மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள்!

மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள்!

செய்திகள் 14-Feb-2015 4:52 PM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தால் தங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது எனக்கூறி கடந்த மாதம் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பணத்தை திருப்தித் தர தயாரிப்புத்தரப்பு சம்மதித்திருப்பதாகக் கூறப்பட்டதும், மேலும் போராட்டங்கள் நடத்தாமல் மேற்கண்ட விநியோகஸ்தர்கள் அமைதி காத்தனர். இந்நிலையில், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி மீண்டும் போராட்டம் செய்யவிருக்கிறோம் என இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளனர் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள். அப்போது அவர்கள் தரப்பிலிருந்து பத்திரிகை குறிப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதிலுள்ள விவரம் வருமாறு...

‘‘லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு தெரிந்த ஒரே நபர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள்தான். அவரை நம்பிதான் இந்தப் படத்தை வாங்கினோம். பட புரோமேஷனில் பேசிய ரஜினிகாந்த், படத்தைப் பற்றியும் கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்துதான் இந்தப் படத்தை வாங்க முடிவு செய்தோம். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே விநியோகஸ்தர்களுக்கும்ம், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தும் சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்பு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறும் கூறியதை அடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத் தொகை வழங்கப்படும் என்று கூறியதை அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு எங்களைத் தொடர்பு கொண்டு பேசிய ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி, ‘தயாரிப்பாளர் 10 சதவிகித நஷ்ட ஈடை மட்டுமே வழங்க முடியும்’ என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இரண்டுமாத காலமாக எந்தவித முடிவுமின்றி நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது பெருத்த மனவேதனையை அளிக்கிறது. 45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சி அடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட மனமில்லாத எங்களுக்கு வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட போராட்டத்துக்கு எங்களைத் தள்ளியுள்ளனர்.

இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால், திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வகை செய்யும் வழியில் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து உண்மையை விளக்கி ‘மெகா பிச்சை’ என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டு வாசலிலிருந்து துவங்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையைப் போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இனிமேல் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தை வாங்கித் திரையிட்டால் பிச்சையெடுக்கம் நிலைதான் ஏற்படும் என்பதை திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்தை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும். இந்த போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்திப் பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். ‘லிங்கா’ படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி அதனருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறவிக்கப்படும்.’’

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;