நண்பேன்டா - விமர்சனம்

காமெடி இல்லாத டிராமா!

விமர்சனம் 2-Apr-2015 1:10 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Jagadish
Production : Red Giant Movies
Starring : Udhayanidhi Stalin, Nayanthara, Santhanam
Music : Harris Jayaraj
Cinematography : Balasubramaniem
Editing : Vivek Harshan

‘ஓகே ஓகே’ படத்தின் அதிரடி வெற்றி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ‘இது கதிர்வேலன் காதலன்’ படத்தையும் ‘ஓகே’ என சொல்லவைத்த உதயநிதி ஸ்டாலின், இப்போது ‘நண்பேன்டா’ மூலம் சந்தானத்துடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார். மீண்டும் சிரிக்க வைத்திருக்கிறார்களா?

கதைக்களம்

தஞ்சாவூரில் வெட்டியாக சுத்திக் கொண்டிருக்கும் உதயநிதி, திருச்சியிலிருக்கும் நண்பன் சந்தானத்தைப் பார்க்க வருகிறார். வந்த இடத்தில் பார்த்த முதல் பார்வையிலேயே நயன்தாரா மேல் காதல் கொள்ள, அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார். உதயநிதி கொடுக்கும் இம்சைகளைத் தாங்கிக் கொண்டு சந்தானமும் அவரது காதலுக்கு உதவுகிறார். ஒருவழியாக நயன்தாரவுக்கும் உதயநிதிமேல் காதல் வர, அவரிடம் தன் காதலைச் சொல்லும்முன் தன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை உதயநிதியிடம் சொல்கிறார். அதற்கு உதயநிதி தரும் ரியாக்ஷனால் நயன்தாராவுக்கு கோபம் வர, அவர்களின் காதல் அங்கேயே முறிந்து போகிறது.

ஏன், எதற்கு என்பதை ‘நண்பேன்டா’வைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

படம் பற்றிய அலசல்

வேலை வெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோ, அவரின் காதல், காதலுக்கு உதவும் நண்பன், படம் முழுக்க வசனங்கள் பேசிக் கொண்டேயிருப்பது என தன் குருவான இயக்குனர் எம்.ராஜேஷின் ஃபார்முலாவை அட்சரம் பிசகாமல் ‘நண்பேன்டா’வில் வழிமொழிந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெகதீஷ். அதுமட்டுமில்லாமல் உதயநிதியின் அறிமுகப்படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் கதையில் லேசாக சில மாற்றங்களை மட்டும் செய்து அப்படியே அதை ‘நண்பேன்டா’வாகவும் மாற்றிவிட்டார்கள்.

தொடர்ந்து 3 படங்களாக சந்தானமும் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பதாலோ என்னவோ, அவரின் காமெடியும் ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. எந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாமல் நகரும் படத்தில் ஆங்காங்கே வரும் அழகான பாடல்கள் மட்டுமே கொஞ்சம் ஆறுதல். படத்தின் ஒரே பலம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு மட்டுமே. மற்றபடி இந்த ‘நண்பேன்டா’வில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை.

நடிகர்களின் பங்களிப்பு

உதயநிதியின் நடிப்பில் மெச்சூரிட்டி அதிகரித்திருக்கிறது. நன்றாக நடனம் ஆடவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் தொடர்ந்து 3 படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்ததை அவர் தவிர்த்திருக்கலாம். நயன்தாராவுக்கும் இப்படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர் கொடுக்கப்படவில்லை. அழகழகான எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுவது, ஹீரோவை முறைப்பது, திட்டுவது என ‘இது கதிர்வேலன் காதலி’ல் செய்த அதே வேலைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார். ஆனால், பாடல்களில் அவரின் உடையலங்காரமும், அழகான நடனமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.

சந்தானத்தை திரையில் காட்டியதும் மொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. ஆனால் அதன்பிறகு எந்த சிரிப்பு சத்தமும் எழவில்லை. அவரின் காமெடி காட்சிகளை இயக்குனர் சரியாக கையாளவில்லை. இருந்தாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் தன்னால் முடிந்தளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். மிகப்பெரிய வில்லிபோல் காட்டப்பட்ட சூசன், வில்லன் ராஜேந்திரன் ஆகியோரை டம்மியாக்கியிருக்கிறார்கள்.

பலம்

1. ஹாரிஸின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள்
2. பாலசுப்ரமணியெம்மின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு

பலவீனம்

1. டெம்ப்ளேட் கதை
2. சுவாரஸ்யமில்லாத திரைக்கதை
3. எடுபடாத காமெடி காட்சிகள்

மொத்தத்தில்...

ரசிகர்களை சிரிக்க வைப்பதுதான் இருப்பதிலேயே கஷ்டமான காரியம் என்று சொல்வார்கள். அந்த காரியத்தை இந்த ‘நண்பேன்டா’ செய்யத்தவறிவிட்டது.

ஒரு வரி பஞ்ச் : காமெடி இல்லாத டிராமா!

ரேட்டிங் : 3.5/10

(Nannbenda Movie Review, Nannbenda Tamil Movie Review, Nannbenda Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;