‘கொம்பனு’க்கு ஆதரவாக ஒன்றுகூடும் திரையுலகம்!

‘கொம்பனு’க்கு ஆதரவாக ஒன்றுகூடும் திரையுலகம்!

செய்திகள் 31-Mar-2015 1:53 PM IST Chandru கருத்துக்கள்

படம் தயாரிப்பதைவிட, அதை ரிலீஸ் செய்வதுதான் மிகப்பெரிய போராட்டம் என்பதை தற்போது ‘கொம்பன்’ ரிலீஸ் விவகாரமும் நிரூபித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த ‘கொம்பன்’ படத்தை தடைசெய்யக்கோரி, அரசியல் பிரமுகர் கிருஷ்ணசாமி சார்பாக திடீரென மனு ஒன்று மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘கொம்பன்’ படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை கிருஷ்ணாசாமி குழுவுடன் நீதிபதிகள் சிலருக்கும் ‘கொம்பன்’ படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி நீதிபதிகள் வந்தும்கூட, கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் காலதாமதமாக காலை 8 மணிக்கே படம் பார்க்க வந்தார்களாம். அதோடு ‘கொம்பன்’ படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயாரிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில், படத்தை மறுபடியும் முதலிலிருந்து போட்டுக் காண்பிக்கும்படி கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை செய்ய, நீதிபதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தியேட்டரை விட்டே கிருஷ்ணசாமியும் அவரது ஆதரவாளர்களும் எழுந்து சென்றுவிட்டார்களாம். இதனால் கிருஷ்ணசாமி குழு தங்களை அவமரியாதை செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகளும் நடந்த விஷயங்களை சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாகக் கூறி கிளம்பிவிட்டார்களாம்.

நீதிபதிகள் தரும் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு ‘கொம்பன்’ பட வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று தெரிகிறது. இதுஒருபுறமிருக்க ‘கொம்பன்’ படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்கில் ஆதரவுக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. திரையுலகைச் சேர்ந்த பலரும் ‘கொம்பனு’க்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். ரசிகர்களும் இந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இப்பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு சுமூக முடிவை எட்டவிருக்கிறது. இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள ஃபிலிம் சேம்பரில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச உள்ளனர்.

எப்படியும் இன்று மாலைக்குள் ‘கொம்பன்’ விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டு படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 2ஆம் தேதி உறுதியாக வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘கொம்பன்’ முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;