அவெஞ்சர்ஸ் 2 : ஏஜ் ஆஃப் அல்ட்ரான் - விமர்சனம்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்!

விமர்சனம் 27-Apr-2015 12:44 PM IST Top 10 கருத்துக்கள்

ஒரேயொரு சூப்பர் ஹீரோ நடித்த ஹாலிவுட் படமென்றாலே, அப்படத்திற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களும் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தால் அப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு உலகம் முழுக்க கிடைக்கும் என்பதற்கு 2012ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்’ படமே சிறந்த உதாரணம். உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் அவதார், டைட்டானிக் படத்தைத் தொடர்ந்து ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படமே 3வது இடத்தில் இருக்கிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இப்படத்தின் 2ம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் படத்தைப்போலவே இப்படமும் சாதித்திருக்கிறதா?

அயன்மேன் (ராபர்ட் டௌனி), தோர் (க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்), ஹல்க் (மார்க் ருஃபெல்லோ), கேப்டன் அமெரிக்கா (க்ரிஸ் இவான்ஸ்), பிளாக் விடோ (ஸ்கேர்லெட் ஜோஹன்ஸன்), ஹாக் ஐ (ஜெரேமை ரென்னர்), வார் மெஷின் (டான் சீடில்) என முக்கிய சூப்பர் ஹீரோக்களைக் கொண்ட குழுவுக்கே ‘அவெஞ்சர்ஸ்’ எனப் பெயர். தீய சக்திகளால் உலகிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதே இந்த அவெஞ்சர்ஸின் தலையாய கடமை. வழக்கமாக ஒரேயொரு சூப்பர் ஹீரோ எதிரியைப் பந்தாடி உலகத்தைக் காப்பார். இந்த அவெஞ்சர்ஸில் பல சூப்பர்ஹீரோக்கள் இணைந்து வில்லனைப் பந்தாடுவார்கள்... இவ்வளவுதான் வித்தியாசம்! ஆனால், ஒரு சூப்பர்ஹீரோவை எதிர்க்கும் வில்லனே எத்தனை பவுர்ஃபுல்லாக இருப்பான். அப்படியென்றால் இத்தனை சூப்பர் ஹீரோக்களை எதிர்த்து நின்று விளையாடும் வில்லன் எத்தனை அசகாய சூரனாக இருக்க வேண்டும். இந்த ‘அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ படத்தில் வில்லனாக இருப்பது அல்ட்ரான் எனப்படும் ஒரு ரோபோ குழுதான்.

சொல்லப்போனால் இந்த அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு எதிராய் திரும்புவதே இப்படத்தின் கதை. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. அல்ட்ரானின் இந்த விபரீத முயற்சியை அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

தமிழ்ப்படத்திற்குக்கூட இதற்கு முன்பு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி தியேட்டரில் ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம்மூரில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என இத்தனை ஹீரோக்களும் ஒரே படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். அதைப்போன்றதொரு வரவேற்பு இந்த அவெஞ்சர்ஸின் 2ம் பாகத்திற்கு கிடைத்திருக்கிறது.

அல்ட்ரானை மனிதர்களுக்கு எதிராய் திருப்பும் குழுவில் குவிக் சில்வர் (ஆரோன் டெய்லர்), ஸ்கேர்லெட் விட்ச் (எலிசபெத் ஒல்சென்) என இரண்டு சிறப்பு சக்தி வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களது திட்டப்படி முதலில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டால் மனிதர்களை எளிதில் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இதனால் ஸ்கேர்லெட் விட்ச் தனது சக்தியின் மூலம் ஹல்க்கின் மூளையை தன் வசப்படுத்தி சிட்டியை அழிக்க அனுப்புகிறாள். மூர்க்க குணத்துடன் ஹல்க் தனது அசுரத் தாக்குதலை நகர மக்கள் மீது தொடுக்க, அதனை அயன்மேன் தன் கவச மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்தும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

இத்தனை சூப்பர் ஹீரோக்களை வைத்துக் கொண்டு ஒரு படத்தை எடுக்க வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் சமமான காட்சிகளை எப்படி திரையில் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இப்படம் சரியான உதாரணம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இந்த சூப்பர் ஹீரோக்கள் இணைந்து எதிரிகளைப் பந்தாடும்போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாமல் சின்னச்சின்ன காமெடிகளையும் சூப்பர் ஹீரோக்கள் செய்வது படத்திற்கு கூடுதல் பலம்.

தொழில்நுட்ப ரீதியில் ஹாலிவுட் படங்கள் எத்தனை உயரத்திலிருக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிட்டியையே பூமியோடு பெயர்த்தெடுத்து அந்தரத்தில் அல்டரான் ரோபோக்கள் தூக்கிச் செல்லும் காட்சி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது. அதுவும் 3டியில் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியும் நம் கண்ணெதிரே நடப்பதுபோல் அவ்வளவு துல்லியம். இப்படத்தின் டெக்னீஷியன்களுக்கு நிச்சயம் ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்!

மொத்தத்தில் இந்த அவெஞ்சர்ஸிற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது வசூலில் இப்படமும் பல சாதனைகளைப் புரியும் என்பது நிச்சயம். வழக்கமான கதைதான் என்றாலும், நம்மால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத விஷயங்களை இந்த அவெஞ்சர்ஸ் 2ம் பாகம் செய்திருப்பதால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்!

(ஸ்டேன் லீயுடன் தான் இணைந்து எழுதிய காமிக்ஸ் புத்தகத்தையே ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படமாக இயக்கியிருக்கிறார் ஜாஸ் வெடோன். மார்வெல் ஸ்டுடியோஸ் இப்படத்தை 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;