தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் - விமர்சனம்

சிக்னல் வீக்!

விமர்சனம் 20-Feb-2015 3:53 PM IST Top 10 கருத்துக்கள்

Production : VLS Rock Cinema
Directed by : Ramprakash Rayappa
Starring : Attakathi Dinesh, Nakul, Bindu Madhavi, Aishwarya Dutta, Sathish, Urvashi
Music : Thaman
Cinematography : Deepak Kumar Padhy
Editing : VJ Sabu Joseph

வித்தியாசமான ஒரு கதையுடன் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படம் வெளிவந்திருக்கிறது. சிக்னல் எப்படி?

கதைக்களம்

‘அட்டக்கத்தி’ தினேஷ் கன்ஸ்ட்ரக்ஷனில் பணிபுரிபவர். பிந்து மாதவி வங்கியில் பணிபுரிந்து கொண்டே ‘தற்கொலை தடுப்பு மையம்’ ஒன்றிலும் சேவைக்காக பணியாற்றி வருபவர். ஒரு சில சந்திப்புகளுக்குப் பிறகு தினேஷுக்கும், பிந்து மாதவிக்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில், தினேஷைத் தேடி அவரது ‘சைட்’டுக்கு வரும் பிந்து மாதவி, தவறுதலாக பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து மாட்டிக் கொள்கிறார். அதேநேரம் அவரது தலைக்கு மேலே பல அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய கல் ஒன்று விழுந்துவிடும் அபாயத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தினேஷுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார் பிந்து மாதவி.

இது ஒருபுறமிருக்க தீவிரவாதி ஒருவன் சதீஷின் கால் டாக்ஸி ஒன்றில் போன் மூலம் வெடிக்க வைக்கும் பாம் ஒன்றை செட் செய்து ஜனமாட்டம் உள்ள இடத்தில் அதை வெடிக்க வைக்க போன் செய்கிறான். ஆனால், திடீரென அப்போது பூமியை காந்தப்புயல் ஒன்று தாக்குவதால் செல்போன் சிக்னல்கள் அனைத்தும் செயலிழந்து போகின்றன.

இந்த இரண்டு சம்பவங்களும் செல்போன் சிக்னல் இல்லாததால் நடக்காமல் போகின்றன. ஆனால், நகுல் செய்யும் ஒரு காரியத்தால் மீண்டும் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. நகுல் என்ன செய்தார்? பிந்து மாதவி காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? தீவிரவாதி வைத்த ‘பாம்’ என்னவானது? என்பதற்கான விடையைத் தெரிந்துகொள்ள ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’.

படம் பற்றிய அலசல்

முதல்பாதியில் தினேஷ் - பிந்துமாதவி, நகுல் - ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்களின் காதல், சதீஷின் காமெடி என கதைக்கு சம்பந்தமில்லாமல் நகர்கிறது. இடைவேளைக்கு சிறிது முன்பு ஆபத்தில் பிந்து மாதவி சிக்கிக் கொள்ளும்போதும், தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயலும்போதும் படத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள ‘இடைவேளை’ போடுகிறார்கள். அதன்பிறகு காட்சிகள் ‘தடதட’க்கும் என ஆவலோடு வந்தமர்ந்தால் ‘செல்போன் சிக்னல் எப்படி உருவாகிறது?’ என நகுல் ஒரு அரைமணி நேரத்திற்கு பாடம் எடுக்கிறார். ஒரு வழியாக எல்லாம் முடிந்து க்ளைமேக்ஸில் படம் மீண்டும் சூடுபிடிக்க எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் வந்து ரசிகர்களின் கைதட்டலோடு ‘என்ட் கார்டு’ போடுகிறார்கள்.

ஒரேயொரு ஐடியாவை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள படத்தை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற காட்சிகளும், சம்பவங்களும் படத்தில் மிஸ்ஸிங். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்றவை தேவையான அளவு ஒத்துழைப்பு கொடுத்திருக்கின்றன. பாடல்களும் ஓ.கே. ரகம்!

நடிகர்களின் பங்களிப்பு

‘குக்கூ’வின் பாதிப்பிலிருந்து பாதி மீண்டுவிட்ட தினேஷ் அடுத்த படத்தில் முழுவதுமாக மீண்டுவிடுவார் என நம்புவோம். கதைக்கு சம்பந்தமில்லாத கேரக்டர்தான் என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் தினேஷ். அவருக்கு ஜோடியாக வரும் பிந்துமாதவியின் அழகு மட்டுமல்ல நடிப்பும் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறது. நகுலுக்கு பரபரவென சுற்றித்திரியும் வேடம். தன்னுடைய பாணியில் நடித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். அவருக்கு அம்மாவாக வரும் ஊர்வசி சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறார். நகுலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். பக்கத்துவீட்டுப் பெண்போல் வந்து போகிறார். டாக்ஸி டிரைவராக சதீஷ் ‘டாப் கியர்’ போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவர்களைத் தவிர புரொபஸராக மனோபாலா, தீவிரவாதியாக ஆசிப், செல்போன் திருடனாக அஜய் ஆகியோருக்கும் சொல்லிக்கொள்ளும்படி கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பலம்

1. கதைக்கான ஐடியா
2. சதீஷ் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், பிந்துமாதவியின் பங்களிப்பும்
3. க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாத பலவீனமான திரைக்கதை
2. படம் முழுக்க சாமான்ய ரசிகர்களுக்குப் புரியாத, ‘டெக்னாலஜி’ வசனங்களை பேசிக்கொண்டே இருப்பது.
3. லாஜிக் விஷயங்களை மறந்திருப்பது

மொத்தத்தில்...

ஒரு வரியில் கேட்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும் ஒரு வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கும் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் சறுக்கியிருக்கிறார். லாஜிக் விஷயங்களை கவனமாகக் கையாண்டு, தேவையில்லாத காட்சிகளை தூக்கிவிட்டு கதைக்கு சம்பந்தமுள்ள விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் ரசிகர்கள் தாராளமாக எண் 1ஐ அழுத்தியிருப்பார்கள்.

ஒரு வரி பஞ்ச் : சிக்னல் வீக்!

ரேட்டிங் : 4/10

Key News :
Tamiluku En Ondrai Aluthavum is an Tamil social thriller film written and directed by Ramprakash Rayappa. this film is produced by V Chandran. Distributed by Red Giant Movies. Movie released on 20-2-2015.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;