ஓ காதல் கண்மணி - டிரைலர் விமர்சனம்

ஓ காதல் கண்மணி - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 2-Mar-2015 12:03 PM IST Chandru கருத்துக்கள்

மணிரத்னத்தின் கேரியரில் அவரின் கடைசிகட்டப் படங்கள் எதுவும் வசூல்ரீதியாக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. விமர்சனங்களிலும்கூட இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டன. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம். ஆனால், எல்லாவற்றையுமே எப்போதும்போல் அமைதியாக ஒரு சிறு புன்முறுவலுடன் கவனித்து வந்தாரே தவிர, அதுகுறித்து எந்தவித ரியாக்ஷனையும் மணிரத்னம் வெளிக்காட்டவில்லை. இந்நிலையில், மீண்டும் இளமை பொங்கும் ஒரு காதல் கதையுடன் கோடைவிடுமுறையில் களமிறங்குகிறார் மணி. அதன் முன்னோட்டமாக தற்போது ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்தபோதே, ‘ரொம்பவும் சிம்பிளாகவும், அழகாகவும் இருப்பதாக’ பலராலும் பாராட்டப்பட்டது. அதனால் டிரைலர் எப்போது வரும் என்ற ஆவலும் ரசிகர்களுக்கு பன்மடங்கு அதிகரித்தது. நேற்று வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ டிரைலரைப் பார்த்தவுடன் நிச்சயம் அனைவருக்குள்ளும் மீண்டும் ஒரு ‘அலைபாயுதே’ தோன்றி மறைந்திருக்கும். அந்தளவுக்கு இளமைத்துள்ளலுடன் இருக்கிறது இந்த டிரைலர்.

1 நிமிடம், 22 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த டிரைலரில் மணிரத்னத்திற்கே உரிய சின்ன சின்ன அழகான வசனங்கள், ரஹ்மானின் அற்புதமான பின்னணி இசை, பி.சி.யின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு என ஏதோ 20 வயது இளைஞர் ஒருவர் இயக்கிய குட்டி ரொமான்ஸ் படம்போல் இருக்கிறது. மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதைக்களம் மும்பையில் நடைபெறும் என்று தெரிகிறது.

ஆதியாக துல்கர் சல்மான், தாராவாக நித்யா மேனன். நிச்சயம் இந்த இருவருக்குமே தமிழில் அவர்களின் சிறந்த படமாக ‘ஓ காதல் கண்மணி’ இருக்கும் என்பது அவர்கள் காட்டியிருக்கும் ‘எக்ஸ்பிரஷன்ஸி’லிருந்தே தெரிகிறது. ‘‘சத்தியமா நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்... ஒன்லி கேர்ள் ஃப்ரண்ட்ஸ்’’ என்ற கொள்கையுடன் இருக்கும் துல்கருக்கும், கிட்டத்தட்ட அவரின் குணாசியங்களை ஒத்த நித்யா மேனனுக்கும் இடையே மலரும் நட்பு காதலாகிறதா? கல்யாணத்தில் முடிகிறதா? என்பதே இந்த ‘ஓ காதல் கண்மணி’யின் கதையாக இருக்கலாம்.

மொத்தத்தில்... இளைஞர்களை கொண்டாட வைக்கும் ஒரு சினிமாவோடு வெயிட்டாகத் திரும்பியிருக்கிறார் மணிரத்னம்... கோடை வெயிலில் ‘ஓ காதல் கண்மணி’யின் ரொமான்ஸ் தூறல்கள் நிச்சயம் ரசிகர்களை குளிரூட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;