‘‘சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்!’’ – லட்சுமி மேனன் பேட்டி!

‘‘சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்!’’  – லட்சுமி மேனன் பேட்டி!

செய்திகள் 6-Feb-2015 4:29 PM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘ மஞ்சப்பை’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களில் நடித்தார்! இப்படங்களை தொடர்ந்து லட்சுமி மேனன் நடித்து முடித்துள்ள படம் ‘கொம்பன்’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. லட்சுமி மேனன் நடித்துக் கொண்டே ப்ளஸ் டூ படித்து வருகிறார். வருகிற மார்ச் - ஏப்ரல் மாதங்களில் ப்ளஸ்-டூ பரீட்சை வரவிருப்பதால், அந்த பரீட்சை எழுதுவதற்காக லட்சுமி மேனன் நடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்துவிட்டு கேரளா சென்றுள்ளார்!

இந்நிலையில் லட்சுமி மேனனன், தனக்கு கிராமத்து வேடங்கள், பக்கத்து வீட்டு பெண் மாதிரியான வேடங்களில் நடித்து போரடித்து விட்டது என்றும், தொடர்ந்து வருகிற கேரக்டர்களும் அது மாதிரி இருப்பதால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும், அதனால் நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டு, இனி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன் என்றும் லட்சுமி மேனன் கூறிய மாதிரி சில இணைய தளங்களிலும், சில பிரபல பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன!

இது குறித்து நாம் லட்சுமி மேனனை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘‘அப்படி நான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி கொடுத்ததும் இல்லை, அதில் கூறப்பட்டுள்ளது மாதிரி நான் சொன்னதும் இல்லை!’’ என்றார். மேலும் தொடர்ந்தவர் ‘‘கார்த்தியுடன் ‘கொம்பன்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, ப்ளஸ்-டூ பரீட்சையும் எழுத வேண்டி இருப்பதால் அதற்கு என்னை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிறைய இடைவெளியை நானாக ஏற்படுத்திக் கொண்டது உண்மைதான்! தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால், பள்ளிக்கு சென்று படிப்பை கவனிக்க முடியவில்லை. அதனால் பரீட்சை நெருங்கும் சமயத்திலாவது நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இதனை கருத்தில் கொண்டு என்னை தேடி வந்த வேறு படங்களில் கமிட் ஆகவில்லை! நடிப்புடன் படிப்பும் முக்கியம் அல்லவா? எல்லோருக்கும் எப்போதும் கை கொடுப்பது படிப்புதான்! அதனால் ப்ளஸ்-டூ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கோண்டேன்! ஏப்ரல் 6-ஆம் தேதி வரைக்கும் ப்ளஸ்-டூ பரீட்சை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இருக்கிறேன். ஒரு சில கதைகளை கேட்டும் வைத்திருக்கிறேன். எல்லாம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம் என்று அந்த படங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளேன்! அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மற்ற படி எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடித்து போரடித்து விட்டது என்றும், அதனால சினிமாவிலிருந்து விலகி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்து போகிறேன் என்று நான் கூறியதாக சொல்லுவதிலும் சிறிதும் உண்மையில்லை! லிட்டரேச்சருக்கு படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்! அதை நான் நடித்துக் கொண்டே செய்வேன்! அதற்காக சினிமாவை கைவிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை!

திரையுலகினரும், ரசிகர்களும் எனக்கு ஆதரவு தரும் வரையில் நான் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன். தப்பாக எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டே இருக்கட்டும்! அதை பற்றியெல்லம் நான் கவலைப்படுவதில்லை’’ என்றார் லட்சுமி மேனன் தெளிவாக!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;