சூர்யாவின் ‘மாஸ்’ : டிரைலர் விமர்சனம்

சூர்யாவின் ‘மாஸ்’ : டிரைலர் விமர்சனம்

கட்டுரை 25-Apr-2015 11:24 AM IST Chandru கருத்துக்கள்

முதல்முறையாக வித்தியாசமான ஹாரர் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே, அப்படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எக்கச்சக்கமாய் எகிறியது. அதிலும் ஜாலி இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா என்பது இன்னுமொரு ஆச்சரிய கூட்டணி. அதோடு படத்திற்கு ‘மாஸ்’ என வித்தியாச டைட்டிலையும் பிடித்து அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கினார் வெங்கட். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு. இதோ... இப்போது டீஸரும் வெளிவந்துவிட்டது. டீஸர் உண்மையிலேயே மாஸா...?

வழக்கமாக ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் கதைக்களத்தைப் பற்றியோ, படத்தின் முக்கிய கேரக்டர்கள் குறித்தோ எதையும் பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் ‘மாஸ்’ டீஸரைப் பொறுத்தவரை இதுதான் கதை என்பதை தெளிவாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு. இது ஒரு ஹாரர் படமாக இருந்தாலும், வழக்கமான ஹாரர் படம் இல்லை என்பதையும் இந்த டீஸரில் புரிந்துகொள்ள முடிகிறது. அதோடு ‘‘எதிர்பார்க்கலைல.... நான் திரும்ப வருவேன்னு எதிர்பார்க்கலைல... அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலைல...’’ என சூர்யா சிங்கம் டயலாக்கோடு அறிமுகமாவார் என அவரின் ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதோடு ‘மங்காத்தா’ அஜித்தின் டயலாக்கையும் பயன்படுத்தியிருப்பது கூடுதல் சர்ப்ரைஸ்!

வருடங்கள் ஓடிக்கொண்டேயிருந்தாலும் சூர்யாவுக்கு மட்டும் வயதாகிறதா இல்லையா என்ற சந்தேகம் ‘மாஸி’லும் தொடர்கிறது. என்ன ஒரு எனர்ஜி, என்ன ஒரு லுக்... அதிலும் அந்த முறுக்கு மீசையுடன் அவரைப் பார்க்கும்போது ‘காக்க காக்க’ அன்புச்செல்வனையே மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சூர்யா. அவரின் டெடிகேஷனுக்கு ஒரு ராயல் சல்யூட்! இப்படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் பேயாட்டம் போடப்போகிறார் என்பதை நினைத்தாலே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பன்மடங்காகிறது.

சுடிதார் நயன்தாரா, ஹோம்லி ப்ரணிதா, ரிப்போர்ட்டர் ரம்யா, வித்தியாச கெட்அப்பில் சமுத்திரக்கனி, ரணகள போலீஸாக பார்த்திபன், இவர்களுடன் பிரேம்ஜி என படத்தின் கேரக்டர்கள் அனைத்துமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும்விட இப்படம் டெக்னிக்கலாக பெரிய வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், சிஜி, மேக்அப், சண்டைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் பெரிய உழைப்பைக் கொட்டியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

‘ஏ ஃபிலிம்..’, ‘ஏ மூவி’, ‘ஏ ஹாலிடே’, ‘ஏ கேம்’, ‘ஏ டயட்’ வரிசையில் ‘மாஸ்’ படத்திற்காக வெங்கட் கொடுத்திருக்கும் டேக் லைன் ‘ஏ வெங்கட்பிரபு சிக்ஸர்’. உண்மையிலேயே இந்த டீஸர் சிக்ஸர்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;