வலியவன் - விமர்சனம்

பலவீனமானவன்!

விமர்சனம் 27-Mar-2015 4:27 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : M. Saravanan
Production : SK Studios
Starring : Jai, Andrea Jeremiah
Music : D. Imman
Cinematography : Dinesh Krishnan
Editing : Subarak

சிக்ஸ் பேக் ஹீரோக்கள் பட்டியலில் இப்போதும் ஜெய்யும் இணைந்திருக்கிறார். அவரின் ‘வலியவன்’ உண்மையிலேயே பலசாலியா?

கதைக்களம்

சப்வே ஒன்றில் முதல்முறையாக ஜெய்யைப் பார்க்கும் ஆன்ட்ரியா, அவரிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டுப் போகிறார். அப்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஜெய், ஆன்ட்ரியாவை அலட்சியம் செய்கிறார். ஆனால், வீட்டிற்குத் திரும்பியதும் ஆன்ட்ரியாவின் நினைவு ஜெய்யை பாடாய்ப்படுத்த அவரைத் தேடி அலைகிறார். இன்னொருபுறம் ஜெய் வேலை பார்க்கும் இடம், அவரின் வீடு என ஆன்ட்ரியாவும் அவரைத் தேடி வர, தன்னை உண்மையிலேயே ஆன்ட்ரியா காதலிப்பதாக நம்புகிறார் ஜெய். ஒரு கட்டத்தில் ஆன்ட்ரியாவிடம் ஜெய் தன் காதலைச் சொல்ல, ‘நான் உன்னை காதலிக்க வேண்டுமென்றால்... இவரை நீ அடிக்க வேண்டும்’ என ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வாங்கியிருக்கும் குத்துச் சண்டை வீரரான ஆரானை நோக்கி கையைக் காட்டுகிறார் ஆன்ட்ரியா.

ஆன்ட்ரியா ஆரானை அடிக்கச் சொல்ல என்ன காரணம்? அப்பாவியான ஹீரோ, ‘அடப்பாவி’ வில்லனை அடித்தாரா இல்லையா? என்பதற்கான விடையே இந்த ‘வலியவன்’.

படம் பற்றிய அலசல்

தமிழ்சினிமாவின் அதே பழைய ஃபார்முலா கதைக்களம்... தன்னை அவமானப்படுத்தும் வீரமான வில்லனை, வெகுண்டெழுந்து வெற்றிகொள்ளும் ‘அம்மாஞ்சி’ ஹீரோவின் கதையைத்தான் இந்த ‘வலியவன்’ படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் சரவணன். கதை பழசாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள். ஆனால், இப்படத்தின் கதையைவிட திரைக்கதை இன்னும் பலவீனமாக இருக்கிறது.

வில்லனை அடிக்கத் துடிக்கும் ஹீரோவை படத்தின் முதல் காட்சியில் காட்டிவிட்டு, அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு ஆன்ட்ரியாவை ஜெய் சுத்தி சுத்தி வருவதையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘இவர்கள் எப்போது காதலிப்பார்கள்... எப்போது ஃப்ளாஷ்பேக்கைக் காட்டுவார்கள்’ என ரசிகர்கள் வெறுப்பாகும் அளவிற்கு படத்தின் முதல்பாதியை இழுத்தடித்திருக்கிறார்கள். அதோடு இடையிடையே பாடல்கள் வேறு... கேட்பதற்கு ‘ஓகே’தான் என்றாலும் சம்பந்தமேயில்லாமல் எத்தனை பாடல்களைத்தான் பார்க்க முடியும்?

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனரா தனது 3வது படத்தை இப்படிக் கொடுத்திருக்கிறார் என அதிர வைக்கிறது இப்படத்தின் காட்சியமைப்புகள். படத்தின் ஒரே ஆறுதல் கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே. அதில்கூட எந்த யதார்த்தமும் இல்லையென்றாலும், அதை சுவாரஸ்யமாக காட்டியிருப்பதால் கொஞ்சம் ஆறுதல்!

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் தேவைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

காதலியைச் சுற்றி சுற்றி வரும் வழக்கமான ஜெய்தான் இப்படத்திலும் பெரும்பாலான நேரம் வருகிறார். அதோடு கொஞ்ச நேரம் முறுக்கேறிய உடம்பு, முரட்டுத் தாடி என ஆக்ஷன் அவதாரமும் எடுத்திருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை அதே வழக்கமான ஜெய்... எளிதாக ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். இப்படத்தில் அவரின் காஸ்ட்யூம், மேக்அப் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. துறு துறு ஆன்ட்ரியா படம் முழுக்க வந்து செல்கிறார். ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது அவரது கிளாமர் உடைகள். மற்றபடி அவருக்கும் ஜெய்க்குமான ரொமான்ஸ் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. வில்லன் ஆரான் பாக்ஸருக்குரிய ‘ஃபிட்’ உடம்புடன் கச்சிதமாக இருக்கிறார். ஆனால், அவரின் கதாபாத்திர வடிவமைப்பு எடுபடவில்லை. காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் பாலசரவணனை வீணடித்திருக்கிறார்கள். ஜெய்யின் அப்பாவாக நடித்திருக்கும் அழகம் பெருமாள் பொருத்தமான தேர்வு.

பலம்

1. ஜெய்யின் 6 பேக் அவதாரமும், ஆன்ட்ரியாவின் ‘கிளாமர்’ ஆட்டமும்
2. படத்தின் கடைசி 30 நிமிடங்கள்

பலவீனம்

1. பழைய ஃபார்முலா கதையும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையும்
2. பாடல்கள்
3. யதார்த்தத்தை மீறிய காட்சியமைப்புகள்

மொத்தத்தில்...

தலைப்பில் இருக்கும் பலத்தை, படத்தின் திரைக்கதையிலும் ஏற்படுத்தியிருந்தால் ரசிகர்களை எளிதாக வென்றிருப்பான் இந்த ‘வலியவன்’.

ஒரு வரி பஞ்ச் : பலவீனமானவன்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;