என் வழி தனி வழி - விமர்சனம்

எதற்கும் அஞ்சாதவன்

விமர்சனம் 7-Mar-2015 10:33 AM IST Top 10 கருத்துக்கள்

Production : Makkal Paasarai
Direction : Shaji Kailaas
Starring : R.K, Meenakshi Deekshith, Poonam kaur, Radharavi, Ashish vidhyarthi, Roja, Seetha
Music : Srikanth Deva
Cinematography : Rajarathinam
Editing : Samjith Mohamed

‘எல்லாம் அவன் செயல்’ படத்திற்கு பிறகு ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாஸும் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள படம்!

கதைக்களம்

மத்திய குற்றப்பிரிவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஆர்.கே., தலைமை கொடுக்கும் உத்தரவு படி ரௌடிகளை போட்டுத் தள்ளுகிறார். 20-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை நடத்திய ஆர்.கே.க்கு, பெரிய அளவில் எதிரிகளும் உண்டாகுகின்றனர். இந்நிலையில் தன் அன்புக்குரிய அம்மாவையும் ஒரு எதிரியின் துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுக்கிறார்! எம்.பி. ஒருவரின் சாவுக்கு ஆர்.கே.தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டு, ஆர்.கே. இடத்திற்கு ஆஷிஷ் வித்யார்த்தியை பணியில் அமர்த்துகிறார் உயர் போலீஸ் அதிகாரியான ராதாரவி! ஆர்.கே. தலைமறைவாக, அவரை என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஆஷிஷ் வித்யார்த்திக்கு உத்தரவிடுகிறார் ராதாரவி! ஆர்.கே.என்கவுணடரிலிருந்து தப்பினாரா? தன் தாயை கொன்றவனை பழிவாங்கினாரா என்பதை பரபரப்பாக சொல்லும் படமே ‘என் வழி தனி வழி’.

படம் பற்றிய அலசல்

ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டாலும், அவரது தலைமையாலும், அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளாலும் அவர் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை இப்படத்தில் அழுத்தம் திருத்தமாக எடுத்து காட்டியுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஸ்! அத்துடன் நாட்டில் ஊழல், அராஜாகம் ஒழியவேண்டும் என்றால் அதற்கு நமது ராணுவத்தையும் பயன்படுத்தலாம் என்ற நல்ல ஒரு கருத்தையும் வலியுறுத்தியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதைகளை இயக்குவது என்றால் ஷாஜி கைலாசுக்கு கைவந்த கலை! அதனை ஓரளவுக்கு இப்படத்திலும் நிரூபித்துள்ளார். அதற்கு பிரபாகரின் அனல் பறக்கும் வசனங்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையும், சம்ஜித் முகமதின் படத்தொகுப்பும் மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் ஷாஜி கைலாஸ் இயக்கிய முந்தைய படங்களில் இருக்கும் கதை சொல்லுதல் நேர்த்தியும், விறுவிறுப்பும் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்!

நடிகர்களின் பங்களிப்பு

யூனிஃபார்ம் போடாத போலீஸ் அதிகாரி வேடம் ஆர்.கே.க்கு... ரொம்பவும் பொருந்தியிருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன், சண்டை காட்சிகள் என அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகும் இயலாமையையும், தாய் இழந்த பரிதவிப்பையும் அழகாக வெளிகாட்டி நடித்துள்ளார். இறுதியில் நீதிபதிகளிடம் சரண்டர் ஆகி ஆர்.கே. பேசும் ஒவ்வொரு வசனங்களும், அதன் கருத்துக்களும் சிந்திக்க வைக்க கூடியவை! அர்.கே.யின் முறைப்பெண்ணாக வரும் பூனம் கௌர், இன்னொரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் மீனாட்சி தீட்சித், போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, இன்டர்நேஷனல் கிரிமினலாக வரும் ராஜீவ் கிருஷ்ணா, மந்திரியாக வரும் ரோஜா, ஆர்.கே.யின் தாயாக வரும் சீதா என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிங்கமுத்து, தம்பி ராமையா முதலானோரின் கதையுடன் ஒட்டாத காமெடி காட்சிகள் எடுபடவில்லை.

பலம்

1.விறுவிறுப்பான திரைக்கதையும், எதிர்பாரத திருப்பங்களும்!
2.பிரபாகரின் வசனங்கள், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை, எடிட்டிங்
3.கிளைமேக்ஸ்

பலவீனம்

1. கதையில் புதுமை இல்லாத்தது
2. கதையுடன் ஒட்டாத, சிரிக்க வைக்காத காமெடி காட்சிகள்
3. கவனம் ஈர்க்காத பாடல்கள், லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்...

வழக்கமான ஒரு அதிரடி போலீஸ் கதைதான்! லாஜிக் பற்றி கவலைப்படாமல் இரண்டரை மணி நேரம் பொழுதைக் கழிக்க நினைப்பவர்களுக்கு இந்த ‘என் வழி தனி வழி’ ஏற்ற படம்தான்!

ஒரு வரி பஞ்ச் : எதற்கும் அஞ்சாதவன்

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;