ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7 - விமர்சனம்

சுவாரஸ்யத்திற்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வைக்கவில்லை!

விமர்சனம் 8-Apr-2015 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

உலகமே எதிர்பார்க்கும் தொடர்வரிசைப் படங்களில் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ சீரிஸிற்கும் முக்கிய இடமுண்டு. ஏற்கெனவே 6 பாகங்கள் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 7ஆம் பாகம் தற்போது ரிலீஸாகியிருக்கிறது. ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரிஸின் பிரதான நாயகர்களில் ஒருவரான பால் வாக்கரின் அதிர்ச்சியூட்டிய மரணமும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியதற்கு இன்னொரு முக்கிய காரணம். வெளியான நான்கு நாட்களில், இந்தியாவில் மட்டுமே இப்படம் 45 கோடிகளைக் குவித்திருப்பதாக கூறப்படுகிறது. உலகநாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?

கார் ஓட்டுவதில் வல்லவர்களான டொமினிக் (வின் டீசல்), பிரையன் (பால் வாக்கர்), லெட்டி (மிச்செல் ரோட்ரிகீஸ்), ரோமன் (டைரஸ் கிப்ஸன்), தேஜ் (லுடாகிரிஸ்) ஆகிய ஐவர் கூட்டணிதான் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். இவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி தங்களால் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்துக் கொள்கிறார் அமெரிக்க போலீஸ் அதிகாரியான ஹாப்ஸ் (டிவைன் ஜான்சன்). இந்த 7ஆம் பாகத்திலும் அப்படி ஒரு வேலையை டொமினிக் டீம் வசம் ஒப்படைக்கிறார் ஹாப்ஸ்.

உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் 2 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறார் ராம்ஸி (நதாலி இமானுவேல்). அந்த கருவியைக் கைப்பற்றுவதற்காக தீவிரவாதி ஒருவன் ராம்ஸியை கடத்திச் செல்கிறான். ராம்ஸியையும், அவள் கண்டுபிடித்த அதிநவீன கருவியையும் மீட்டு வருவதே இந்த 7ஆம் பாகத்தில் டொமினிக் டீமின் பணி. அதேநேரம், கடந்த 6ஆம் பாகத்தில் தன் அண்ணனை சாகடித்த இந்த ஐவர் கூட்டணியைப் பழிவாங்குவதற்காக இந்த 7ஆம் பாகத்தில் களமிறங்குகிறார் தம்பி டெக்கர்டு ஷா (ஜேசன் ஸ்டேத்தம்). இந்த இக்கட்டான சூழலிலிருந்து தங்களது பணிகளை டொமினிக் அன்ட் கோ வெற்றிகரமாக எப்படி சாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதைக்களம்.

காலம் காலமாக ஆக்ஷன் படங்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும் டெம்ப்ளேட் கதையைத்தான் பரபரப்பான திரைக்கதையாக மாற்றி இயக்கியிருக்கிறார் ஜேம்ஸ் வான். ஆனால் அதை காட்சிப்படுத்திவிதத்தில்தான் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள் முக்கியமானவர்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் சமமான காட்சிகளை வைக்க வேண்டிய அவசியத்தில் லாஜிக்கைப் பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

வழக்கமான நாயகர்களோடு இந்த 7ஆம் பாகத்தில் இரண்டு புதிய நாயகர்கள் இணைந்திருக்கிறார்கள். ஒருவர் ‘டிரான்ஸ்போர்ட்டர்’ புகழ் ஜேசன் ஸ்டேத்தம். இன்னொருவர் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ மன்னன் டோனி ஜா. ஏற்கெனவே ஆக்ஷன் அனல் பறக்கும் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ பாகத்தில் இவர்களும் இணைந்தால் அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? காட்சிக்குக் காட்சி அதிரடிதான். முதல் காட்சியிலேயே ‘இரும்பு உடம்பு’ டிவைன் ஜான்சனை அசால்ட்டாக அடித்து துவைத்துவிட்டு அவருடைய கம்ப்யூட்டரிலிருந்து தேவையான விஷயங்களை திருடிச் செல்கிறார் ஸ்டேத்தம். அதன்பிறகு அடுத்தடுத்து அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பரபர க்ளைமேக்ஸ்தான்.

மிகப்பெரிய பஸ் ஒன்றிற்குள் டோனி ஜாவுக்கும், பால் வாக்கருக்கும் இடையே நடக்கும் சண்டை ரசிகர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. அதுவும் பள்ளத்திற்குள் விழப்போகும் பஸ்ஸிலிருந்து எகிறிக் குதித்து பால் வாக்கர் தப்பிக்கும் காட்சியில் ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸ் வல்லுனர்கள்.

வழக்கம்போல் டயர்கள் தேய அனல் பறக்கும் கார் ரேஸ் காட்சிகள், வெடி வெடிக்கும் துப்பாக்கிச் சண்டைகள், புகை கக்கும் வெடிகுண்டு சப்தங்கள் என எந்த விஷயங்களுக்கும் இந்த 7ஆம் பாகமும் பஞ்சம் வைக்கவில்லை. விலையுயர்ந்த கார் ஒன்றின் மூலம் அபுதாபியின் 3 உயரமான கட்டிடங்களிலிருந்து ஒவ்வொரு கட்டிடமாக வின் டீசல் தாண்டிச் செல்லும் காட்சி காதில் பூ என்றாலும், கைதட்டாமல் இருக்க முடியவில்லை. இடையிடையே டைரஸ் கிப்ஸன் அடிக்கும் காமெடி லூட்டிகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை.

படத்தின் ஹைலைட்டாக பால் வாக்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் முந்தைய பாகங்களில் நடித்த காட்சிகளை திரையிட்டபோது ஒரு கணம் தியேட்டரே அமைதியாகி, அவருக்காக மௌன அஞ்சலி செலுத்தியது உணர்வுப்பூர்வம். இந்த 7ஆம் பாகத்தோடு ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ முடிவடைவதாகக் கூறப்பட்டது. ஆனால் படத்தின் க்ளைமேக்ஸில் ஜேசன் ஸ்டேத்தம் உயிருடன் இருப்பதுபோல் காட்டியிருப்பதால் 8ஆம் பாகம் வெளிவர வாய்ப்பிருக்கிறதாம்.

மொத்தத்தில்... ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7’ கொஞ்சம் ஓவர் ஸ்பீடாக இருந்தாலும், சுவாரஸ்யத்திற்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வைக்கவில்லை.

(Fast & Furious 7 movie Review, Fast & Furious 7 Tamil Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;