கமல், கே.பி., சிவாஜி இணையவிருந்த பிதாமகன்!

கமல், கே.பி., சிவாஜி இணையவிருந்த பிதாமகன்!

கட்டுரை 24-Mar-2015 1:55 PM IST VRC கருத்துக்கள்

‘‘இதே இடத்தில் (கமல் அலுவலகம்) உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. ‘உத்தம வில்லன்’ படம் என்னுடைய முந்தைய படங்களை விட பெரியதா, இல்லை சிறியதா என்று அளவு பார்ப்பதை விட என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதை எடுக்க ஆரம்பித்தபோது நல்ல ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்போது ‘உத்தம வில்லன்’ மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் கே.பி.அவர்களை நடிக்க அழைத்தபோது அவர், ‘பாதியில் நிறுத்த வேண்டி வரும் பரவாயில்லையா?’ என்று கேட்டர்! அவரிடம் நான் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் கதையை மாத்தி எழுதி விடலாம் சார், தயவு செய்து இதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு பிறகு அவர் யோசிக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு, ’நடிக்க வர்றேன்’ என்று சொன்னார். பிறகு அவர் நடிக்க துவங்கியதும் ‘என்னோட ஷூட்டிங் முடிந்ததா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஷூட்டிங் முடிந்ததும், ‘சீக்கிரம் டப்பிங் வேலைகளை முடிங்க’ன்னு சொன்னார். டப்பிங் முடிந்ததும் எப்ப படத்தை போட்டு காட்டப் போறே?’’ன்னு கேட்டார்! இப்படி பல நிகழ்வுகள் இப்படத்தில் நடந்தது. இதனால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை! எல்லோருடையை திறமையும் காரணம் தான் ‘உத்தம வில்லன்’ நன்றாக வந்திருக்கிறது’’ என்றவாறு பேச ஆரம்பித்தார் ‘உத்தம வில்லன்’ படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன்! தொடர்ந்தவர், ‘இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன்’ என்றார்!

’உத்தம வில்லன்’ கதை உங்களுடையது! ஆனால் இப்படத்தை இயக்கும் பொறுப்பு ரமேஷ் அரவிந்திடம் ஒப்படைக்கக் காரணம் என்ன?

அவரும் நானும் நீண்டகால நண்பர்கள் என்பதை விட கே.பி.அவர்களது சிஷ்யர்கள்! நான் நடித்த ‘விரும்மாண்டி’, ‘தசாவதாரம்’ படங்கள் உட்பட பல படங்களின் கதை விவாதங்களில் ரமேஷ் அரவிந்த் கலந்து கொண்டுள்ளார். அவரும் கிட்டத்தட்ட 20 கதைகளை வைத்துள்ளார். என்னிடமும் நிறைய கதைகள் இருக்கிறது. இந்த கதைகள் சம்பந்தமாக நாங்கள் விவாதிப்பதுண்டு! என்னிடம் இருக்கிற சில கதைகளை அவரிடம் சொன்னபோது, இந்த கதையை (உத்தம வில்லன்) படமாக பண்ணலாமே என்று அவர் சொன்னார். அவருக்கு ‘உத்தம வில்லன்’ கதை ரொம்பவும் பிடித்திருப்பதாக நான் உணர்ந்தேன். அதனால் அவரிடமே அந்த கதையை இயக்கும் பொறுப்பை கொடுத்தேன்! அவ்வளவுதான்.

‘உத்தம வில்லன்’ கதை என்ன?

இது ஒரு நடிகனின் கதை! அவனுடைய வாழ்க்கையில் நடக்கிற விஷயங்கள் தான் படம். இது என்னுடைய நிஜ கதையா என்று நிறைய பேர் கேட்டார்கள்! இதில் நிஜமும், இருக்கிறது, நிழலும் இருக்கிறது. சொல்லப் போனால் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய வாழ்க்கையின் சில பகுதிகள் இருக்கும்! ‘நாயகன்’ படத்தில் கூட என் வாழ்க்கையின் ஒரு பகுதி இருக்கிறது! அது என்ன என்பது எல்லாருக்கும் தெரியாது! என் கூட நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மத்தபடி இது சினிமா இன்டஸ்ட்ரியை கிண்டலடிப்பது மாதிரியோ நக்கல் செய்வது மாதிரியோ எடுக்கப்பட்ட படம் அல்ல! ஒரு மனிதனின் கதை தான்!

இந்தப் படத்தில் உத்தமன் யார்? வில்லன் யார்?

