ஓ காதல் கண்மணி - இசை விமர்சனம்

ஓ காதல் கண்மணி - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 4-Apr-2015 11:51 AM IST Chandru கருத்துக்கள்

‘ரோஜா’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியின் இளமை ததும்பும் இசைக்கு இன்னும் வயதாகவில்லை. ஒவ்வொரு முறை அவர்களிடமிருந்து ஆல்பம் வெளிவரும்போதும் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பிருக்கும். இந்தமுறை அது பன்மடங்காகியிருக்கிறது. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ காதல் கண்மணி’க்காக சில வித்தியாசமான முயற்சிகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் கையாண்டிருக்கிறார். வைரமுத்து மட்டுமின்றி, மணிரத்னமும், ரஹ்மானும்கூட பாடல் வரிகளுக்கு உயிர் தந்திருப்பது ‘ஓ காதல் கண்மணி’ ஆல்பத்தின் இன்னுமொரு சிறப்பு!

காரா... ஆட்டக்காரா...
பாடகர்கள் : ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், தர்ஷனா, ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : வைரமுத்து


ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணி இசையாக ஒலித்தபோதே ஹிட்டடித்துவிட்ட பாடல். இளமைத்துள்ளலான இந்தப் பாடலுக்கு தர்ஷனாவும், ஷாஷாவும் தங்களின் முழு எனர்ஜியையும் கொடுத்து பாடியுள்ளார்கள். பெண்களின் குரல்களுக்கிடையே ஆர்யன் தினேஷின் வித்தியாசமான ‘ராப்’ ஓசைகளும் சேர்ந்துகொள்ளும்போது கூடுதல் கவனம் பெறுகிறது. ‘கடல்’ படத்தின் ‘மகுடி... மகுடி...’ பாடல்போல ரஹ்மானின் வித்தயாச முயற்சி இந்த ‘காரா ஆட்டக்காரா’.

ஏய் சினாமிகா...
பாடகர்கள் : கார்த்திக்
பாடலாசிரியர் : வைரமுத்து


இந்த வெஸ்டர்ன் பாடலுக்கு ரஹ்மான் தனது ஆஸ்தான பாடகரான கார்த்திக்கை தேர்வு செய்திருப்பது வெகு பொருத்தம். கிடாரின் மெல்லிய இசையுடன், பியானோவும், டிரம்ஸும் சேர்ந்துகொள்ள ஃபாஸ்ட் பீட் மெலடியாக ஒலிக்கிறது இந்த ‘ஏய் சினாமிகா...’ பாடல். காட்சிகளுடன் பார்க்கும்போது இப்பாடலுக்கு இன்னும் அதிக கவனம் கிடைக்கும்.

பறந்து செல்ல வா...
பாடகர்கள் : கார்த்திக், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : வைரமுத்து


இசைக்கருவிகளுக்கு ஆரம்பத்தில் ஓய்வுகொடுத்துவிட்டு, முழுக்க முழுக்க பாடகர்களின் திறமைக்கு இந்த ‘பறந்து செல்ல வா...’ பாடலில் சவால்விடுத்திருக்கிறார் ஏ.ரஹ்மான். பாடகர்களின் சிறப்பு சப்தங்களோடு இரண்டாவது பல்லவியில் இசையும் சேரும்போது இன்னும் அதிகம் வசீகரிக்கிறது. முதல்முறை கேட்கும்போது பெரிய ஆச்சரியத்தைத் தராவிட்டாலும், ரஹ்மானின் இந்த வித்தியாச முயற்சிக்கு கண்டிப்பாக உரிய பலன் கிடைக்கும்.

மென்டல் மனதில்... (ஆண்)
பாடகர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்


சிங்கிள் டிராக்காக வெளிவந்து சூப்பர்ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த ‘மென்டல் மனதில்....’. ரஹ்மான் ஆல்பத்தை வாங்கியதும் முதலில் அவர் பாடிய பாடலைத் தேடிப்பிடித்து கேட்பதுதான் அவரது ரசிகர்களின் வாடிக்கையே. இந்தமுறை இந்த ‘மென்டல் மனதில்...’ அந்த பாக்கியத்தை ரஹ்மான் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது. இப்படி ஒரு துள்ளலான இசையைக் கேட்டு எத்தனை நாட்களாகவிட்டது என ஏங்கித் தவித்தவர்களுக்காகவே இந்த ‘மென்டல் மனதில்...’ பாடலைத் தந்திருக்கிறார் ரஹ்மான். வரிகளிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள் ரஹ்மானும், மணியும். காலர் டோன், ரிங் டோன், க்ளப், பார் என அத்தனை இடங்களையும் ஆக்ரமித்து இசைப்பரியர்களை பைத்தியமாக கத்த வைத்திருக்கிறது இந்த ‘மென்டல் மனதில்...’.

