சினிமாவை வாழ வைக்க ஆர்.கே.யின் புதிய ஐடியா!

சினிமாவை வாழ வைக்க ஆர்.கே.யின் புதிய ஐடியா!

செய்திகள் 31-Mar-2015 11:55 AM IST VRC கருத்துக்கள்

’மக்கள் பாசறை’ நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரித்து, ஹீரோவாக நடித்த ‘என் வழி தனி வழி’ படத்தின் 25-வது நாள் விழா நேற்று மாலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை இயக்கிய ஷாஜி கைலாஸ், இப்படத்தில் நடித்த ராதாரவி, வசனம் எழுதிய பிரபாகர், இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவா மற்றும் நடிகர்கள் ரமேஷ் கண்ணா, மதன் பாப், நடிகைகள் நீத்து சந்திரா, கோமல் சர்மா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.கே.பேசும்போது, ‘‘இப்போது நிறைய படங்கள் வருகிறது! ஆனால் பெரும்பாலான படங்கள் ஓடுவதில்லை. ஒரு படம் ரிலீசானால் அந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தான் தியேட்டரில் ஓடுகிறது. நல்ல படம் என்று கேள்விப்பட்டு நான்காவது நாள் அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு போனால் படம் திரையரங்கில் இருப்பதில்லை! ஏன் இந்த நிலைமை? தியேட்டருக்கு மக்கள் வராததற்கு யார் காரணம்? எல்லாத்துக்கு நாமதான் காரணமாக இருக்கிறது.

எல்லா பிசினஸிலும் விழா, பண்டிகை காலங்களில், விசேஷ நாட்களில் பத்து சதவிகிதம் தள்ளுபடி, 20 சதவிகிதம் தள்ளுபடி, 30சதவிகிதம் தள்ளுபடி என கொடுக்கிறார்கள். ஆனால் சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில், விசேஷ நாட்களில் 100 ரூபாய் டிக்கெட்டுக்கு 300 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது என்ன நியாயம்? சென்னையை மட்டும் வைத்து தமிழ்நாட்டை கணக்கிட முடியாது. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவன் பண்டிகைக்கு மனைவிக்குப் புடவை, துணிமணி எல்லாம் எடுத்துவிட்டு ஆசை யோடு படம் பார்க்க தியேட்டருக்கு போகிறான்! அங்கே போனால் 100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்போது அவன் யோசிக்கிறான். மூன்று நாட்கள் பொறுத்துக் கொண்டால் நான்காவது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாய் கொடுத்து திருட்டு ‘விசிடி’யில் படம் பார்த்து விடலாம் என்று முடிவெடுக்கிறான். இப்படி ஒருவனுக்கு பொருளாதார பிரச்சனை வரும்போது அவன் திருட்டு விசிடியை நாடி போகிறான்! ஆனால் அவனும் சினிமாவை ரசிப்பவன்தான். ஹீரோவை விரும்புகிறவன்தான். ஆனால் அவனைத் திருட்டு விசிடி வாங்க வைப்பது நாமதான். திருட்டு விசிடி வாங்கி பார்ப்பது சரி என்று சொல்ல வரவில்லை! சாதாரண மக்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற மாதிரி கட்டணங்கள் இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்.

அன்று கோடிக்கணக்கான பேர் பார்த்த சினிமாவுக்கு இன்று எத்தனை பேர் வருகிறார்கள்? இன்று சினிமா ஃபைனான்சியர் கையில் சிக்கி விட்டது. சினிமா வியாபார முறைகள் மாறிவிட்டது. இப்போதுள்ள சினிமா வியாபார முறைகளை மாற்றி அமைத்தால் சினிமாவுக்கு மக்கள் நிச்சயம் வருவார்கள்! ஒரு படத்தை ஓட வைப்பது யார்? ரசிகர்கள் தான்! ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது மாதிரியான சினிமா வியாபார முறைகளை கையாள வேண்டும்! அப்போது தான் திருட்டு ‘விசிடி’யும் ஒழியும்! மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கத்தால் கூட நிறைவேற்ற முடியாது. அது மாதிரி தான் திருட்டு விசிடியும். ஒரு காலத்தில் கேபிள் டிவிக்கு அனுமதி கிடையாது. எல்லோரும் திருட்டுத்தனமாக தான் இயங்கினர். அதற்கு மக்களிடத்தில் கிடைத்த வரவேற்பை பார்த்து அதை அரசாங்கமே ஏற்றும் நடத்தும், அளவுக்கு வரவில்லையா?

ஒரு படத்திற்காக நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்! ஆனால் அவர்களால் சொந்தமாக தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து அந்த படத்தை ரிலீஸ் செய்யும் துணிச்சல் வருவதில்லை! ஏன்? இன்று தியேட்டர்காரர்களிடம் அடிமையாக இருக்கிற நிலை உள்ளது. இந்த படம் 100 நாள் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் தியேட்டரை வாடகைக்கு எடுத்து படங்களை சொந்தமாக வெளியிடுங்கள்! இனி மேலாவது மாற்றி யோசியுங்கள். சினிமாவின் வியாபார அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்து வந்த சினிமா வியாபாரம் இனி ஏழைகள் பக்கமும் போகட்டும். 1000 டிக்கெட் வாங்கினால் 100 டிக்கெட் விலையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்! 1000 டிக்கெட் விற்றால் ஒரு ஷோ ஓட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுங்கள்! படத்தை 100 நாட்கள் ஓட்ட முடியாதா? நிச்சயம் முடியும். அதற்கு சினிமா வியாபாரத்தை மாற்றி அமைக்க வேண்டும். சினிமா வியாபாரத்தை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால் சினிமாவும் வாழும், பொதுமக்களும் வாழ்வார்கள்! எல்லோரும் சிந்தியுங்கள்! புதிய பாதையில் செயல்படுவோம்! வெற்றி நிச்சயம்’’ என்றார் ஆர்.கே.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;