சகாப்தம் – விமர்சனம்

தடுமாற்றம்!

விமர்சனம் 3-Apr-2015 2:30 PM IST Top 10 கருத்துக்கள்

DirectIion : Surendran
Producer : LK Sudhish
Starring : Shanmuga Pandyan, Neha, Shubra Ayyappa, Nandu Jagan, Renjith, Devayani, Power Star Sreenivasan, Singam Puli, Sourav Chakaravarthy
Music : Karthik Raja
Cinematography : S. K. Bhupathi
Editing : S. P. Ahmed

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம்.

கதைக்களம்

கிராமத்தில் எந்த வேலையும் இல்லாமல் நண்பன் ‘நண்டு’ ஜெகனுடன் ஊர் சுற்றி வருகிறார் சண்முகபாண்டியன். மாமன் மகள் நேகாவை காதலிக்கவும் செய்கிறார். மலேசியாவில் இருந்து ஊர் திரும்பும் சண்முகபாண்டியனின் நண்பரான ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், தான் மலேசியாவில் பெரிய கம்பெனியில், பெரிய பதவியில் இருப்பதாக கூறி பில்டப் செய்ய, இதை நம்பி சண்முகபாண்டியனும், நண்டு ஜெகனும் வேலைக்காக மலேசியா செல்ல முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில் அதே ஊரில் இருக்கும் தேவயானி, மலேசியாவுக்கு சென்ற தன் கணவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தவித்து, தனியே வாழ்ந்து வருகிறார். சண்முகபாண்டியன் மலேசியா செல்லவிருப்பதை அறியும் தேவயானி, தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கூறுகிறார். சண்முகபாண்டியனும், ‘நண்டு’ ஜெகனும் மலேசியா பயணமாகி ஏர்போர்ர்டில் வந்து இறங்கியதும் மலேசிய போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்களது மலேசிய வேலை கனவு நிறைவேறியதா? தேவயானியின் கணவரை கண்டுபிடித்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் படமே ‘சகாப்தம்’.

படம் பற்றிய அலசல்

கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், வெளிநாட்டு வேலை மோகத்தை கைவிட்டு நம் நாட்டிலேயே வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் சொல்லும் படமே இது. ஆனால் அறிமுக இயக்குனரான சுரேந்திரன் அதர பழசான ஒரு கதையை வைத்து, திரைக்கதை அமைத்திருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. நண்பனுடன் ஊர் சுற்றுவது, மாமன் மகளை காதலிப்பது என்று இடைவேளை வரை வழக்கமாக கிராமத்து கதை படங்களில் வரும் காட்சி அமைப்புகளுடன் படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனர், கதை மலேசியாவுக்கு நகர்ந்ததும் அழகான பெண் சுப்ரா ஐயப்பன் நடத்தும் தனியார் துப்பறியும் நிறுவனம், அந்த நிறுவனத்தின் மூலம் சண்முகபாண்டியன் மலேசிய உயர் போலீஸ் அதிகாரிகளே பாராட்டும் அளவுக்கு உயர்வது, தமிழர்களை அடிமையாக்கி சட்டவிரோதமாக மருந்து கம்பெனியை நடத்தும் வில்லனை அழித்து தமிழர்களை காப்பாற்றுவது என கதையில் பரபரப்பை தர முயற்சித்திருக்கிறார். அதனால் சண்முகபாண்டியனின் கேரக்டரை ஹைலைட் செயவதிலேயே இயக்குனரின் கவனம் சென்றிருக்கிறது. ஆனால் மலேசியாவின் பிரம்மாண்டம், அழகு, அந்த ஊர் வில்லன்களின் அதிரடி சாகசங்கள் ஆகியவற்றை ரசிக்கும் படி படமாக்கியிருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்! இதற்கு பூபதியின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளது. கார்த்திக் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை ரகம்! மற்ற பாடல்களிலாகட்டும், பின்னணி இசையிலாகட்டும் கார்த்திக் ராஜா கவனத்தை ஈரக்கவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ஆக்‌ஷன், அடிதடி காட்சிகளில் தன் தந்தை விஜயகாந்தின் பெயரை காப்பாற்றியிருக்கிறார் சண்முகபாண்டியன்! ஆனால் ரொமான்ஸ், எமோஷன் காட்சிகளில் போதுமான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தவில்லை! இது அவரது முதல் படம் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! மாமன் மகள் நேகா, துப்பறியும் நிறுவன பெண் சுப்ரா ஐயப்பன் என இரண்டு ஹீரோயின்கள்! இருவரும் தேவையான நடிப்போடு, கவர்ச்சிக்கும் உதவியிருக்கிறார்கள்! சண்முக பாண்டியனுடன் படம் முழுக்க வரும் ‘நண்டு’ ஜெகனின் காமெடி, சில இடங்களில் எரிச்சலைதான் தருகிறது. ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் வரும்போதெல்லாம் காமெடி களை கட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக கணவன் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தவிக்கும் தேவயானி, அவரை அடைய துடிக்கும் ‘போஸ்’ வெங்கட், மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் ‘தலைவாசல்’ விஜய், டாக்டராக வரும் சுரேஷ், ரஞ்சித் என படத்தில் ஏராளமானோர் நடித்துள்ளனர். கிளைமேக்சில் மலேசியா உயர் போலீஸ் அதிகாரியாக வந்து அறிவுரை கூறும் விஜயகாந்த் நடிப்பிலாகட்டும் குரலிலாகட்டும் அதே கம்பீரம்!

பலம்

பழைய திரைக்கதை என்றாலும், அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இருக்கும் நேர்த்தி!
பூபதியின் ஒளிப்பதிவில் மலேசியா சம்பந்தப்பட்ட காட்சிகள்
ராக்கி ராஜேஷ் மற்றும் பேங்காங் ஸ்டன்ட் மாஸ்டர் கெச்சா அமைத்திருக்கும் அதிரடி சண்டை காட்சிகள்

பலவீனம்

அதரபழசான கதை, திரைக்கதை அமைப்பு, வசனங்கள்
கதையுடன் ஒட்டாத பின்னணி இசை, எடிட்டிங்
அதிகப்படியான லாஜிக் மீறல்கள், பில்டப் காட்சிகள்!

மொத்தத்தில்...

திரையுலகில் பெரும் அனுபவசாலியான விஜயகாந்த் தன் மகனுக்காக நல்ல ஒரு திரைக்கதையை தேர்வு செய்ய தவறிவிட்டார் என்றாலும், தனது மகனை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறக்கியிருப்பதில் வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்!

ஒரு வரி பஞ்ச் : தடுமாற்றம்!

ரேட்டிங் : 3.5/10

(Sagaptham Review, Sagaptham Movie Review, Sagaptham Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சகாப்தம் - டிரைலர்


;