இந்தியா பாகிஸ்தான் - விமர்சனம்

சீரியஸ் தலைப்பில் ‘இழுவை’யான சிரிப்பு படம்!

விமர்சனம் 8-May-2015 5:05 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Vijay Antony Film Corporation
Direction : N. Anand
Starring : Vijay Antony, Sushma Raj, Pasupathy, Jagan, Manobala
Music : Deena Devarajan
Cinematography : N. Om
Editing : M.Thiyagarajan

‘நான்’, ‘சலீம்’ படங்களில் த்ரில்லர் மூலம் கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி, ‘இந்தியா பாகிஸ்தான்’ மூலம் காமெடியில் களமிறங்கியிருக்கிறார். ரசிகர்கள் சிரித்தார்களா?

கதைக்களம்

போலி என்கவுன்ட்டர் சம்பவம் ஒன்றை நிருபர் ஒருவர் வீடியோ எடுக்க, அதை போலீஸ் பார்த்துவிடுகிறது. போலீஸிடமிருந்து தப்பித்து ஷாப்பிங் மால் ஒன்றில் நுழையும் நிருபர் என்கவுன்ட்டர் சம்பவத்தை டிவிடியாக்கி அதை ‘காதலுக்கு மரியாதை’ பட டிவிடிக்குள் மறைத்து வைக்கிறார். அந்த டிவிடியை வாங்குவதற்காக விஜய் ஆண்டனியும், சுஷ்மா ராஜும் ஒரே நேரத்தில் கை வைக்க, ‘காதலுக்கு மரியாதை’ பாணியில் விழியில் விழி மோதுகிறது. இரண்டு டிவிடி இருப்பதால் ஆளுக்கொன்றாக அதை வாங்கிச் செல்கிறார்கள். இதனைப் பார்த்துவிடும் போலீஸ், சுஷ்மாவைத் தேடி அலைகிறார்கள்.

இன்னொருபுறம் வழக்கறிஞராக இருக்கும் விஜய் ஆண்டனியும், சுஷ்மா ராஜும் தாங்கள் இருவரும் வக்கீல் என்பது தெரியாமலேயே ஒரே வீட்டை ‘ஷேரிங்’ முறையில் வாடகைக்குப் பிடித்து, ஆளுக்கொரு ரூமில் ஆபீஸ் போடுகிறார்கள். இந்த விவரம் இருவருக்குமே தெரிந்ததும் யாருக்கு முதல் கேஸ் கிடைக்கிறதோ அவருக்குதான் இந்த வீடு, மற்றவர் காலி செய்ய வேண்டும் என தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

ஒருபுறம் சுஷ்மாவைக் கொன்றுவிட்டு டிவிடியைக் கைப்பற்றத் துடிக்கும் போலீஸ், இன்னொருபுறம் தங்களின் முதல் கேஸுக்காக போட்டி போட்டுக் கொள்ளும் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ். இப்படி ஒரு சூழ்நிலையில் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் இயக்குனர் ஆனந் ஆடியிருக்கும் காமெடி ஆட்டமே ‘இந்தியா பாகிஸ்தான்’.

படம் பற்றிய அலசல்

நான், சலீம் என கதையின் கேரக்டருக்காக களமிறங்கிய விஜய் ஆண்டனி, இந்தமுறை தன்னை ஒரு ஹீரோவாக முன்னிறுத்தி படத்தின் கதையை உருவாக்கச் சொல்லியிருப்பார் எனத் தோன்றுகிறது. காமெடிப் படங்களுக்கென்ற ‘டெம்ப்ளேட்’டாக கொட்டிக் கிடக்கும் கதை ஒன்றை கையிலெடுத்து, வழக்கம்போல் லாஜிக்கை மறந்துவிட்டு, கொஞ்சம் ரொமான்ஸ், இடையிடையே பாட்டு, படம் முழுக்க காமெடி என மசாலா பொங்கல் கிண்டியிருக்கிறார்கள்.

ஒரு த்ரில்லர் படம்போல ஆரம்பிக்கும் இப்படம் அடுத்த காட்சியில் ரொமான்ஸ் படமாக பாதை மாறுகிறது. பின்னர் அடுத்த சில காட்சியிலேயே காமெடிப் படமாக டிராக் மாறுகிறது. இப்படி படம் முழுக்க மாறி மாறி காட்சிகள் வருவதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு காமெடிக்கென இருக்கும் பழைய ஃபார்முலாக்களை படம் முழுக்க நிரப்பித் தள்ளியிருக்கிறார்கள். அதில் ஒரு சில இடங்களில் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் படுத்தியும் எடுக்கிறார்கள். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் படு அபத்தமாக இருந்தாலும் தியேட்டரில் ரசிகர்கள் ‘நான் ஸ்டாப்’பாக சிரிக்கிறார்கள்.

இதுபோன்ற காமெடிப் படத்திற்குள் எதற்கு சுவாரஸ்யமே இல்லாத இத்தனை பாட்டுக்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். அதேபோல் ஒன்றுமேயில்லாத கதைக்கு எதுக்கு இவ்வளவு நீளம் என்பதும் புரியவில்லை. பாடலும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். ஒளிப்பதிவு ஓகே!

நடிகர்களின் பங்களிப்பு

தனது முதல் இரண்டு படங்களிலும் ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளிய விஜய் ஆண்டனிக்கு இப்படம் ஒரு சிறிய சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். ரொமான்ஸ், நாயகியுடன் டூயட், காமெடி டிராக் என தன்னை ஒரு மசாலா ஹீரோவாக அவர் முன்னிறுத்தியதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். நடிப்பு விஷயத்தில் அவரின் மெச்சூரிட்டி கூடியிருக்கிறது. அறிமுக நாயகி சுஷ்மா ராஜுக்கு முதல் படம் என்ற அளவில் படம் முழுக்க வரும்படியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதை சரிவரச் செய்திருக்கிறார். பசுபதி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், நண்டு ஜெகன், காளி வெங்கட் என காமெடிக்கென ஒரு பெரிய பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார்கள். அவரவர் கிடைத்த காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இப்படத்தில் ‘நண்டு’ ஜெகனுக்கு நீண்டநாள் கழித்து முழுநீள காமெடியன் கேரக்டர் கிடைத்திருக்கிறது. முடிந்தளவு சிரிக்க வைத்திருக்கிறார். வில்லனாக வரும் போலீஸையும் கடைசியில் காமெடியனாக்கியிருப்பது ஷ்ஷ்..... முடியல!

பலம்

1. ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ஒன்றிரண்டு காமெடி காட்சிகள்
2. லாஜிக்கே இல்லாவிட்டாலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. டெம்ப்ளேட் கதையும், திரைக்கதையும்
2. சுவாரஸ்யமில்லாத பாடல்கள்
3. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

பி,சி சென்டர்களில் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இப்படத்தின் வெற்றி எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரிய வரும். ஆனால், விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை ரசிகர்கள் அவரிடம் நிச்சயமாக இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த ஏமாற்றத்தை அடுத்த படத்தில் சரி செய்வார் என நம்புவோம். இந்தியா பாகிஸ்தானில் விஜய் ஆண்டனியின் முந்தைய ஆட்டம் மிஸ்ஸிங்!

ஒரு வரி பஞ்ச் : சீரியஸ் தலைப்பில் ‘இழுவை’யான சிரிப்பு படம்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;