நானே வருகிறேன்...
பாடகர்கள் : ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ்
பாடலாசிரியர் : வைரமுத்து


இதுதான் ரஹ்மான் ஸ்டைல்.... வெஸ்டர்னையும், கர்னாடிக்கையும் கலந்து கொடுப்பதில் கைதேர்ந்தவர். அதுவும் இதுபோன்றதொரு வித்தியாசமான மெலடியை ரஹ்மானின் ஆல்பத்தில் இதுவரை கேட்டதே இல்லையோ என்ற உணர்வைக் கொடுத்திருக்கிறது இந்த ‘நானே வருகிறேன்...’. ஷாஷா திருப்பதி தன் முழுத்திறமையையும் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். பலவித இசைக்கருவிகளை மிகுந்த கவனத்துடன் இந்தப் பாடலில் ஒலிக்கவிட்டிருக்கிறார் ‘மெசார்ட் ஆஃப் மெட்ராஸ்’.

தீரா... உலா...
பாடகர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், தர்ஷனா, நிகிதா காந்தி
பாடலாசிரியர் : வைரமுத்து


இதுவும் ரஹ்மானின் புத்தம் புதிய முயற்சி.... ரஹ்மானின் எலக்ட்ரானிக் வாய்ஸ், எலக்ட்ரிக்கல் மியூசிக் என புதுமை படைத்திருக்கிறது இந்த ‘தீரா... உலா...’. யோசித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு சரணத்தையம், பல்லவியையும் வித்தியாசமாக இப்பாடலில் கலந்திருக்கிறார் ரஹ்மான். பாடலின் இடையே டிஜிட்டல் இசைக்கு கிளாசிக்கலை பாட வைத்திருப்பது கூடுதல் அழகு. தர்ஷனாவும், நிகிதா காந்தியும் அற்புதம் படைத்திருக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகளில் இளமையும், இனிமையும்.

மென்டல் மனதில்... (பெண்)
பாடியவர் : ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்


ரஹ்மான் குரலில் முதலிலேயே மயங்கிவிட்டதாலோ என்னவோ இந்த ‘மென்டல் மனதில்’ பாடலின் பெண் வெர்ஷன் அவ்வளவாக வசீகரிக்கவில்லை. இருந்தாலும் ஜோனிதா காந்தியின் குழையும் குரலில் அதே பாடலை திரும்பக் கேட்பதும் புதிய அனுபவம்தான்.

மலர்கள் கேட்டேன்...
பாடியவர் : சித்ரா, ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து


தங்க கிரீடத்தின் உச்சியில் வைரக்கல்லை பதித்ததுபோல், இந்த ஆல்பத்தில் இந்த ‘மலர்கள் கேட்டேன்’ பாடலைத் தந்திருக்கிறார் ரஹ்மான். எத்தனை வருடங்கள் ஓடினாலும், சித்ராவின் இடத்தை வேறொருவர் கைப்பற்ற முடியாது என்பதற்கு இந்த கிளாசிக்கல் பாடலே சான்று... தாலாட்டியிருக்கிறார். வைரமுத்துவின் பேனாவிற்கு ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட இப்பாடலுக்கே அதிக வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. பாடலின் இறுதியில் ரஹ்மானும் இணைந்துகொள்ளும்போது மனதின் வெகு ஆழத்தில் இறங்குகிறது இப்பாடல்.

மவ்லா வ சல்லிம்...
பாடியவர் : ஏ.ஆர்.அமீன்


ரஹ்மானின் வாரிசான ஏ.ஆர்.அமீனின் மழலை மாறாத குரலில் ஒலிக்கிறது இந்த இஸ்லாமியப் பாடல். கண்களை மூடி ஆழ்ந்து கேட்டால் மொழிகளையும் கடந்து வசீகரிக்கிறது இந்த உருதுப்பாடல். உணர்வுப்பூர்வமான இசையை இப்பாடலுக்கு வழங்கியிருக்கிறார் ரஹ்மான்.

இந்தமுறையும் ஆச்சரியம் தந்திருக்கிறார்கள் மணிரத்னமும், ரஹ்மானும். இத்தனை ஆண்களாக தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல்தான். கூடவே ரஹ்மானுக்கு வழங்கப்படும் சுதந்திரமும் புதிய புதிய கற்பனைகள் சிறகு விரித்து ஆல்பங்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில்... ‘ஓ காதல் கண்மணி’யின் பாடல்கள் ‘ட்ரிபுள் ஓ.கே.’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;