வை ராஜா வை - விமர்சனம்

நாட்டமில்லாத ஆட்டம்!

விமர்சனம் 1-May-2015 12:03 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Aishwarya R. Dhanush
Production : AGS Entertainment
Starring : Gautham Karthik, Priya Anand, Taapsee, Daniel Balaji, Vivekh, Sathish
Music : Yuvan Shankar Raja
Cinematography : Velraj

‘3’ படத்தைத் தொடர்ந்து தனது 2வது படமாக ‘வை ராஜா வை’ படத்தை களமிறக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். கடல், என்னமோ ஏதோ என தனது முதல் 2 படங்களுமே சறுக்கிய நிலையில், ‘வை ராஜா வை’ தன்னை நிச்சயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கௌதம் கார்த்திக்...! கை கொடுத்திருக்கிறதா?

கதைக்களம்
அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் ஹீரோ கௌதம் கார்த்திக். அந்த சக்தியே அவருக்கு சிறுவயதில் ஒரு சில பிரச்சனைகளை உருவாக்க, அதை எங்கேயும் பயன்படுத்தக்கூடாது, யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி சொல்லக்கூடாது என முடிவு செய்கிறார். அதை தன் காதலி ப்ரியா ஆன்ந்திடம் கூட சொல்லாமல் ரகசியம் காக்கிறார் கௌதம். இந்நிலையில்... இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் தன்னுடைய அந்த சக்தியைப் பயன்படுத்தி தன்னுடன் வேலை பார்க்கும் விவேக்கை ஆபிஸ் பிரச்சனையிலிருந்து மீட்கிறார் கௌதம் கார்த்திக். இதனால் விவேக்கிற்கு கௌதமிடமிருக்கும் ‘இஎஸ்பி’ பவர் தெரிந்து போகிறது. அந்த பவரைப் பயன்படுத்தி நிறைய சம்பாதிப்பதற்காக விவேக் திட்டம் ஒன்றைப் போடுகிறார். அது கௌதம் கார்த்திக்கின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. அது என்ன திட்டம்? என்ன ஆபத்து என்பது வெள்ளித்திரையில்!

படம் பற்றிய அலசல்
ஹாலிவுட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘21‘ என்ற படத்தின் தழுவல்தான் இந்த ‘வை ராஜா வை’ என சில நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்தின் கதைக்கும் ‘வை ராஜா வை’ படத்தின் கதைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், படத்தின் ஒரு கேசினோ சம்பந்தப்பட்ட காட்சி மட்டும் ‘21‘ படத்தின் பாதிப்பில் உருவாக்கியிருக்கிறார்கள் அவ்வளவே.

2 மணி நேரத்திற்கும் குறைவாக ஓடும் இப்படத்தின் முதல்பாதி காதல், காமெடி, பாடல் என வழக்கமாக பயணிக்கிறது. இடைவேளைக்கு முன்பு கௌதமின் ஈஎஸ்பி பவரை வைத்து விவேக் ஆடும் சூதாட்டம் ஒன்றில் படம் சூடுபிடிக்க, இரண்டாம்பாதியில் நிச்சயம் சுவாரஸ்யங்கள் குவிந்து கிடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தால், ஒரே ஒரு கேசினோவிற்குள்ளேயே படம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிலும் லாஜிக் என்ற வஸ்துவை மருந்துக்கூட யோசிக்கவில்லை ஐஸ்வர்யா தனுஷ். படத்தை எப்படி முடிப்பது எனத் தெரியாமல் ‘கொக்கி குமாராக’ தனுஷை வரவழைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பாடல்களை இடையில் சேர்த்திருப்பதாலோ என்னவோ பெரிதாக கவனம் பெறவில்லை. ‘பச்சை வண்ணப் பூவே...’ பாடலில் ஒளிப்பதிவு கொள்ளை அழகு!

நடிகர்களின் பங்களிப்பு
அழகாக, துறுதுறுவென இருக்கிறார் கௌதம். ஆனாலும், 3 படங்களாக அவரின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கேரக்டர் அமையாதது சோகமே. வரும் படத்தில் அந்தக் குறை தீரும் என நம்புவோம். ப்ரியா ஆன்ந்த், டாப்ஸி இருவரும் கிளாமருக்காக களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். கொடுத்த வேலையில் ‘தாராளம்’ காட்டியிருக்கிறார்கள். சதீஷ் ஒன்றிரண்டு இடங்களிலும், விவேக் பல இடங்களிலும் சிரிக்க வைத்திருக்கிறார். வில்லன் டேனியல் பாலாஜியின் அறிமுக காட்சியில் பெரிய அப்ளாஸ் கிடைத்தது. ஆனாலும் அவரின் கேரக்டரில் எந்தவித பரபரப்பும் இல்லை. ஒரு காட்சியில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.

பலம்
1. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், வேல்ராஜின் ஒளிப்பதிவும்
2. விவேக்கின் காமெடி காட்சிகள்

பலவீனம்
1. அழுத்தமில்லாத கதையும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும்.
2. நம்பகத்தன்மையில்லாத காட்சி அமைப்புகள்.
3. கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்...
வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ‘3’ படத்தில் ஐஸ்வர்யா தனுஷின் இயக்கம் கவனத்தை ஈர்த்தது. அதிலிருந்த மெச்சூரிட்டியும், காட்சிப்படுத்தலும் இந்த ‘வை ராஜா வை’யில் ரொம்பவே குறைவு. ஒன்றுமேயில்லாத விஷயத்தை 2 மணி நேரத்திற்கு இழுத்தடித்திருக்கிறார்கள்.

ஒரு வரி பஞ்ச் : நாட்டமில்லாத ஆட்டம்!

ரேட்டிங் : 3/10

(Vai Raja Vai movie review, Vai Raja Vai tamil review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;