‘‘மை நேம இஸ் காக்கா முட்டை’’ - டிரைலர் விமர்சனம்

‘‘மை நேம இஸ் காக்கா முட்டை’’ - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 16-Apr-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘எதிர்நீச்சல்’ போன்ற கமர்ஷியல் படங்களைத் தயாரித்து வெற்றிபெற்ற நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ முதல்முறையாக வணிக விஷயங்களையும் தாண்டி நல்ல படைப்புக்காக களம் கொடுத்திருக்கிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம்ஸ்’ ஆகியவற்றுடன் இணைந்து தனுஷ் தயாரித்திருக்கும் படம்தான் ‘காக்கா முட்டை’. படம் வெளிவருவதற்கு முன்பே டொரன்டோ, ரோம், துபாய், பிரிஸ்போன் ஏசியா பசிபிக் என சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு உலகத்தமிழர்களின் விழிகளை விரிய வைத்திருக்கிறது இந்த சின்னஞ்சிறு ‘காக்கா முட்டை’. அதன் புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாய் 62வது இந்திய தேசிய விருதுகள் இரண்டையும் வென்று சாதித்திருக்கிறது இப்படம்.

திரைக்கு வரும் முன்பே எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘காக்கா முட்டை’யின் டிரைலர் இப்போது வெளிவந்திருக்கிறது. ‘பசங்க’ளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ‘காக்கா முட்டை’க்கும் முந்தைய குழந்தைகள் படத்திற்கும் நிச்சயம் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பது இந்த டிரைலரைப் பார்க்கும்போதே தெளிவாகிறது. ‘‘மை நேம் இஸ் காக்கா முட்டை... நான் சின்ன காக்க முட்டை, அவன் பெரிய காக்கா முட்டை’’ என படத்தின் ஹீரோக்களான இரண்டு பையன்கள் அறிமுகமாகும்போது நம் மனதில் ‘பசக்’ என ஒட்டிக் கொள்கிறார்கள்.

யதார்த்தமான வசனங்கள், இயற்கையான படப்பிடிப்புத் தளங்கள், தெளிவான ஒளிப்பதிவு, பிசிறு தட்டாத பின்னணி இசை என இப்படம் எப்படியிருக்கும் என்பதற்கு இந்த சின்ன டிரைலரே சான்று. விருது விழாக்களில் கலந்து கொண்டிருப்பதாலும், விருதுகளை வென்றிருப்பதாலும் இப்படத்தில் சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இருக்காது என ரசிகர்கள் எண்ணத் தேவையில்லை.

‘காக்க முட்டை’ குடித்து மட்டுமே சந்தோஷம் கொள்ளும் இரண்டு சிறுவர்கள், பீட்சா சாப்பிட ஆசைப்பட்டால் என்ன செய்வார்கள் என்பதையே சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.மணிகண்டன். இந்த ஒற்றை வரிக்கதைக்குள் சில திடுக்கிடும் சம்பவங்களையும் சேர்த்து அவர் படமாக்கியிருப்பார் என்பது டிரைலரின் சில காட்சிகள் நமக்குள் விளக்குகின்றன. விருதுப்படம் என்பதையும் தாண்டி இப்படத்தின் விஷுவல்கள் படத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன.

மே மாதம் திரைக்கும் வரவிருக்கும் ‘காக்கா முட்டை’ தமிழ் சினிமாவின் சில புதிய கதவுகளை திறந்து வைக்கும் என நம்புவோம்!

(இப்படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை படத்தின் சாட்டிலைட் உரிமையில் மட்டுமே சம்பாதித்துவிட்டதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். இதற்கு திரையியிடலின் மூலம் 1 ரூபாய் கிடைத்தால்கூட இப்படத்தை நான் ‘சூப்பர் ஹிட்’ என அறிவிப்பேன் என்றும் தனுஷ் கூறியிருக்கிறாராம்.)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;