‘கொம்பன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

‘கொம்பன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 5-Mar-2015 3:40 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படத்தின் பாடல்கள் இன்று சூரியன் எஃப்.எம்.மில் வெளியானது. இதனை தொடர்ந்து ‘கொம்பன்’ படக்குழுவினார் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது இப்படத்தை தயாரித்துள்ள ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா பேசும்போது,

‘டார்லிங்’ 50-ஆவது நாளில் ‘கொம்பன்’ ஆடியோ!
‘‘ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிக்க திட்டமிட்ட படம் இது. ஆனால் சில காரணங்களால் இடையில் பிரேக் ஏற்பட்டு படம் இப்போதுதான் முடிந்துள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க வாய்ப்பு தந்த கார்த்தி சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘மெட்ராஸ்’, ‘டார்லிங்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் நல்ல சப்போர்ட் தந்தீங்க்! ‘டார்லிங்’ வெளியாகி இன்று 50-ஆவது நாள்! இன்றைய தினம் ‘கொம்பன்’ படப் பாடல்கள் வெளியாகியுள்ளது. நீங்கள் எல்லோரும் பாராட்டக் கூடிய ஒரு படமாக கொம்பனும் வந்துள்ளது. நேட்டிவிட்டியான ஒரு படமாக கொம்பனை ரொம்பவும் சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும்’’ என்றார்.

நான் பார்த்த சம்பவங்கள்!
’கொம்பன்’ படத்தை இயக்கியிருக்கும் முத்தையா பேசும்போது, ‘‘நான் முதன் முதலாக இயக்கிய ‘குட்டிப்புலி’ அம்மா சென்டிமென்ட் படம்! இந்த படம் மாமன், மருமகனுக்கு இடையிலான பாசம் பற்றிய படம்! உண்மையை சொல்லப் போனால் என் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் இடையில் நடந்த சில விஷயங்களை வைத்து தான் இந்த கதையை உருவாக்கியிருக்கிறேன்! என்னுடைய 16 வயதில் நடந்த அந்த சம்பவங்களை கதையாக வடித்தபோது அதில் மாமன் கேரக்டரில் வந்து நின்றவர் ராஜ்கிரண் சார் தான்! 16 வயதில் நான் நினைத்ததை இப்போது செய்து முடித்திருக்கிறேன் அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு இது போன்ற கதைகள் தான் தெரியும்! சிட்டி கதையெல்லாம் எனக்கு வராது. என்னோட ஒவ்வொரு படத்திலும் உறவுமுறை சம்பந்தமான விஷயங்கள் இருக்கும். இந்த படத்தை இயக்க வாய்ப்பு தந்த ஞானவேல் ராஜா சாருக்கும் கார்த்தி சாருக்கும், அத்துடன் இப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி’’ என்றார்.

என் மருமகன் கார்த்தி!
ராஜ்கிரண் பேசும்போது, ‘‘கொம்பன்’ படத்தை போன்ற ஒரு கதையில் என்னை நடிக்க வைத்ததற்கு முத்தையா, ஞானவேல் ராஜா, என் மருமகன் கார்த்தி ஆகியோருக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு பெண் குழுந்தையை பெற்ற ஒரு அப்பா, தன் குழந்தையை வளர்த்து ஆளாக்கி இன்னொருவனுடன் வாழ அனுப்பும்போது அவன் நல்லவனா, கெட்டவனா என்ற ஒரு பதட்டம் ஒவ்வொரு அப்பாவுக்குள்ளும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அப்பாவுக்கும், தன் மாமன் எந்த காரணத்தை கொண்டும் கண் கலங்க கூடாது என்று நினைக்கும் ஒரு நல்ல மருமகனுக்குமான மண் சார்ந்த கதை தான் ‘கொம்பன்’. இப்படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

கார்த்தியின் ஆசையை நிறைவேற்றிய கொம்பன்!
‘கொம்பன்’ கார்த்தி பேசும்போது, ‘‘மெட்ராஸுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். குடும்ப சென்டிமென்ட் கலந்த படத்தில் நான் நடித்ததில்லை! அது எனக்கு ‘கொம்பன்’ மூலம் அமைந்துள்ளது. முதலில் இந்த கதையில் நடித்தால் ‘பருத்தி வீரன்’ சாயல் வந்துவிடுமோ என்று எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஆனால் முத்தையா முழு கதையையும் கூறி இந்த கேர்கடருக்கு ராஜ்கிரண் சார், அந்த கேரக்டருக்கு கோவை சரளா மேடம், இன்னொரு கேரக்டருக்கு தம்பி ராமையா… இப்படி ஓவ்வொரு கேரக்டரை பற்றியும், அதற்கான நடிகர், நடிகைகளை பற்றியும் கூறியபோது எனக்குள் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மண் சார்ந்த இந்த கதையில் நடித்தது வித்தியாசமான அனுபவம் தான்! நான் எல்லா படங்களிலும் தண்ணி அடிக்கிற மாதிரியான கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறேன்! ஆனால் இப்படத்தில் தண்ணி அடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன்! அதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி தான்! இந்த படத்தின் கதை மட்டுமல்ல, பாடல்கள், சிச்சுவேஷன்ஸ் எல்லாமே யதார்த்தமாக இருக்கும். மண் சார்ந்த ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துள்ளது’’ என்றார் கார்த்தி!

ரஜினி, கமல், விஜயகாந்த் வரிசையில் கார்த்தி!
படத்தின் கலை இயக்குனர் வீரசமர் பேசும்போது. ‘‘ரஜினி சாருக்கு ‘எஜமான்’, கமல் சாருக்கு ‘தேவர் மகன்’, விஜயகாந்த் சாருக்கு ‘சின்ன கவுண்டர்’ படம் மாதிரி கார்த்தி சாருக்கு ‘கொம்பன்’ படம் அமையும்’’ என்றார்.

இவர்கள் தவிர படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தம்பி ராமையா, கருணாஸ் மற்றும் பலர் பேசினார்கள்! இவ்விழாவிற்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள லட்சுமி மேனன் வரவில்லை! அவர் இப்போது ப்ளஸ்-டூ பரீட்சை எழுதி வருவதால் அவரால் இவ்விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;