இரண்டுமே நான் தான்! அதாவது நீங்க சொல்ல வருகிற வில்லன் என்ற வார்த்தை ஆங்கிலச் சொல்லாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வில்லன் என்பது தமிழ் சொல்லும் கூட! வில்லாதி வில்லன் என்று சொல்லுகிறோம், வில்லுக்கு வில்லாளி வீரன் என்று சொல்லுகிறோம். அது மாதிரி இந்த படத்தில் வில்லு பாட்டுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. வில்லு பாட்டுக்கு சுப்பு ஆறுமுகம் இருக்கிறார். அவர் படத்தில் பின்னணி வில்லன் என்றால் நான் முன்னணி வில்லன் மாதிரி! இப்படி வில்லன் என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது.

கே.பி.யின் கேரக்டர் என்ன?

மார்கதரிசி என்ற கேரக்டரில் கே.பி.அவர்கள் நடித்திருக்கிறார். இந்த கேரக்டரில் அவர் நடித்து முடித்தபோது இது என்னுடைய நிஜ கேரக்டர் போல இருக்கிறதே என்று அவரே சொன்னார்.

இந்த படத்தில் கே.பி.யை நடிக்க வைத்தபோது, இதற்கு முன்பையே அவரை நடிக்க வைத்திருக்கலாமே என்று உங்கள் மனதில் தோன்றியதா?

இதற்கு முன் நான் நிறைய தடவை அவரை நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அவர் தான் மாட்டேன் என்று சொல்லி வந்தார். பிரதாப் போத்தன் அவர்கள் ‘பிதாமகன்’ என்ற டைட்டிலுடன் ஒரு கதையை வைத்திருந்தார். அந்த தலைப்பில் நானும், கே.பி.அவர்களும், சிவாஜி கணேசனும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் அது கடைசி வரை கை கூடாமலேயே போய் விட்டது! ஆனால் அந்த தலைப்பில் பாலா ஒரு படம் பண்ணி விட்டார்.

படத்தில் கே.பி.யின் கேரக்டரும், கே.விஸ்வநாத்தின் கேரக்டரும் எப்படி வரும்?

கே.பி.கேரக்டரை போல கே.விஸ்வநாத் கேரக்டரும் படத்தில் முக்கியமானது. இரண்டு பேருக்குமே சமமான கேரக்டர்கள்! படத்தின் கதைப்படி இரண்டு பேருக்குள்ளேயும் மனஸ்தாபம் வரும். அந்த மனஸ்தாபம் எப்படி மறைந்து இருவரும் ஒன்று சேருகிறார்கள் என்பதை காண்பித்திருக்கிறோம்! இந்த கேரக்டர்கள் மட்டுமல்ல, படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும், அதை ஏற்று நடித்துள்ள அத்தனை பேரும் உங்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்! இப்படத்தில் வன்முறை காட்சிகள் இருக்காது. கால்களால் இன்னொருவனின் முகத்தில் தாக்குவது பொன்ற அதிசாகச காட்சிகள் எல்லாம் இருக்காது.

இந்த படம் இரண்டு காலகட்டத்தில் நடக்கிற கதை என்று சொல்கிறீர்கள்! இந்த இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் விஷயம் என்ன?

அந்த இரண்டு காலகட்டங்களையும் இணைப்பது கே.பி.சாருடைய கேரக்டர் தான்! இது முன் ஜென்மம் பற்றிய கதையா என்றும் கேட்டீர்கள்! இது முன் ஜென்மம், பின் ஜென்மம் பற்றிய கதையோ, சரித்திர கதையோ இல்லை. அதுபோன்ற விஷயங்களும் இப்படத்தில் இல்லை!

‘மருதநாயகம்’ படம் பண்ண இருப்பதாக செய்திகள் வருகிறதே?

அது சம்பந்தமாக நிறைய நண்பர்கள் என்னை அணுகியிருக்கிறார்கள்! ஆனால் நான் அவர்களையும், இது உலக அளவிலான படம், ஆங்கில படம் , ஃபிரெஞ்சு படம், மிகப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய படம் என்று எச்சரித்து கொண்டு தான் இருக்கிறேன்! எல்லாம் கை கூடியால் ‘மருதநாயகம்’ படத்தை எடுப்பேன்!

விஸ்வரூபம்-2, பாபநாசம் படங்கள் பற்றி?

இப்போ இந்த மூன்று படங்களும் சேர்ந்து போச்சு! ‘உத்தம வில்லன்’ முதலில் வரும். அதற்கு பிறகு ‘பாபநாசம்’ வெளியாக வாய்ப்பிருக்கிறது. ‘விஸ்வரூபடம்-2’ படம் எப்போது வெளியாகும் என்பது அதன் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ’விஸ்வரூபம்-2’ படம் தாமதமாகும் பட்சம் அதற்கு முன் என் நடிப்பில் இன்னொரு படம் கூட வர வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் ஆமீர்கான் நடித்த ‘பீகே’யின் ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதே?

அதில் நான் நடிக்கிறேன் என்று கூறும் அளவிற்கு இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை’’ என்ற பதிலோடு ‘உத்தம வில்லன்’ கமல்ஹாசன் தனது பேட்டியை முடித்துகொண்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;