கொம்பன் - விமர்சனம்

பாசமான ரோஷக்காரன்!

விமர்சனம் 1-Apr-2015 1:46 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : M. Muthaiah
Production : Studio Green
Starring : Karthi, Lakshmi Menon, Rajkiran
Music : G. V. Prakash Kumar
Cinematography : Velraj
Editing : Praveen K. L.

முறுக்கு மீசை, மடித்துக் கட்டிய வேட்டி என மீண்டும் கிராமத்து மண்ணின் மைந்தனாக களமிறங்கியிருக்கிறார் கார்த்தி. ‘கொம்பனி’ன் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

ஊருக்குள் எங்கே தப்பு நடந்தாலும் அதைத்தட்டிக் கேட்கும் கொம்பையா பாண்டியனுக்கும் (கார்த்தி), எந்த வம்புச்சண்டைக்கும் போகாத முத்தையாவின் (ராஜ்கிரண்) மகள் பழனிக்கும் (லக்ஷ்மிமேனன்) திருமணம் நடக்கிறது. தனக்கு பெண் கொடுக்கும் முன்பு ஊருக்குள் தன்னைப்பற்றி முத்தையா எல்லோரிடம் விசாரித்தது கொம்பனுக்குத் தெரியவர, தன் மாமனாரை திருமணத்திற்குப் பின்பு மதிக்காமல் நடந்து கொள்கிறார். அதேபோல் மருமகனின் முன்கோபம் மாமனாரையும் கவலை கொள்ளச் செய்கிறது.

இதுஒருபுறமிருக்க கொம்பனுக்கும் பக்கத்து ஊர் பெரிய மனுசனான குண்டன் ராமசாமிக்கும் (சூப்பர் சுப்பராயன்) இடையே பதவித்தகராறு ஒன்றில் மோதல் ஏற்படுகிறது. தனக்கு இடைஞ்சலாக இருக்கும் கொம்பனை ஆள்வைத்து கொலை செய்யத்திட்டமிடுகிறான் குண்டன் ராமசாமி.

மாமனார் - மருமகனுக்கிடையே நடக்கும் உரசல்களுக்கிடையே, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதலும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த ‘கொம்பன்’ படத்தின் முடிவு.

படம் பற்றிய அலசல்

கிராமத்து படங்கள் என்றாலே... ஒன்று வெட்டுக்குத்து ஆக்ஷன் படமாக இருக்கும், இல்லையென்றால் பாசத்தைப் பிழியும் சென்டிமென்ட் படமாக இருக்கும். ஆனால், ‘கொம்பனி’ல் இந்த இரண்டு விஷயங்களையும் சரிவிகிதத்தில் கையாண்டு கைதட்டல் வாங்கியிருக்கிறார் முத்தையா. ஆக்ஷனைப் பொறுத்தவரை வழக்கமான காட்சிகள்தான் என்றாலும், சென்டிமென்டில் மாமனார் & மருமகன் என அதிகம் திரையில் காட்டாத பக்கங்களை காட்டியிருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம்.

கிராமத்துவாசிகளின் நக்கல், நய்யாண்டி, பாசம், கோபம், அடிதடி, காதல், கல்யாணம், திருவிழா என வழக்கமான கிராமத்து படமாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்திய விதத்தில் ‘கொம்பன்’ தனித்து நிற்கிறது. அதற்கு பக்கபலமாக வேல்ராஜின் ஒளிப்பதிவு ஒத்துழைத்திருக்கிறது. ஜி.வி.யின் இசையில் உருவான ‘கருப்பு நிறத்தழகி...’ பாடலின் இசையும், காட்சிப்படுத்துதலும் மனதைக் கவர்ந்திருக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் ரசிகர்களை சேர்வடையச் செய்யவில்லை. பின்னணி இசையில் ஜி.வி. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

‘பருத்தி வீரன்’ வெளிவந்து 8 வருடங்கள் ஆனபிறகும்கூட அதன் தாக்கம் இன்னும் பல படங்களில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதில் ஹீரோவாக நடித்த கார்த்தி, அதேபோன்றதொரு கேரக்டரை தைரியமாகத் தேர்ந்தெடுத்து, ‘பருத்திவீரனி’ன் சாயல் தெரியாத அளவுக்கு தனது உடல்மொழியை மாற்றி நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ராஜ்கிரணுடன் முறைத்துக்கொள்ளும் காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கும் கார்த்தி, ஆக்ஷனிலும்... ரொமான்ஸிலும் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார்.

பழனி கேரக்டருக்கு லக்ஷ்மிமேனனும், முத்தையா கேரக்டருக்கு ராஜ்கிரணும் வெகு பொருத்தம். நிஜமான கிராமத்துவாசிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல் கோவை சரளா, தம்பிராமையா, கருணாஸ் ஆகியோரும் அந்தந்த கேரக்டர்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா கிடைத்த இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். வில்லன் குண்டன் ராமசாமியாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயனும் சரியான தேர்வு.

பலம்

1. கொம்பனாக வாழ்ந்திருக்கும் கார்த்தியின் யதார்த்தமான நடிப்பும், அதிரடி ஆக்ஷனும்
2. லக்ஷ்மி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பெரும்பாலான கேரக்டர்களின் பங்களிப்பு
3. சென்டிமென்டையும், ஆக்ஷனையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கும் முத்தையாவின் இயக்கம்
4. நிஜ கிராமத்து களத்தை கண்முன் நிறுத்தியிருக்கும் வேல்ராஜின் ஒளிப்பதிவு

பலவீனம்

1. வழக்கமான கதையும், யூகிக்கக்கூடிய ஒருசில காட்சிகளும்
2. இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் பின்னணி இசை.

மொத்தத்தில்...

சமீபத்திய கிராமத்துப் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை ஏமாற்றி வந்த வேளையில், இந்த ‘கொம்பன்’ நிச்சயம் அதை மாற்றியிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் ஒரு சிறப்பான பொழுபோக்குப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா. இந்த கோடைவிடுமுறைக்கேற்ற சரியான சாய்ஸ் இந்த ‘கொம்பன்’.

ஒரு வரி பஞ்ச் : பாசமான ரோஷக்காரன்!

ரேட்டிங் : 5.5/10

(Komban Movie Review, Komban Tamil Movie Review, Komban Review, Komban Film Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;