சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - விமர்சனம்

வரவேற்போம்!

விமர்சனம் 10-Apr-2015 4:54 PM IST Top 10 கருத்துக்கள்

Director & Producer : M.Maruthupandian
Starring : Bobby Simha, Linga, Prabanjayan, Saranya, Panimalar, Nisha
Music : Camlin - Raja
Cinematography : Vinoth Rathnasamy
Editing : Kiran.K.N.

இளைஞர்கள் சிலர் இணைந்து உருவாக்கி வெளிவந்திருக்கும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

கதைக்களம்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்சென்னைக்கு வருகிறார்கள்பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகிய மூவரும். வந்த இடத்தில் நிரந்தரமாக தங்க ஒரு இடம் கிடைக்காமல் அல்லல்படுவது, சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சக அறை நண்பர்களால் ஒவ்வொருத்தருக்கும் ஏற்படும் பிரச்சனைகள்... இப்படி இந்த மூன்று இளைஞர்களின் பேச்சுலர் வாழ்க்கையே ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம்!

படம் பற்றிய அலசல்

சென்னையில் பேச்சுலர்களுக்கு வீடு கிடைப்பது அரிதான விஷயம்... அதிலும் சினிமாகாரர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம்! அந்த பிரச்சனையைத்தான் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன் கையில் எடுத்திருக்கிறார். அதை யதார்த்தமாக சொல்ல முற்பட்டுள்ள இயக்குனர் அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அடிக்கடி சரக்கு அடிப்பது, அதனால் வரும் பிரச்சனைகள், அறை நண்பர் ஒருவர் ஒரு இளம் பெண்ணை அறைக்கு அழைத்து வந்து அவளை கர்ப்பமாக்குவது... இதனால் ஏற்படும் பிரச்சனைகள்... ஏமாற்றப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மற்ற அறை நண்பர்கள் உதவுவது... இப்படி பயணிக்கிறது படத்தின் திரைக்கதை! யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ள இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் ஒரு சுவாரஸ்யமான படத்தைப் பார்த்த திருப்தி எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்! படத்தின் தன்மைக்கேற்ற சிறந்த ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் வினோத் ரத்னசாமி. பாடல்கள், பின்னணி இசை போன்றவற்றிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் அறையில் உட்காந்து கதை எழுதும் பாபி சிம்ஹா, சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் மனநிலையை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தனது அறைக்குள் போக முடியாமல் ஈர சட்டையுடன் மாடிப்படி அருகிலேயே அமர்ந்தபடி துங்குவதும், வீட்டு உரிமையாளரை பார்த்ததும் திடுக்கிட்டு விழிப்பதுமான அந்த ஒரு காட்சி எல்லோரையும் நெகிழ வைக்கும்! பாபி சிம்ஹாவின் சக அறை நண்பர்களாக வரும் லிங்கா, பிரபஞ்ஜெயன், ஏமாற்றப்படும் பெண்ணாக வரும் சரண்யா, வீட்டு உரிமையாளராக வரும் பனிமலர், மூன்று நான்கு பேருக்கு காதலியாக வரும் நிஷா... என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் தங்களது கேரக்டர்களுடன் ஒன்றி பயணித்துள்ளனர். இவர்களுடன் குடிக்கார கணவராக வந்து மனைவியிடம் விளக்குமாறால் அடிவாங்கும் இயக்குனர் மருதுபாண்டியனின் இயல்பான நடிப்பும், வசன உச்சரிப்பும் மறக்க முடியாது!

பலம்

1. சொல்லவந்த கதையை கமர்ஷியல் சமரசமின்றி கொடுத்திருப்பது.
2. கதைக்களத்திற்கேற்ற ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.
3. கதையோடு பயணிக்கும் காமெடி காட்சிகளும், திருப்பங்களும்!

பலவீனம்

1. இடைவேளை வரை ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை.
2. அடிக்கடி வரும் மதுபான காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள்

மொத்தத்தில்...

பொழுதுபோக்கு ரசிகர்களை இப்படம் கவராவிட்டாலும், யதார்த்த படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இந்த ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’.

ஒரு வரி பஞ்ச் : வரவேற்போம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;