7 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா!

7 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா!

செய்திகள் 24-Mar-2015 5:13 PM IST Chandru கருத்துக்கள்

திரைப்படங்களுக்கான 62வது தேசிய விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் திரைப்படங்களுக்காக 6 விருதுகளும், சிறப்பு விருதாக ‘யுடிவி’ தனஞ்செயன் எழுதிய ‘பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ என்ற புத்தகத்திற்கு ஒரு விருதும் ஆக மொத்தம் 7 விருதுகளை வென்று தென்னிந்திய சினிமா உலகிற்கு பெருமை சேர்த்துள்ளது தமிழ் சினிமா.

சிறந்த பிராந்திய மொழி (தமிழ்) படத்திற்கான விருது பிரம்மா.ஜி இயக்கியுள்ள ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே விருதை வென்ற ‘தங்க மீன்கள்’ படத்தைத் தயாரித்த ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பொரேஷனே இந்த ‘குற்றம் கடிதல்’ படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்த ‘ஜிகர்தண்டா’ படத்திற்கும் 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த துணை நடிகருக்கான விருது இப்படத்தில் ‘அசால்ட்’ சேது கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது ‘ஜிகர்தண்டா’வின் எடிட்டர் விவேக்ஹர்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இயக்கத்தில் நாசர், பேபி சாரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கும் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த பாடலாசிரியருக்கான விருது இப்படத்தின் ‘அழகே... அழகே’ பாடலை எழுதிய கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை...’ பாடலை எழுதியதற்காக கடந்த வருடமும் இதே விருதை நா.முத்துக்குமார் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘அழகே... அழகே....’ பாடலைப் பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சிறந்த படமாக தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;