36 வயதினிலே - இசை விமர்சனம்

36 வயதினிலே - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 7-Apr-2015 11:27 AM IST Chandru கருத்துக்கள்

Production: Suriya
Direction: Roshan Andrews
Starring: Jyotika, Rahman, Abirami, Delhi Ganesh
Music: Santosh Narayanan

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறார் நடிகை ஜோதிகா. அவருக்காகவே ஸ்பெஷல் கதையைத் தேர்ந்தெடுத்து, அதை தன் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்திருக்கிறார் சூர்யா. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான ‘36 வயதினிலே’ பட ஆல்பத்திற்காக சந்தோஷ் நாராயணன் அற்புதமான 3 பாடல்களையும், 5 பின்னணி இசைத் தொகுப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளார்.

ஹேப்பி & நாலு கழுத...
பாடியவர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : விவேக்


தன் ஆல்பத்தில், தான் பாடும் பாடலுக்கான இசையை எப்போதுமே சிம்பிளாகவும், பட்டென்று பிடித்துப்போகும் விதத்திலுமே உருவாக்கிக் கொள்வார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்த ‘நாலு கழுத வயசாச்சு...’ பாடலும் அந்த ரகம்தான். ‘அவருடைய ஆல்பத்தில் ஏற்கெனவே இதேபோன்ற தொணியில் ஒலிக்கும் பாடலைக் கேட்டிருக்கோமே’ என்ற உணர்வு ஏற்பட்டாலும், துள்ளலான இசையும், சந்தோஷின் எனர்ஜியான குரலும் அதை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. அனுபவித்து வித்தியாசமான வரிகளைத் தந்திருக்கிறார் விவேக்.

போகிறேன்...
பாடியவர் : கல்பனா ராகவேந்தர்
பாடலாசிரியர் : விவேக்


தான் கண்ட கனவுகளை நனவாக்கி சாதித்துவிட்ட திருப்தியில் இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை அற்புதமாக பிரதிபலிக்கிறது இந்த ‘போகிறேன்...’ பாடல். ‘36 வயதினிலே’ டிரைலரின் பின்னணி இசையாகவும் ஏற்கெனவே கேட்டுப் பழகிவிட்டதால் எளிதாக இதயத்தில் இறங்குகிறது இப்பாடல். விவேக்கின் வரிகளை அட்சரம் பிசகாமல் அழாகப் பாடியிருக்கிறார் கல்பனா ராகவேந்தர். சந்தோஷ் நாராயணனின் இசை வெற்றி முழக்கங்களை ஒலிக்கச் செய்திருக்கிறது.

ராசாத்தி...
பாடியவர் : லலிதா விஜயகுமார்
பாடலாசிரியர் : விவேக்


இதுதான் சந்தோஷ் நாராயணனின் ஸ்பெஷல்... சாதாரண பாடலைக்கூட தன் துள்ளல் இசை மூலம் ரசிக்க வைத்துவிடுவார். அந்த வகையில் இந்த ஆல்பத்தின் ‘டாப் பாடல்’ என்று இந்த ‘ராசாத்தி...’யை தாராளமாகச் சொல்லலாம். விவேக்கின் குதூகலமான வார்த்தைகளை உற்சாகம் பொங்கப் பாடி அசத்தியிருக்கிறார் லலிதா விஜயகுமார். இசையையும் மீறி அதிக கவனம் பெறுகிறது பாடகியின் வசீகரக் குரல்!

‘நச்’சென்று இந்த 3 பாடல்களோடு பிரஸிடென்ட், கண்ணாடி, விடியல் தேடி, கனவுகள் சுமந்து, கண்ணீர் மொழி என படத்தின் முக்கிய காட்சிகளுக்கான ஒரிஜினல் பின்னணி இசையையும், 3 பாடல்களின் கரோக்கி வெர்ஷனையும் இந்த ‘36 வயதினிலே’ ஆல்பத்தில் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

மொத்தத்தில்... சந்தோஷ் நாராயணின் ஒரு சில பழைய ‘டச்’கள் இந்த ஆல்பத்தில் தெரிந்தாலும், கேட்டதும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் வகையில் பாடல்களைத் தந்ததற்காக ஸ்பெஷல் பாராட்டுகள் அவருக்கு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;