வரிகளில் அந்தக்கால வாடை. பாடலின் இரண்டாம்பாதியில் யுவனுடன் இணைந்து பூஜாவும் சிற்சில வரிகளைப் பாடியிருக்கிறார். இப்பாடலும் விஷுவலாக விருந்து படைக்கும் என நம்பலாம்.

பிறவி...
பாடியவர்கள் : வைக்கம் விஜயட்சுமி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


‘பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை எனும் புழுவைக் கண்டு, தானே வந்து சிக்கிக் கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம்’ என மதன் கார்க்கியின் அழுத்தமான வரிகளுடன் கோரஸாக ஆரம்பிக்கிறது இப்பாடல். படத்தில் ஏற்படும் முக்கிய மரணம் ஒன்றிற்குப் பிறகு ஒலிக்கும் பாடலாக இது இருக்கலாம். அர்த்தமுள்ள இப்பாடலின் வரிகளை கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தாலே இப்படத்தின் கதைக்களத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சி மிகுந்த இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் பதிவு செய்திருப்பது மிகச் சிறப்பு!

இந்த 4 பாடல்களோடு ‘தெறிக்குது தெறிக்குது மாஸ்’ பாடலின் இன்னொரு வெர்ஷனும், ‘கான் மேன்’, ‘மாஸ்’ என இரண்டு தீம்களையும் ஆல்பத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்... ஓபனிங் பாடலைத் தவிர்த்த மற்ற 3 பாடல்களுமே படத்தின் கதையோடு சம்பந்தப்பட்டதாகவே தெரிகிறது. வழக்கமான ட்யூன்களாக இல்லாமல் கொஞ்சம் புதுவித முயற்சிகளையும் ‘மாஸ்’ ஆல்பத்தில் கையாண்டிருக்கிறார் யுவன். பெரிய அளவில் ஹிட்டாவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இந்த ஆல்பத்தில் இருக்கின்றன. மாஸ்.... ஆல்பம் உண்மையாகவே தெறிக்குது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;