ஓ காதல் கண்மணி – விமர்சனம்

அடுத்த தலைமுறை காதல்!

விமர்சனம் 17-Apr-2015 3:22 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Mani Rathnam
Production : Madras Talkies
Starring : Dulquer Salmaan, Nithya Menon, Prakash Raj, Leela samsan
Music : AR Rahman
Editor : Sreekar Prasad
Camera : PC Sreeram

குறுகிய காலத்திற்குள் மணிரத்னம் இயக்கி, தயாரித்து பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’.

கதைக்களம்

வீடியோ கேம் கிரியேட்டராக வேலை செய்யும் துல்கர் சல்மான் ஒரு ஜாலி பேர்வழி! வேலை நிமித்தமாக மும்பைக்கு வரும் துல்கர் சல்மான், மும்பை இரயில் நிலையத்தில் இறங்கியதும் எதிர்பாரதவிதமாக நித்யா மேனனை சந்திக்கிறார். மீண்டும் இருவரும் எதிர்பாராமல் ஒரு திருமணத்தில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நட்பு மலர்கிறது. அதன் பிறகு அடிக்கடி சந்திக்கும் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகிறது. பெற்றோர் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாத நித்யா மேனனின் எண்ணமும், துல்கர் சல்மானின் எண்ணமும் ஒத்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வாழ ஆரம்பித்து, படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்! இவர்களது மறைமுக திருமண வாழ்க்கை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததா? இல்லை இருவரது விருப்பம் போல அவர்களது மறைமுக வாழ்க்கை தொடர்ந்ததா? என்பதற்கு சுவாரஸ்மான கிளைமேக்ஸுடன் விடை அளிக்கிறது ‘ஓ காதல் கண்மணி’

படம் பற்றிய அலசல்

வெளிநாடுகளில் இருக்கும் ‘லிவிங் டுகெதர்’ என்ற வாழ்க்கை முறையை இப்போது நம் இந்திய மக்களும் பின் பற்றி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விஷயத்தை தான் மணிரத்னம் இந்த படத்தில் இரண்டே கால் மணி நேர திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார். அதை மும்பை பின்னணியில் இளம் உள்ளங்களின் மனங்களை கிறங்கடிக்க வைக்கும் காட்சி அமைப்புக்களுடனும், பாடல்களுடனும் தனக்கே உரிய முத்திரையுடன் படம் பார்ப்போரை போரடிக்க வைக்காமல் படமாக்கியுள்ளார். அவரது எண்ணங்களுக்கு ஈடாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் செய்லபட்டிருக்கிறார்கள். துல்கர் சல்மான், நித்யா மேனன் மறைமுக வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்ததும், சூடு பிடிக்கும் திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும், இறுதி முடிவும் வரவேற்கத்தக்கது.

நடிகர்களின் பங்களிப்பு

துல்கர் சல்மான், நித்யா மேனன் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய நவநாகரீக இளம் தலைமுறையினரை அப்படியே பிரதிபலித்திருக்கும் இருவரும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷன்ஸ்-களையும் அவ்வளவு அழகாய் பிரதிபலித்திருக்கிறார்கள்! அதிலும் நித்யா மேனனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல! அப்படியொரு அழகு, பெர்ஃபார்மென்ஸ்! துல்கருக்கு மும்பையில் வசிக்க இடம் கொடுக்கும் குடும்ப நண்பராக வரும் பிரகாஷ் ராஜ், அவரது மனைவியாக வரும் லீலா சாம்சன் ஆகியோரும் யதார்த்தமான நடிப்பில் மட்டுமல்லாமல் காதலர்களுக்கு நம்பிக்கையூட்டும் தம்பதியராகவும் வலம் வருகிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார் கனிஹா!

பலம்

1. படத்தின் விறுவிறுப்பான கடைசி 20 நிமிடங்கள்.
2. பி.சி.ஸ்ரீரமின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும்
3. கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு, கதையோடு ஒட்டி வரும் யதார்த்தமான் காமெடி வசனங்கள்.

பலவீனம்

1.முதல் பத்து நிமிடங்களை தவிர்த்த முதல் பாதி.
2. ஒரு சில காட்சிகள் திரும்ப திரும்ப வருவதை போன்ற உணர்வு ஏற்படுவது.

மொத்தத்தில்

‘அலைபாயுதே’ பட பாணியில் மணிரத்னத்திடமிருந்து தரமான ஒரு காதல் கதையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இப்படம் ‘ஓகே’வாக இருக்கும்! இந்த ‘கண்மணி’க்கு இளம் கண்மணிகளின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

ஒருவரி பஞ்ச் : அடுத்த தலைமுறை காதல்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;