காக்கி சட்டை - விமர்சனம்

இது வெறும் ஆரம்பம்தான்...!

விமர்சனம் 27-Feb-2015 1:33 PM IST Top 10 கருத்துக்கள்

Directed by : R. S. Durai Senthilkumar
Produced by : Dhanush, P. Madhan
Starring : Sivakarthikeyan, Sri Divya, Prabhu
Music : Anirudh Ravichander
Cinematography : M. Sukumar
Editing : Noor Azwan

காமெடி சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு ‘காக்கி சட்டை’யை மாட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா?

கதைக்களம்

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வரும் அப்பாவி ஆட்களை விபத்தில் சிக்க வைத்து, அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதுபோல் அவர்ளுக்கு மூளைச்சாவை ஏற்படுத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டிலிருக்கும் பண முதலைகளிடம் விற்று சம்பாதிக்கிறது ஒரு கும்பல். அதனைக் கண்டுபிடிக்கும் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான மதிமாறன் (சிவகார்த்திகேயன்) வில்லனை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே இந்த ‘காக்கி சட்டை’.

படம் பற்றிய அலசல்

சமீபத்தில் வெளிவந்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் கொஞ்ச நேரமே காட்டியிருக்கும் ‘ஆர்கன் திருட்டை’ முழு நீளமாக படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். வழக்கமான போலீஸ் கதையாக இருந்தாலும் அதில் சிவகார்த்திகேயனின் டைமிங் காமெடி, அனிருத்தின் சூப்பரான பாடல்கள், த்ரில்லர் படத்திற்குரிய சின்ன சின்ன ட்விஸ்ட்கள் என ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யாவை காதல் வலையில் விழ வைக்க முதல்பாதி முழுக்க எடுத்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன், இரண்டாம்பாதியை வில்லனுக்காக ஒதுக்கியிருக்கிறார். காமெடி, காதல் என 100% என்டர்டெயின்மென்ட்டாக முதல்பாதி செல்கிறது. ஆனால், இடைவேளையின்போதே கிட்டத்தட்ட அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்துவிடும் இயக்குனர், அதன்பிறகு கண்ணெதிரே இருக்கும் வில்லனைப் பிடிப்பதற்காக 1 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்வது ரசிகர்களை கொஞ்சம் சோர்வடைய வைத்திருக்கிறது. அதேபோல் கமர்ஷியல் படங்களுக்கே உரிய லாஜிக் மீறல்களுக்கு இந்த ‘காக்கி சட்டை’யும் விதிவிலக்கல்ல.

சூப்பரான பாடல்கள், ஆக்ஷன் காட்சிகளின்போது அனல்பறக்கும் பின்னணி இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக்குவதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

தனியாக மாஸ் காட்டினால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதைப் புரிந்து, அஜித், விஜய் போன்றோரின் பிரபல வசனங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி கைதட்டல்களை அள்ளுகிறார் சிவகார்த்திகேயன். தன்னுடைய முந்தைய படங்களைவிட ஆக்ஷன், ரொமான்ஸ், பெர்ஃபாமென்ஸ், டான்ஸ் என எல்லாவற்றிலுமே அடுத்த கட்டத்திற்கு அற்புதமாக நகர்ந்திருக்கிறார்... வாழ்த்துக்கள் சிவா! பாவடை, தாவணியில் ஊதா கலர் ரிப்பனாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் இளைஞர்களைக் கவர்ந்த ஸ்ரீதிவ்யா மாடர்ன் கேரக்டரில் அந்தளவுக்கு ரசிக்க வைக்கவில்லை. நடிப்பில் நல்ல முதிர்ச்சி!

ஹிந்தி வில்லன் விஜய் ராஸ் இப்படத்தின் மூலம் தமிழில் கால்பதித்திருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் வில்லனுக்குரிய அழுத்தமான பாதிப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரபுவின் பங்களிப்பு நச்! காமெடிக்கு சேர்க்கப்பட்டிருக்கும் இமான் அண்ணாச்சி, மயில்சாமி ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை சோதிக்கின்றன. இவர்களைத்தவிர நாகிநீது, யோகி ஜேபி, வித்யூலேகா, கல்பனா ஆகியோரும் அந்தந்த கேரக்டர்களுக்கான சரியான தேர்வு.

பலம்

1. சுவாரஸ்யமான முதல்பாதியும், காமெடிக் காட்சிகளும்
2. அனிருத்தின் பாடல்கள்.
3. பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. கொஞ்சம் இழுவையான இரண்டாம்பாதியும், லாஜிக் மீறல்களும்
2. அழுத்தமான கதைக்குரிய ‘எமோஷனை’ ரசிகர்களிடம் கொண்டு சேர்க்காதது

மொத்தத்தில்...

ஒரேயடியாக பாய்ந்து செல்லாமல், அடுத்த கட்டத்திற்கான ஸ்டெப்பை கொஞ்சம் நிதானமாகவே ‘காக்கி சட்டை’யில் எடுத்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் ஆக்ஷன் அவதாரத்திற்கு அனிருத்தின் உதவியோடு சரியான களத்தைத் தேர்ந்தெடுத்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இரண்டாம்பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கியிருந்தால் விறைப்பாக இருந்திருக்கும் இந்த ‘காக்கி சட்டை’.

ஒரு வரி பஞ்ச் : இது வெறும் ஆரம்பம்தான்...!

ரேட்டிங் : 4.5/10

Key News :

Kaaki Sattai is an Tamil action masala film directed by R. S. Durai Senthilkumar and produced by Dhanush, collaborating for a second venture after Ethir Neechal (2013). The film features Sivakarthikeyan (as Mathimaran) and Sri Divya (as divya) in the lead roles. The film's music was composed by Anirudh Ravichander. (Kakki Sattai Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்


;