‘உத்தம வில்லனை’ பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘உத்தம வில்லனை’ பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

கட்டுரை 27-Apr-2015 4:25 PM IST Chandru கருத்துக்கள்

திருப்பதி பிரதர்ஸின் பிரம்மாண்டத் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள் எவை எனப் பார்க்கலாம்...

1. உத்தம வில்லனைப் பார்க்கத் தூண்டுவதற்கு முதல் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும். அது நிச்சயம் ‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் அவதாரங்களைக் கண்டு வியப்பதைத் தவிர..! உத்தமன், மனோரஞ்சன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் கமல், வித்தியாசமான பல கெட்அப்களில் இப்படத்தில் தோன்றியிருக்கிறார். அதோடு முதல்முறையாக ‘தெய்யம்’ என்ற கேரளாவின் பண்டைய கலைஞரைப் போல தோன்றியிருக்கிறார் கமல். இந்த கேரக்டரின் மேக்அப்பிற்காக மட்டுமே ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிற்கு முன்னரும் 5 மணி நேரம் செலவழித்திருக்கிறார் கமல். சமீபத்தில் இப்படம் கமலின் நெருங்கிய வட்டாரங்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாம். அதைப் பார்த்து பலரும் வியந்து போனார்களாம். குறிப்பாக கமலின் நடனத்தைப் பார்த்து அதிசயித்திருக்கிறார்கள்.

2. இரண்டாவது காரணம் திருப்பதி பிரதர்ஸின் தாராளமயமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகியிருப்பது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இப்படத்திற்காக புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள், ஆர்ட் டைரக்ஷன், லொக்கேஷன்கள் என ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப்படத்தை எடுக்கும் பொருட்டு கமலின் கதையை திரையில் கொண்டுவர பெரிய அளவில் செலவு செய்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். அதோடு படத்தைப் பற்றி குக்கிராமங்களிலிருப்பவர்களுக்கும் தெரிய வைக்கும் வண்ணம் பரவலான விளம்பரங்களைச் செய்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

3. ‘விஸ்வரூபம் 2’ படத்திலேயே கமலுடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏற்கெனவே கைகோர்த்திருந்தாலும் கமல் & ஜிப்ரான் கூட்டணியில் வெளிவந்திருக்கும் முதல் ஆல்பம் ‘உத்தம வில்லன்’தான். இப்படத்தின் பாடல்களைப் பாராட்டாத பிரபலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கின்றன. அதோடு எஃப்.எம்.களிலும் தொடர்ந்து ஒலிக்கும் பாடல்களின் பட்டியலில் ‘உத்தம வில்லன்’ ஆல்பத்திற்கும் முக்கிய இடமுண்டு. காட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஜிப்ரானின் பின்னணி இசை பெரிய அளவில் கைகொடுத்திருப்பதாக உத்தம வில்லனைப் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

4. படத்தில் பங்காற்றியிருக்கும் நட்சத்திரப் பட்டியலும் இப்படத்தைப் பார்க்கத்தூண்டும் காரணங்களில் முக்கியமானவை. குறிப்பாக கமலின் குருவான கே.பாலசந்தர் நடித்திருக்கும் கடைசி படம் ‘உத்தமவில்லன்’ என்பது நெகிழ்ச்சியான விஷயமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இன்னொரு பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்தும் இப்படத்தில் நடித்திருக்கிறார். நாயகிகளாக ஆன்ட்ரியா, பூஜாகுமார் நடித்திருக்க, கமலின் மகளாக ‘மரியான்’ பார்வதி நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர கமலின் மனைவியாக ஊர்வசியும், கமலின் பி.ஏ.வாக எம்.எஸ்.பாஸ்கரும், வித்தியாசமான வேடமொன்றில் நாசரும், சஸ்பென்ஸ் கேரக்டர் ஒன்றில் ஜெயராமும் நடித்திருக்கிறார்கள்.

5. ‘உத்தம வில்லன்’ டீஸர், டிரைலர் ஆகியவற்றிற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக்கியிருக்கிறது. ‘உத்தம வில்லன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வந்தபோதே இப்படம் வித்தியாசமாக ஏதோ ஒன்றை ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அது படத்தின் டிரைலர் வெளியானபோது பன்மடங்கானது. தற்போது இரண்டாவது டிரைலரும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. குறிப்பாக கமல் தெய்யம் கலைஞராக வரும் காட்சிகள் இந்திய சினிமாவிற்கே சவால்விடும் வகையில் படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்பதை இதுவரை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் கமல்ஹாசன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;