Qissa - விமர்சனம்

Qissa - விமர்சனம்

செய்திகள் 18-Feb-2015 2:58 PM IST Top 10 கருத்துக்கள்

எந்தவித ஆர்ப்பாட்டமான விளம்பரங்களும், மேக்கிங் ஸ்டைலும் இல்லாமல் வெகு சாதாரணமாக வெளிவரும் சில படங்கள், அதன் கனத்த கதை அழுத்தத்தால் ரசிகர்களை வசீகரிக்கும். அப்படி ஒரு படம்தான் இந்த பஞ்சாபி மொழிப் படமான Qissa. இதுவரை எத்தனையோ விதமான முரண்பட்ட கதைகளை நாம் திரைப்படங்களாக பார்த்திருக்கிறோம். ஆனால், நிச்சயம் இதுபோன்ற ஒரு கதையை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டத்தில் படம் துவங்குகிறது. அம்பெர் சிங் (இர்ஃபான் கான்) என்ற சீக்கியர் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் வரிசையாக அவரின் மனைவிக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அதற்குப் பிறகு 4வதாக மீண்டும் கர்ப்பம் தரிக்கிறார் அம்பெர் சிங்கின் மனைவி. அது கண்டிப்பாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என மனக்கோட்டை கட்ட, இந்த முறையும் அவருக்கு பெண் குழந்தையே பிறக்கிறது. ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஊருக்கும் மற்றவர்களுக்கும் அதை பெண் குழந்தை என்பதையே மறைத்து ‘கன்வர் சிங்’ (தில்லோத்தமா ஷோம்) என்ற ஆண் குழந்தையாக வளர்க்கிறார். நடை, உடை, பாவனை என அனைத்திலும் கன்வர் சிங் ஒரு ஆண் மகனாக வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு லாரி ஓட்டவும் கற்றுக் கொடுக்கிறார் அவரது தந்தை அம்பெர் சிங். தான் பிறப்பால் ஒரு பெண் என்பதையே அறியாத கன்வர் சிங்கும் தன்னை ஒரு ஆணாகவே பாவித்துக் கொள்கிறாள்.

கன்வர் சிங் தனது 13வது வயதில் பருவம் அடைய, அதையும் ஊருக்கும் மற்றவர்களுக்கு மறைத்து, அவளுக்கு ‘டர்பன் கட்டி’விட்டு முழுமையான ஆண் மகனாக மாற்றுகிறார் அம்பெர் சிங். ஒரு கட்டத்தில் வளர்ந்து பெரியவளாகும் கன்வர் சிங்கை, நீலி எனும் பெண் காதலிக்கிறாள். கன்வர் சிங்கிற்கும் அவள் மேல் காதல் பிறக்க, இதனை தெரிந்துகொள்ளும் அம்பெர் சிங் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். முதலிரவில் கன்வர் சிங்கின் ஆண் வேடம் களைய, அதிர்ச்சியாகிறாள் நீலி. அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே இந்த க்விஸ்ஸா.

ஒரு பெண்ணை எவ்வளவுதான் ஆணாக வளர்க்க முயற்சித்தாலும் அவள் மனதளவில் எப்போதும் பெண்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக இப்படம் ரசிகர்களுக்கு உணர்த்துகிறது. ஒப்பனையில்லாத ஒரிஜினல் முகங்கள், எளிமையான வசனங்கள், உறுத்தாத காட்சியமைப்புகள், அதற்கேற்ற பின்னணி இசை, ஒளிப்பதிவு என இப்படம் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் விருதுக்காகவே எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் கதையோட்டமும், அதிலுள்ள பரபரப்பான சம்பவங்களும் ரசிகர்களை படத்தோடு கட்டிப்போடுகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் ரசிகர்களை அதிர வைக்கின்றன. க்ளைமேக்ஸையும் யாரும் எதிர்பார்க்காத வகையில் உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இந்த க்விஸ்ஸா.


அரபியா மொழியில் Qissa என்பது பழங்கால, பண்பாடு மிக்க கதைகளைக் குறிக்கும். இப்படத்தை எழுதி, இயக்கி உள்ளவர் Anup Singh. Beatrice Thiriet இசை அமைத்துள்ளார். Sebastian Edschmid ஒளிப்பதிவு செய்துள்ளார். Toronto, Rotterdam, Abu Dhabi, Queensland, Mumbai போன்ற இடங்களில் நடைபெற்ற உலக படவிழாக்களில் இது, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்ற பல விருதுகளை வென்றது. 'இப்படத்தை தவற விட்டுவிடாமல் கண்டுகளியுங்கள் என Meera Nair என்கிற, உலக புகழ் பெற்ற இந்திய இயக்குநர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பரவசம் உண்டாகும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை N. F.D.C. (National Film Development Corporation) நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;