எனக்குள் ஒருவன் - விமர்சனம்

நிறமில்லாத கனவுகள்!

விமர்சனம் 6-Mar-2015 5:32 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Thirukumaran Entertainment
Direction : Prasad Ramar
Starring : Siddharth, Deepa Sannidhi, Srushti Dange
Music : Santhosh Narayanan
Cinematography : Gopi Amarnath
Editing : Leo John Paul

கன்னடத்தில் ஹிட்டடித்த ‘லூசியா’ படத்தை ‘எனக்குள் ஒருவனா’க மாற்றி இந்தமுறையும் வித்தியாசமான கதையுடன் களமிறங்கியிருக்கிறது சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம். அவர்களின் கனவு பலித்ததா?

கதைக்களம்

தியேட்டரில் டார்ச் அடித்து ஆட்களை உட்கார வைக்கும் வேலை பார்க்கும் சித்தார்த் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார். அவரின் இந்த பிரச்சனைக்கு ஜான் விஜய் தரும் ‘லூசியா’ எனும் மாத்திரை தீர்வு தருகிறது. இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது தூக்கம் வருவதோடு, நாம் எப்படி வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோமோ அந்த வாழ்க்கையை கனவில் வாழவும் செய்யலாம். ஒவ்வொரு முறை மாத்திரை உட்கொள்ளும்போதும் விட்ட இடத்திலிருந்தே அந்த கனவு தொடரும்.

லூசியா மாத்திரையை உட்கொள்ளும் சித்தார்த், தன் கனவுலகில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். நிஜ வாழ்க்கையில் தன்னை வெறுத்த பெண்ணை, தன்னை தேடி வரவைக்கிறார். இப்படி சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் ஒரு விபரீதம் நடக்கிறது. அது என்ன என்பதே ‘எனக்குள் ஒருவன்’.

படம் பற்றிய அலசல்

நம் ஊரைப் பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படாத வித்தியாசமான கதையைத்தான் ‘லூசியா’வில் கையிலெடுத்திருக்கிறார்கள். அதையே இங்கே ‘எனக்குள் ஒருவன்’ படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர். அடுத்தவர்களின் வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஒவ்வொருக்கும் இப்படி ஒரு மாத்திரை கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன ஐடியாவை முழுநீள சினிமாவாக ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள். அதோடு நின்றுவிடாமல் அந்த கதையை இன்னும் சுவாரஸ்மாக்கும் பொருட்டு க்ளைமேக்ஸில் எதிர்பாராத ஒரு திருப்பத்தையும் தந்து ஆச்சரியப்படுத்தி வெளியில் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படம் முடிந்த பிறகு வரும் அந்த சுவாரஸ்யமான க்ளைமேக்ஸிற்காக ‘ஆமை’ வேகத்தில் நகரும் அதற்கு முந்தைய காட்சிகளையெல்லாம் ரசிகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இடைவேளைக்கு முன்பான திரைக்கதையில் எந்தவித விறுவிறுப்பும் இல்லை. காதல், சென்டிமென்ட் என எதிலும் ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை.

சித்தார்த் வாழும் இரண்டு விதமான வாழ்க்கையை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தியிருக்கும் ‘கருப்பு வெள்ளை’ யுக்தி ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தாலும், போகப்போக அதுவே பழகிவிடுகிறது. தவிர, அந்த யுக்தியை வைத்தே படத்தை முடிக்கும்போது கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர்.

பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங் போன்ற விஷயங்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவும், கலர் கிரேடிங்கும் படத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமானால் இப்படத்தின் பலவீனமாக இருப்பது கதாபாத்திர வடிவமைப்பு என்பதைத்தான். அதனாலோ என்னவோ ஹீரோ சித்தார்த்தின் நடிப்பும், ஹீரோயின் தீபா சன்னிதியின் நடிப்பும் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக தியேட்டரில் வேலை பார்க்கும் சித்தார்த்துக்கான மேக்அப்பும், அவரின் பாடி லாங்குவேஜும் அவருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. ஸ்டாராக வரும் சித்தார்த் மட்டுமே நம்மை வசீகரிக்கிறார். பெரிய அளவில் வசீகரிக்கவில்லை என்றாலும், அறிமுக நடிகை என்பதைத் தாண்டி கொஞ்சம் கவனம் பெறுகிறார் தீபா சன்னிதி.

இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்களில் எப்போதுமே கவனம் பெற்றுவிடுகிறார் ‘ஆடுகளம்’ நரேன். அவரின் நடிப்பில் அனுபவம் பேசுகிறது. மற்றபடி ஜான் விஜய், யோகி ஜேபி, அஜய் ரத்னம் ஆகியோர் தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார்கள்.

பலம்

1. இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்தது.
2. ‘நச்’ திருப்பத்துடன் கூடிய சுவாரஸ்யமான க்ளைமேக்ஸ்.
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1. சுவாரஸ்யமே இல்லாமல் மெதுவாக நகரும் திரைக்கதை அமைப்பு.
2. கதாபாத்திர வடிவமைப்பும், பிரதான நட்சத்திரங்களின் பங்களிப்பும்
3. லாஜிக் ஓட்டைகள்

மொத்தத்தில்...

வித்தியாசமான ஒரு கதையுடன் சுவாரஸ்யமான ஒரு க்ளைமேக்ஸையும் கொண்டிருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் காட்சியமைப்புகளில் எந்த விறுவிறுப்புமே இல்லை. அதோடு நாயகனுக்கிருக்கும் பிரச்சனையும், அவனின் காதல் வலியும் ரசிகனிடத்தில் எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டையும் சரி செய்திருக்கும் பட்சத்தில் ‘எனக்குள் ஒருவனி’ன் கனவு நிச்சயம் பலித்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : நிறமில்லாத கனவுகள்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;