‘36 வயதினிலே’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

‘36 வயதினிலே’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 6-Apr-2015 4:31 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘36 வயதினிலே’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா, ரஹ்மான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், மோகன்ராம், ‘கோலிசோடா’ சுஜாதா, ‘போஸ்’ வெங்கட் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஆர். திவாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விழாவில் படத்தின் ஆடியோவை ‘2டி’ என்ற எழுத்துக்கு சொந்தக்காரர்களான தியா வெளியிட, தேவ் (சூர்யா, ஜோதிகா தம்பதியரின் குழந்தைகள்) பெற்றுக்கொண்டது வித்தியாசமான நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், ‘‘எல்லாருக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தை பற்றியும், குழந்தைகள் பற்றியும் விரிவாக பேசிய சாகோதரி சாந்தி அவர்களுக்கும் (சக்தி மசாலா நிறுவன அதிபர்) அவருடைய கணவர் துரைசாமி அவர்களுக்கும் நன்றிகள்! ‘36 வயதினிலே’ 2டி நிறுவனத்தின் முதல் படம். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் முதல் படம்! எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்! ஒருவர் நாங்கள் பெற்றெடுத்த குழந்தை! இன்னொருவர் எங்கள் மகனுக்கு மனைவியாகியிருக்கிற ஜோதிகா அவர்கள்! இந்த இரண்டு குழந்தைகளும் எங்களை அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவார்கள்! ஜோ எப்போதுமே வித்தியாசமான ஒரு பொண்ணு! மனைவி, தாய், மகள், ஆர்ட்டிஸ்ட் என நான்கு முகங்கள் அவருக்கு உண்டு! சூர்யாவுக்கு மனைவி, குழந்தைகளுக்கு தாய், எங்களுக்கு மகள், உங்களுக்கு ஆர்ட்டிஸ்ட்! சூர்யாவினுடைய காதல் மனைவி ஜோ! சூர்யாவினுடைய வெற்றியில் அவருக்கு மிகப் பெரிய பங்குண்டு. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்ற சொல்லுக்கு இணையாக இன்று சூர்யாவுக்கு பின்னாடி ஜோ இருந்து கொண்டிருக்கிறார். ‘ஜோ’வுக்காக துவங்கப்பட்ட நிறுவனம் தான் ‘2டி’. ரோஷன் ஆன்ட்ரூஸ் மகத்தான ஒரு இயக்குனர். இப்படி மகத்தான ஒரு படத்தில் ஜோவை நடிக்க வைத்ததற்கு அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூர்யா, ஜோதிகா இருவருமே இந்த நிறுவனம் மூலம், இந்த படத்தின் மூலம் நிறைய வெற்றி படைப்புகளை கொடுக்க போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல உலகாளவிய ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்கள் தர ஆதரவு கொடுக்க வேண்டும். எவ்வளவு வாய்ப்புகள், வெற்றிகள் வந்தாலும் குடும்பம் குழந்தைகள் அதற்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்! அதற்கப்புறம் தான் மற்றவை எல்லாம் இருக்க வேண்டும்’’ என்று தனது வாழ்த்துரையை முடித்துக்கொண்டார்.

சூர்யா பேசும்போது. ‘‘நான் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆச்சு. வசந்த் சார் துவக்கி வச்சது. இன்று ‘36 வயதினிலே’ படத்தின் தயாரிப்பாளரா இந்த மேடையில் நிற்கிறேன். இந்த நிகழ்ச்சியிலும் வசந்த் சார் என் கூட இருக்கிறார். சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது! இன்று ‘2டி’ என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கு. இது வேறு ஒரு பெயரில ஒரு கம்பெனி! இது நான் தனியாக செய்கிற விஷயம் என்று யாரும் கருத வேண்டாம்! எல்லாரும் சேர்ந்து பண்ற விஷயம் தான்! இது வரைக்கும் நான் ஜோவை எந்த ஸ்டேஜிலும் ஏற்றியது கிடையாது. இந்தப் படத்தின் மூலம் அவரை ஸ்டேஜில ஏற்றியிருக்கிறேன். கடந்த 8 வருடங்களாக ஜோ குழந்தைகளை குளிப்பாட்டுவது, அவர்களுக்கு உணவு ஊட்டுவது இப்படி அவங்களை கவனிச்சுக்கிறதில தான் இருந்தாங்க. அப்படியிருக்கும்போது தான் ‘யுடிவி’ தனஞ்சயன் சார் மூலம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் டிவிடி யை பார்க்க நேர்ந்தேன். அந்த சமயத்துல ஜோவுக்காக ஒன்று, இரண்டு கதைகளை கேட்டு வச்சிருந்தேன். ஜோ ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ ‘டிவிடி’யை பார்த்ததும் இந்த படத்தை நான் பண்றேன் என்று சொன்னார். அடுத்த நாளே ரோஷன் ஆன்ட்ரூஸை தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்த படம் தான் ‘36 வயதினிலே’. ஒரு குறுகிய காலத்திற்குள் இப்படத்தை சிறப்பாக எடுத்து தந்திருக்கிறார் ரோஷன் ஆன்ட்ரூஸ். அவருக்கு மிக்க நன்றி’’ என்றார்.

