கொம்பன், ஓ காதல் கண்மணி, மாஸ், பாகுபலி, ரஜினி முருகன் - ரிலீஸ் தேதி?

கொம்பன், ஓ காதல் கண்மணி, மாஸ், பாகுபலி, ரஜினி முருகன் - ரிலீஸ் தேதி?

செய்திகள் 4-Mar-2015 11:11 AM IST Chandru கருத்துக்கள்

இந்த கோடைவிடுமுறையில் ஏகப்பட்ட பெரிய படங்கள் ரிலீஸிற்கு வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் கொம்பன், ஓ காதல் கண்மணி, மாஸ், மகாபலி, ரஜினிமுருகன் ஆகிய 5 படங்களையும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த சம்மரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது.

‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மிமேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கும் ‘கொம்பன்’ படத்தின் இசைவெளியீடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இப்படத்தை மார்ச் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதேநாளில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களோடு இன்னும் ஒரு சில சிறிய படங்களும் வெளிவர வாய்ப்பிருக்கின்றன.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே வாங்கியுள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தமிழ் வருடப் பிறப்பான ஏப்ரல் 10 அல்லது 17ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஸ்டுடியோ கிரீனின் இன்னொரு தயாரிப்பான ‘மாஸ்’ படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகிவரும் பாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டத் தயாரிப்பான ‘பாகுபலி’யின் தமிழ் பதிப்பான ‘மகாபலி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘பாகுபலி’ படம் உலகமெங்கும் வெளியாகும் மே 22ஆம் தேதியே, தமிழில் ‘மகாபலி’யையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்துக் கொண்டிருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தை வாங்கி வெளியிடும் ஸ்டுடியோ கிரீன், அப்படத்தை ஜூன் 2வது வாரத்திலோ அல்லது 3வது வாரத்திலோ வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மொத்தத்தில் இந்த சம்மரில் ஸ்டுடியோ கிரீன் நிறுவன வெளியீட்டில் 5 படங்கள் களமிறங்கவிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - அழகியே லிரிக் வீடியோ


;