ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை – விமர்சனம்

வாழ்க்கை விளையாட்டு!

விமர்சனம் 9-Mar-2015 3:19 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Dream Theatres
Direction : Cheran
Starring : Sharvanand, Nithiya Menon, Santhanam, Prakash Raj, Jayaprakash, Manobala
Music : G.V.Prakash Kumar
Cinematography : Sidharth
Editing : G.Ramarao

பல சவால்களை சந்தித்து சேரன் உருவாக்கியுள்ள ‘C2H’ எனும் புதிய நிறுவனம் மூலம் நேரடியாக ‘டிவிடி’ வடிவில் வெளியிட்டுள்ள படம் ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’. நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் ஏதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

கதைக்களம்

ஐடி கம்பெனையில் வேலை செய்யும் சர்வானந்த் தண்ணி, பார்ட்டி என ஜாலியாக பொழுதை கழிக்கும் இளம் காளை! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு இரவில் பைக்கில் வீடு திரும்பும்போது பெரும் விபத்து ஏற்பட்டு கூட வந்த நண்பனை பறி கொடுக்கிறார். அன்றிலிருந்து சர்வானந்தின் வாழ்க்கை முறை மாறுகிறது! பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். மாறுபட்டு சிந்தித்து புதிய புதிய தொழில்களில் ஈட்டுபட்டு, நிறைய பணம் சம்பாதிக்கிறார். இறந்துபோன கிராமத்து நண்பனின் குடும்பத்துக்கு பண உதவி செய்கிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட தன் உயிர் தோழிக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து, அவரை வாழ வைக்கிறார். தன் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார். தன் குடும்பத்தினரும் வசதியாக வாழ ஏற்பாடு செய்கிறார். இதையெல்லாம் செய்து முடித்ததும் நீண்டகால பயணமாக வெளிநாடு கிளம்புகிறார் சர்வானந்த்! இவ்வளவு விஷ்யங்களையும் குறுகிய காலகட்டத்தில் சர்வானந்த் எதற்காக செய்து முடித்தார் என்பது தான் படத்தின் உயிரோட்டமான கதை களம்!

படம் பற்றிய அலசல்

‘பறவைகளுக்கு மட்டும் தான் தன் மரணத்தை முன் அறியும் சக்தி இருக்கிறது. மரணத்தை நெருங்கும்போது பறவைகள் தன் கூட்டத்திற்கு பாரமாக இருப்பதில்லை! அவை கூட்டத்தை விட்டு விலகிச் சென்று மரணத்தை எதிர்கொள்கின்றன’ என்ற நேஷனல் ஜியாகிரஃபி சேனலில் கூறும் ஒரு தகவலை எடுத்து, அதற்கேற்ற மாதிரி ஒரு கதையை அமைத்து உயிரோட்டமான காட்சிகளுடன் படம் பிடித்து காட்டியுள்ளார் சேரன்! நித்யா மேனனிடம் மட்டும் தன் நீண்டகால வெளிநாட்டு பயணத்துக்கான காரணத்தை கூறி, அவரை தன் கம்பெனி எம்.டி.யாக்கி, அந்த கம்பெனியின் வளர்ச்சிக்காக உழைத்த நண்பர்களையும் கம்பெயினியில் பங்குதாரர்களாக்கி விட்டு வெளிநாடு கிளம்பும் சர்வானந்த் கேரக்டர் படம் பார்ப்போரை கண்கலங்க வைக்கும் என்பது நிச்சயம்! படத்தில் ஒரு சில லாஜிக் மீறல்களும், கேள்விகளும் எழுகின்றன என்றாலும் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு உணர்வுபூர்வமான படத்தை தந்தமைக்கு சேரனை பாராட்டலாம்!

நடிகர்களின் பங்களிப்பு

ஜெயகுமார் எனும் ‘ஜேகே’ கேரக்டரில் சர்வானந்த்! படத்தின் ஆரம்பத்தில் ஜாலி, விளையாட்டு என ஆட்டம் போட்ட சர்வானந்த், விபத்து ஏற்பட்டதும் அமைதியான, பொறுப்பான இளைஞனாக மாறுகிறார்! மாறுபட்ட வகையில் சிறந்த நடிப்பை வழங்கி, அந்த ஜேகே பாத்திரத்தை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் சர்வானந்த். இவரது தோழியாக வரும் நித்யா மேனன் அழகான நடிகை மட்டுமல்ல, நன்றாக நடிக்க தெரிந்த நடிகையும் கூட என்பதை இப்படத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளுக்கிடையே கொஞ்சம் ரிலாக்ஸ் தருவது சந்தானத்தின் காமெடி காட்சிகள் தான்! சர்வானந்தின் தொழிலுக்கு வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ், பக்க பலமாக வரும் மனோபாலா, ஜெயபிரகாஷ், சர்வானந்தின் கம்பெனி விளம்பர தூதுவர்களாக வரும் பிரசன்னா, ஸ்நேகா தம்பதியர் என படத்தில் தோன்றியுள்ள அத்தனை பேரையும் அந்தந்த கேரக்டராக திகழ வைத்திருக்கிறது சேரனின் இயக்கம்!

பலம்

1.மனதை நெருடும் கதை, அதை இயல்பான காட்சிகளுடன் படம் பிடித்து, இயக்கியுள்ள விதம்.
2. கதையோட்டத்திற்கு பலம் கொடுத்துள்ள சித்தார்த்தின் ஒளிப்பதிவும், ராமாராவின் படத்தொகுப்பும்
3. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை

பலவீனம்

1. கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை.
2. சில லாஜிக் மீறல்கள்
3. சுவாரஸ்யமில்லாத பாடல்கள்.

மொத்தத்தில்

திணிக்கப்பட்ட டாஸ்மாக் காட்சிகள், குத்தாட்டம், இரட்டை அர்த்த காமெடி வசனங்கள், நம்ப முடியாத சண்டை காட்சிகள் போன்ற அம்சங்கள் இல்லாமல், நேர்த்தியான கதை சொல்லுதல் பாணி படங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும்.

ஒரு வரி பஞ்ச்: வாழ்க்கை விளையாட்டு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;