ராஜதந்திரம் - விமர்சனம்

மாஸ்டர் பிளான்!

விமர்சனம் 13-Mar-2015 4:20 PM IST Top 10 கருத்துக்கள்

Director : Amid. A.G
Production : Foxstar Studios, Sunland Cinemas, White Bucket
Cast : Veera, Regina, Pattiyal Sekar
Music : GV Prakash Kumar
Camera : S.R. Kathir
Editing : Praveen Antony
Art Director : Vithesh

ஒரு சில படங்கள் டிரைலரின்போதே ரசிகர்களை வசீகரித்துவிடும். அப்படி வசீகரித்து... தற்போது ரிலீஸாகியிருக்கும் படம்தான் ‘ராஜதந்திரம்’. என்னதான் தந்திரம் செய்திருக்கிறார்கள் இப்படத்தில்?

கதைக்களம்

சின்ன சின்ன சீட்டிங் வேலைகளைச் செய்து பணம் சம்பாதிக்கும் நாயகன் வீரா மற்றும் அவரின் சகாக்கள் இரண்டு பேர் நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வழக்கமாக உரிமையாளர்களுக்குத் தெரியாமல் கொள்ளையடிப்பதுதான் கொள்ளையர்களின் பாணி. ஆனால், இப்படத்தின் ஹீரோ நகைக்கடை உரிமையாளரான ‘பட்டியல்’ சேகரிடமே சென்று, அவரின் கடையை கொள்ளையடிக்கப் போவதைச் சொல்கிறார். வீரா ஏன் அந்த நகைக்கடையை கொள்ளையடிக்க வேண்டும்? அதையும் அந்த உரிமையாளரிடமே ஏன் சென்று சொல்ல வேண்டும்? அப்படி சொல்லிவிட்டபிறகு அவரால் அந்த நகைக்கடையை கொள்ளையடிக்க முடிந்ததா? இல்லையா? என்பதற்கான விடைதான் ‘ராஜதந்திரம்’.

படம் பற்றிய அலசல்

‘சூதுகவ்வும்’, ‘நேரம்’, ‘சதுரங்கவேட்டை’ வரிசையில் கிட்டத்தட்ட அதேபாணி கதையுடன், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் இந்த ‘ராஜதந்திர’த்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அமித். படத்தின் டைட்டிலுக்கேற்ப நாயகன் செய்யும் பித்தலாட்டங்கள் அவ்வளவு தந்திரமாகவும், சுவாரஸ்யமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த நகைக்கடையை சாமர்த்தியமாக கொள்ளையடிக்கும் க்ளைமேக்ஸ் காட்சி.

முதல்பாதியில் கேரக்டர்களின் அறிமுகங்களோடு கதை கொஞ்சம் மெதுவாக பயணிக்கிறது. இதைத்தான் நாயகனும், அவரது கூட்டாளிகளும் செய்யப்போகிறார்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டாலும், அதை அவர்கள் எதற்காக, எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை மட்டும் இரண்டாம்பாதியில்தான் இயக்குனர் விவரிக்கிறார். இதுபோன்ற ‘ட்ரிக்கி’யான கதையில் காதல், பாடல்கள், காமெடி என எதற்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் ரசிகர்களை அமரவைப்பதென்பது சவாலான காரியமே. அதனை இயக்குனர் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள், ஆங்காங்கே கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை என ஒரு சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ராஜதந்திரம் ரசிகர்களை பெரிதாகவே வசீகரித்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு அந்தந்த கேரக்டர்கள் பெரிய அளவில் கைகொடுக்க வேண்டியது அவசியம். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே தங்களின் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக புத்திசாலித்தனமான நாயகன் கதாபாத்திரத்திற்கு ‘நடுநிசி நாய்கள்’ வீரா ஏக பொருத்தம். ‘நச்’ நடிப்பை வழங்கி ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்திருக்கிறார். அவரின் நண்பனாக ‘குள்ளன்’ கேரக்டரில் நடித்திருக்கும் ‘டர்புகா’ சிவா படம் முழுக்க கைதட்டல்களை அள்ளிச் சென்றிருக்கிறார். பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி என ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு யதார்த்தம்.

நாயகி ரெஜினாவுக்கு சின்ன வேடமாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். ‘பட்டியல்’ சேகர், ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.

பலம்

1. புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளும், அதை சுவாரஸ்யமாக இயக்கிய விதமும்.
2. விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்
3. நடிகர்களின் பங்களிப்பு
4. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

பெரிதாக இப்படத்தில் குறை எதுவும் இல்லை. ஆனால், மொத்தம் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப்படம் நீண்டநேரம் ஓடுவதைப்போன்ற உணர்வைத் தருகிறது. அதற்கு காரணம் படத்தின் முதல் பாதி! அதேபோல் சின்ன சின்ன லாஜிக் மீறல்கள். இந்த இரண்டையும் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாண்டிருக்கலாம்.

மொத்தத்தில்...

அறிமுக இயக்குனர் என்ற வகையில் ‘ராஜதந்திரம்’ மூலம் தன் வரவை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அமித். கிடைத்த சின்ன பட்ஜெட்டில், சொல்லவந்த கதையை முடிந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ‘ராஜதந்திரம்’ வரவேற்கப்படவேண்டிய படமே!

ஒரு வரி பஞ்ச் : மாஸ்டர் பிளான்!

ரேட்டிங் : 5/10

(Rajathanthiram Review, Rajathanthiram Movie Review, Rajathanthiram Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;