‘உத்தம வில்லன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

‘உத்தம வில்லன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 2-Mar-2015 2:01 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் ரிலீசாக இருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள டிரேட் சென்டர் ஆடிடோரியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இவ்விழாவை தொகுத்து வழங்க, இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவை விருந்தாக அமைந்துது. இவ்விழாவில் நடந்த ஹைலைட்டான சில விஷயங்கள் இதோ:

‘கமல்’ என்றால் என்ன?

முதன் முதலாக ‘கமல்’ என்ற மூன்று எழுத்துக்கு விளக்கம் தந்த பார்த்திபன், ‘க’ என்றால் கலைகளில்..., ‘ம’ என்றால் மரணமே... ‘ல்’ என்றால் இல்லாதவன்... என்று ‘கமல்’ என்ற பெயருக்கு விளக்கம் தர, அரங்கமே கரவொலியால் அதிர்ந்த்து.

கமல் எழுதிய கே.பி. கவிதை!

அடுத்ததாக கமல்ஹாசன் மறைந்த கே.பாலச்சந்தர் பற்றி பேசினார். அப்போது கே.பி.க்கும், தனக்கும் இடையிலான தருணங்களை குறிப்பிட்டார். அத்துடன் கே.பி.பற்றி எழுதிய ஒரு கவிதை குறித்து பேசிய கமல்ஹாசன் அந்த கவிதையை நான் இங்கு படித்து விட்டால் என்னையறியாமல் நான் அழுது விடுவேன் என்பதால் உங்களுக்காக அதை திரையில் காண்பிக்கிறேன் என்று கூறி அந்த கவிதை தொகுப்பை கமல் குரலில் திரையில் காண்பிக்கப்பட்டது. அத்துன் கே.பால்ச்சந்தர் பற்றிய சில காணொளி காட்சிகளும் திரையில் காட்டப்பட்டது.

கண்கலங்கிய நாசர்!

நாசர் பேசும்போது, ‘‘நான் இதுவரை கிட்ட்த்தட்ட 500 படங்களில் நடித்திருப்பேன். ஆனால் அந்த படங்களையெல்லாம் விட இந்த படத்தை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது’’ என்றார்! நாசர் அப்படி பேசியதற்கு காரணம், இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது தான் நாசரின் மகன் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் கமல் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து பேசும்போது கண் கலங்கினார் நாசர்!

ஊர்வசியின் கர்ப்பத்தை கண்டுப் பிடித்த கமல்!

‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்தது குறித்து நடிகை ஊர்வசி பேசும்போது, ‘‘என்னை இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது நான் கர்ப்பமுற்றிருந்தேன். ஆனால் அப்போது இது யாருக்கும் தெரியாது. அந்த விஷயத்தை சொன்னால் கமல் சாரின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு போய் விடுமோ என்று நான் கர்ப்பிணியாக இருப்பதை மறைத்து நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்புக்கு வந்ததும் கமல் சார் என் கர்ப்பத்தை கண்டு பிடித்து விட்டார். (விழா அரங்கில் ஒரே சிரிப்பு...) பிரச்சனையாகி விடுமோ என்று பயந்தாரோ என்னவோ கமல் சார் என் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், டப்பிங்கையும் சீக்கிரமாகவே எடுத்து முடித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்! என்னை பொறுத்த வரையில் மறக்க முடியாத படம் ‘உத்தம வில்லன்’’ என்றார்!

அண்ணன்களை கௌரவப்படுத்திய லிங்குசாமி!

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, ‘‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற எங்களது கம்பெனி லோகோவில் நான்கு பேர் இருப்பார்கள்! சினிமாவில் இருப்பவர்களை பொறுத்தவரையில் என்னையும், போஸையும் தான் எல்லோருக்கும் தெரியும். எனது பெரிய அண்ணனையும். சின்ன அண்ணனையும் யாருக்கும் தெரியாது. அவர்கள் ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். அவர்களும் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறேன் என்று குறி, கமல்ஹாசனுடன் மேடையேறிய அண்ணன்களை எல்லோருக்கும் அறிமுகப்பத்தி கௌரவம் செய்தார் லிங்குசாமி!

நான் இங்கு நிற்க காரணம் கமல் சார்!

‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசை அமைத்துள்ள ஜிப்ரான் பேசும்போது ‘‘இவ்வளவு பெரிய படத்திற்கு நான் இசை அமைத்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக் காரணம் கமல் சார் தான்! இசை உட்பட எல்லாவற்றிலும் நல்ல ஞானம் உள்ளவர் கமல் சார்! நான் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிற விஷயத்தை அவர் தான் ஒரு இடத்தில் முடித்துக் கொடுப்பார்! அப்படி அவர் முடித்து கொடுக்கிற அவுட்புட் தான் எல்லாமே! இந்தப் படத்தின் இசையும், பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம் கமல் சார் தான்! நான் இந்த மேடையில் நிற்பதற்கும் காரணம் கமல் சார் தான்’’ என்றார்!

கலந்துரையாடல்!

பட்டிமன்ற தலைவர் ஞான சம்பந்தம், வில்லுப்பாடு வித்தகர் சுப்பு ஆறுமுகம், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, இயக்குனர்கள் லிங்குசாமி, பார்த்திபன் ஆகியோருடன் கமல்ஹாசனும் உட்கார்ந்து ‘உத்தம வில்லன்’ பாடல்கலையும், பாடல் வரிகளையும் குறித்து கலந்துரையாடினர். அது வித்தியாசமாக இருந்தது.

பூஜா குமார், பூர்ணா நடனங்கள்!

கமல்ஹாசன் நடித்த சில படங்களின் பாடல்களை தொகுத்து, நடனமும், நடிகைகள் பூஜா குமார், பூர்ணா கலந்துகொண்ட நடனங்களும், ‘சிங்கிள் கிஸ்கே’ என்ற தலைப்பில் பாடப்பட்ட ஒரு ஸ்பெஷல் பாடலும் விழாவிற்கு சிறப்பு சேர்த்த அம்சங்களாக அமைந்தது!

இணையத்தில் வெளியிட்ட பாடல்கள்!

இறுதியாக பாடல் வெளியீட்டின்போது இசை தகடை எடுத்து வந்தார்கள்! அதை பார்த்த கமல்ஹாசன் ‘இந்த தகடை இப்போது யார் வாங்குகிறார்கள்! சத்யராஜ் தான் தகடு தகடு என்று சொல்லுவார்’ என்று சிரித்தவாறு கூறி, ‘இப்போது எல்லொரும் இணைய தளத்தில் இருந்து தானே பதிவிறக்கம் செய்கிறார்கள்’ என்று கூறி, மும்பையில் இருக்கும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனை தொடர்பு கொண்டு FACETIME மூலமாக இணையத்தில் பாடல்களை பெற்றுக்கொள்ளும் படி செய்தார்! அத்துடன் படத்தின் டிரைலரையும் வெளியிட்டார் கமல்ஹாசன்! இந்த யுக்தி வித்தியாசமாக அமைந்திருந்தது.

நன்றி கூறிய ரமேஷ் அரவிந்த்!

இந்த விழாவில் கமல்ஹாசனுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்த ஜெயராம் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையுலக பிரமுகர்களுடன் இயக்குனர் கே.பாலச்சந்தரின் துணைவியாரும், மகளும் கலந்துகொண்டு கமலுக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் படத்தின் இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி விரைவில் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;