அனேகன் விமர்சனம்

கே.வி.ஆனந்தின் ரெகுலர் ஃபார்முலாவில் புதிய த்ரில்லர்!

விமர்சனம் 13-Feb-2015 1:02 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : கே.வி.ஆனந்த்
நடிப்பு : தனுஷ், அமைரா தஸ்தர், கார்த்திக், ஐஸ்வர்யா தேவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
எடிட்டிங் : ஆண்டனி

‘மாற்றான்’ படத்திற்குப் பிறகு இன்னொரு வித்தியாசமான கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘அனேகன்’ என்ன சொல்கிறது?

கதைக்களம்

நாயகி அமைரா தஸ்தருக்கு அவ்வப்போது கற்பனையில் சில கதைகள் தோன்றுகின்றன. ஆனால், அது கதையல்ல தன் பூர்வ ஜென்மத்தில் நடந்தவை என டாக்டரிடம் தெரிவிக்கிறார். அவர் அப்படி சொல்லும் ஒவ்வொரு கதையிலும் தனுஷும், அமைராவும் காதலர்களாக வருகிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களுடைய காதலுக்கு எதிரியாக யாராவது முளைத்து அவர்களைக் கொன்றுவிடுகிறார்கள்.

இப்படி ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், தன்னுடைய நிகழ்காலத்திலேயே தனுஷைச் சந்திக்கிறார் அமைரா. தனக்கும் அவருக்கும் இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தைச் சொல்கிறார். ஆனால் தனுஷ் இதை நம்ப மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தனுஷும், அமைராவும் காதலர்களாகிறார்கள். இந்த முறையும் அவர்களுக்கு ஒரு வில்லன் முளைக்கிறான். நிஜத்தில் தனுஷும் அமைராவும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா எனும் க்ளைமேக்ஸோடு, அமைராவுக்குத் தோன்றுவது பூர்வ ஜென்ம ஞாபகங்களா? அல்லது கற்பனையாக தோன்றும் விஷயமா என்பதையும் சில பல ட்விஸ்ட்களோடு ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது இந்த ‘அனேகன்’.

படம் பற்றிய அலசல்

ஒரு பரபரப்பான மர்ம நாவலைப் படித்த திருப்தியை ரசிகர்களுக்கு ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் ‘அனேகனி’ன் திரைக்கதை ஆசிரியர்களான கே.வி.ஆனந்தும், சுபாவும். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, அதை படமாக்குவதில் இருக்கும் சவால்களையெல்லாம் தன் வழக்கமான பாணி இயக்கத்தில் முடிந்தளவுக்கு கடந்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

ரசிகர்களுக்கு விளங்க வைப்பதற்கு கொஞ்சம் சிக்கலான கதைதான். ஆனால் அதை முடிந்தளவுக்கு திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸுக்கு இப்படம் நல்ல என்டர்டெயினராக அமையும். ஆனால் பி, சி ரசிகர்களிடமும் இப்படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பெரிய அளவில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

நான்குவிதமான கால கட்டங்களில் தனுஷ், அமைரா காதலிப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும், வடசென்னை வாசி காளியாக தனுஷும், பிராமண வீட்டுப் பெண் கல்யாணியாக அமைராவும் வரும் காலகட்டம்தான் ரசிகர்களிடம் பெரியளவில் கைதட்டல் வாங்கியிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் ‘டாங்கா மாரி...’ பாடலின் அதிரி புதிரி வெற்றி. இந்தப் பாடல் எப்போது திரையில் தோன்றும் என ஒவ்வொரு ரசிகர்களும் எவ்வளவு காத்திருந்தார்கள் என்பது பாடல் ஒலித்தபோது தியேட்டர் அதிர்ந்ததிலேயே தெரிந்தது.

‘டாங்கா மாரி’யைத் தவிர்த்த மற்ற பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் படத்திற்கு இடைஞ்சலாக இல்லை. பின்னணி இசையில் வழக்கமான ஹாரிஸ் தலைகாட்டியிருக்கிறார். ஒளிப்பதிவு, படமாக்கப்பட்ட இடங்கள், செட் ஆகியவை படத்திற்கு பெரிய ப்ளஸ். மைனஸ் என்று பார்த்தால், தனுஷ், அமைராவின் நிகழ்கால காதலில் அழுத்தமில்லாமலிருப்பது, ஆங்காங்கே தலைகாட்டும் லாஜிக் மீறல்கள், வழக்கமான க்ளைமேக்ஸ் ஆகியவற்றைச் சொல்லலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

நான்குவிதமான காலகட்டங்களில், நான்கு தோற்றங்களில் இப்படத்தில் தனுஷ் நடித்திருந்தாலும் ‘காளி’யே மனதெங்கும் நிறைந்திருக்கிறார். தனுஷின் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கேரக்டர் இப்படத்தில் இல்லையென்றாலும், தன் வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். கன்னத்தை உள்ளிழுத்து, உதடுகளைக் குவித்து நாயகி அமைரா தரும் ஒவ்வொரு முத்தமும் ரசிகர்களின் நெஞ்சில் ‘பசக்’ என ஒட்டிக் கொள்கிறது. அழகை மட்டுமல்ல நல்ல நடிப்பு திறமையையும் பெற்றிருக்கிறார் அமைரா. முதல் படத்தில் அவருக்குக் கிடைத்த சூப்பர் கேரக்டரை அற்புதமாக செய்திருக்கிறார்.

‘இவர் திரையில் தோன்றும்போது வேறு யாரையும் கவனிக்க விடமாட்டார்... அவ்வளவு காந்தசக்தி கொண்டவர்’ என நடிகர் கார்த்திக்கை அவரது இளமைக்கால படங்களின்போது புகழ்வார்கள். அப்போது மட்டுமல்ல இப்போதும் அப்படியே. மனிதரின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்தின் முக்கிய தருணங்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. தனுஷ், அமைரா, கார்த்திக்கை தவிர்த்து படத்தில் கவனம் ஈர்ப்பவர்கள் ஐஸ்வர்யா தேவன், ஆஷிஷ் வித்யார்த்தி, ‘தலைவாசல்’ விஜய், ஜெகன் ஆகியோர். மற்ற கதாபாத்திரங்கள் படத்தை நகர்த்துவதற்கு பங்களித்துள்ளன.

பலம்

1. இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்தது.
2. தனுஷ், கார்த்திக், அமைரா ஆகியோரின் நடிப்பு.
3. டாங்கா மாரி பாடலும், அதை படமாக்கிய விதமும்.
4. ஒளிப்பதிவு, லொக்கேஷன், செட்

பலவீனம்

1. தனுஷ், அமைராவின் நிகழ்கால காதலில் ஆழமில்லாததால் ‘எமோஷன்’ குறைவாக இருப்பது.
2. லாஜிக் மீறல்களும், பெரிய அளவில் ஈர்க்காத க்ளைமேக்ஸும்.

மொத்தத்தில்...

வழக்கமான கதைகளாகப் பார்த்துப் பார்த்து போரடித்துப் போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘அனேகன்’ கண்டிப்பாக ஒரு வித்தியாசமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். ஒரு சில லாஜிக் மீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ‘அனேகன்’ உங்களுக்கு ஆச்சரியம் தரும்.

ஒரு வரி பஞ்ச் : கே.வி.ஆனந்தின் ரெகுலர் ஃபார்முலாவில் புதிய த்ரில்லர்!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;