அவதார் சாதனையை முறியடித்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்!

அவதார் சாதனையை முறியடித்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்!

செய்திகள் 20-Apr-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

மறைந்த நடிகர் பால் வாக்கர் நடிப்பில் உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் ஆங்கிலத் திரைப்படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. வின் டீசல், டிவைன் ஜான்சன், ஜேஸன் ஸ்டேத்தம், மிச்செல்லி ரோட்ரிகீஸ், டோனி ஜா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இப்படம் ஒரு நாள் முன்கூட்டி ஏப்ரல் 2ஆம் தேதியே வெளியிடப்பட்டது. முந்தைய பாகங்களின் வெற்றி, பால் வாக்கரின் திடீர் மறைவு, ஜேஸன் ஸ்டேத்தம், டோனி ஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் புதிதாக இப்படத்தில் இணைந்தது என இந்த 7ஆம் பாகத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

இப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகமெங்கும் 67 மில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 420 கோடி ரூபாய்) வசூலித்தது. அதோடு முதல் 3 நாட்களில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் 17 நாட்களில் மட்டுமே 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக 6250 கோடி ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு அவதார் திரைப்படம் 19 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. அதை இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் முறியடித்திருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த வசூலில் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் டாலர்களை (17500 கோடி ரூபாய்) வசூல் செய்து அவதார் படமே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த உலக வசூலில் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் 7வது இடத்தில் இருக்கிறது. அவெஞ்சர்ஸின் வசூலை முறியடித்து இப்படம் 3ம் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இடத்தைப் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;