தொடர்ந்து ஜோதிகா பேசும்போது, ‘‘நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றால் அதுக்கு என் ஃப்ரென்ட்ஸோட முழு சப்போர்ட் தான் காரணம்! ஜோ உனக்கு ஒரு ஹாலிடே வேண்டும்! நீ அந்த படம் பண்ணிட்டு வா என்று அவங்க என்னை ரொம்பவும் ஊக்கப்படுத்தினாங்க! அதனால தான் என்னால இந்த படத்தில் நடிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் நான் அப்பா, அம்மா என்று கூப்பிடுகிற என் அத்தை, மாமா எல்லாரும் எனக்கு நல்ல சப்போர்ட்டா இருந்தாதங்க. அவங்க ஒரு வார்த்தை கூட ஜோ இதை பண்ணாதே, அதை பண்ணாதே என்று என்னிடம் சொன்னது இல்லை. அப்பா பசங்களை காலையில ஸ்கூல் கூட்டிட்டு போவாங்க! அம்மா அவங்களுக்கு சப்பாடு தயார் பண்ணுவாங்க! இப்படி எல்லாரும் எனக்கு தந்த சப்போர்ட்டால் தான் இப்படத்தில் நடிக்க முடிந்தது! இங்கு என்னை தமிழில் அறிமுகப்படுத்திய வசந்த் சார் இருக்கிறார்! அவருக்கும் என் நன்றி! இந்த படத்தில் என் கூட ஒர்க் பண்ணியிருக்கிற அத்தனை பேருக்கும் நன்றிகள்! மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மாதிரி தமிழில் ஹீரோயின் ஓரியன்டட் படங்கள் வருவதில்லை! அது ஏன் என்று தெரியவில்லை? அப்படி ஒரு ஹீரோயின் ஓரியன்டட் படம் தான் இந்த ‘36 வயதினிலே’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பத்தில் மீண்டும் நடிச்சதில் மிகப் பெரிய சந்தோஷம். என் ஹஸ்பென்ட் இந்த படத்தோடஃ புரொட்யூஸர்! அவருக்கும் என் நன்றி! (அப்போது சூர்யா குறுக்கிட்டுஞ் நான் மும்பையில் ஒரு 15 வருடங்கள் இருந்தால் கூட இவ்வளவு அழகா என்னால் ஹிந்தியில் பேச முடிந்திருக்காது! ஆனா ஜோ இவ்வளவு அழகாக, என்னை விட நல்லா தமிழில் பேசுறாங்க! சந்தோஷம்! என்றார் சிரித்துக்கொண்டே!) தொடர்ந்து பேசிய ஜோதிகா ‘எந்த விஷயாமாக இருந்தாலும் என் ஹஸ்பென்ட் எனக்கு ரொம்பவும் சப்போர்ட் பண்ணுவாங்க! நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதில் எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. நிஜமாகவே இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி’’ என்றார்.

இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் பேசும்போது, ‘‘எனக்கு தமிழில் அவ்வளவாக பேச வராது! இருந்தாலும் முயற்சி செய்கிறேன்! இதெல்லாம் கடவுள் ஆசியால் நடக்கிற விஷயங்கள் தான்! கடவுள் சொல்கிற மாதிரி சில விஷயங்கள் என் மனதில் தோன்றும்! அப்படி தோன்றியது தான் இந்த படத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது! ஓவ்வொரு படமும் அந்த படத்தினுடைய இயக்குனரின் கனவாக இருக்கும். அப்படி நான் கண்ட ஒரு கனவு தான் இப்படம்! நான் கண்ட கனவை படமாக்குவதற்கு என் கூட ஒரு டீம் இருக்கிறது. அந்த டீமோட கூட்டுமுயற்சி தான் இந்த படம். இதுல முக்கியமான விஷயம் அழகான ஒரு ஜோடியுடைய இந்த ‘2டி’ என்ற கம்பெனி மூலம் நான் தமிழில் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டீசர்


;