என்னை அறிந்தால் - விமர்சனம்

ரசனையான ஆக்ஷன் பயணம்!

விமர்சனம் 5-Feb-2015 10:38 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
நடிப்பு : அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா, விவேக்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : டேன் மெகார்தர்
எடிட்டிங் : ஆண்டனி

தல ரசிகர்களின் ஒரு வருட காத்திருப்புக்கு விருந்து படைக்க வந்திருக்கிறது ‘என்னை அறிந்தால்’. சத்யதேவ் ஐ.பி.எஸின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

ஒரு மெல்லிசான கோடு... கோட்டுக்கு இந்த பக்கம் சத்யதேவ் ஐ.பி.எஸ் (அஜித்). அந்த பக்கம் விக்டர் (அருண் விஜய்). இவர்கள் இருவருக்குள் நடக்கும் சடுகுடு ஆட்டமே ‘என்னை அறிந்தால்’.

விமானப் பயணம் ஒன்றில் அஜித்தை சந்திக்கும் அனுஷ்கா, தன் முதல் பார்வையிலேயே அவர் மேல் காதல் கொள்கிறார். அவர் யாரென்று கூகுள் செய்து பார்க்க, சத்யதேவ் ஐ.பி.எஸ். என்பதைத் தெரிந்துகொண்டு மறுநாள் அவருடன் காபி ஷாப் ஒன்றில் சந்தித்துப் பேசுகிறார் அனுஷ்கா. அந்த நேரத்தில் திடீரென நுழையும் ரவுடிக் கும்பல் ஒன்று அனுஷ்காவை கடத்த முயல, அவர்களுடன் சண்டையிட்டு அனுஷ்காவை காப்பாற்றுகிறார் அஜித். அந்த ரவுடிக் கும்பலின் தலைவனாக வரும் அருண் விஜய், அங்கே அஜித்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார்.

அனுஷ்காவை எதற்காக கடத்த முயல்கிறார்கள்... சத்யதேவ் ஐ.பி.எஸான அஜித்தைப் பார்த்ததும், விக்டர் ரவுடியாக வரும் அருண் விஜய் ஏன் அதிர்ச்சியாகிறார்... என்பதற்கான விடைதான் ‘என்னை அறிந்தால்’.

படம் பற்றிய அலசல்

கௌதம் மேனனைப் பொறுத்தவரை ரொம்பவும் தெளிவாக தன்னுடைய எல்லைக்குள்ளேயே இப்படத்தில் விளையாண்டிருக்கிறார். ரொமான்ஸ், எமோஷன், ஆக்ஷன் என தன்னுடைய முந்தைய படங்களான ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களின் ஸ்டைலில்தான் இந்த ‘என்னை அறிந்தால்’ படத்தையும் உருவாக்கியிருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கதைக்குள் நுழைந்துவிட்டாலும், அதன் பிறகு முதல் பாதி முழுக்க ஃப்ளாஷ்பேக்கிலேயே காட்சிகள் நகரத் தொடங்குகின்றன. இடைவேளைக்கு முன்பு வரை படம் ஸ்லோவாக நகர்ந்தாலும் அஜித், த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் சமீபத்திய அஜித் படங்களில் நாம் பார்க்காத ஒன்று.

முதல் பாதிக்கும் சேர்த்து வைத்து இரண்டாம்பாதி திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது கௌதம் கூட்டணி. குறிப்பாக படத்தின் கடைசி அரைமணி நேரம் பெரிய ப்ளஸ். அஜித்திற்கும், அருண் விஜய்க்குமான உரையாடலும், அவரின் சதிவேலையை அஜித் முறியடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் ‘தல’ ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து. படத்தின் இன்னொரு பலம் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு. மாஸ் ஹீரோ என்பதற்காக அஜித்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல், அருண் விஜய், த்ரிஷா, த்ரிஷாவின் மகளாக நடித்தவர், அனுஷ்கா என அவரவர்களுக்கான கேரக்டருக்குத் தேவையான அளவுக்கு காட்சிகளை ஒதுக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஹாரிஸின் பாடல்களும், அதை முழுக்க முழுக்க மான்டேஜ்ஜாக கையாண்டிருப்பதும் ரசிகர்களை தியேட்டரை விட்டு எழுந்து செல்ல விடாமல் தடுத்திருக்கிறது. டேன் மெகார்தரின் கேமரா படத்திற்கு புதிய கலரைக் கொடுத்திருக்கிறது. டெக்னிக்கலாக கௌதம் மேனின் முந்தைய படங்களைப்போலவே இந்த ‘என்னை அறிந்தால்’ படமும் ‘வாவ்’ போட வைத்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

சின்ன சின்ன வசனங்கள், க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ், ஸ்டைலிஷான பாடி லாங்குவேஜ் என தல இப்படத்தில் புதிய பரிணாமம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் பழைய அஜித்தை பார்க்க முடிந்தது. தனக்கு மட்டுமில்லாமல் உடன் நடித்த மற்றவர்களுக்கும் ‘ஸ்கிரீன் ஸ்பேஸ்’ கொடுத்ததற்காகவே அஜித்திற்கு தனியாக ஒரு சல்யூட். 20 வருடங்களாக ஹீரோவாக நடித்தபோது கிடைக்க வேண்டிய மொத்த வரவேற்பையும், இந்த ஒரு படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் சம்பாதித்துவிட்டார் அருண் விஜய். விக்டராக நிஜமாகவே ஜெயித்திருக்கிறார். முறுக்கேறிய உடம்புடன் அஜித்துடன் மோதும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.

த்ரிஷாவுக்கும் அனுஷ்காவுக்கும் சமமான வாய்ப்புள்ள கேரக்டர். இவருவருமே அழகிலும், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்கள். த்ரிஷாவின் மகளாக நடித்திருக்கும் பேபி அனிகாவும் யதார்த்தமாக தோன்றியிருக்கிறார். விவேக்கிற்கு ரொம்பவும் குறைவான காட்சிகள்தான். ஆனால், நிறைவாக செய்திருக்கிறார்.

பலம்

1. பரபரப்பான இரண்டாம்பாதி திரைக்கதை
2. அஜித், அருண் விஜய்யின் கதாபாத்திரங்களும், அவர்களின் பங்களிப்பும்
3. அஜித் - த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள், பேபி அனிகாவின் எமோஷனல் காட்சிகள்
4. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1. கதையில் புதுமையாக எதையும் சொல்லாதது.
2. கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல்பாதி.
3. போலீஸ் ஸ்டோரிக்கே உரிய ‘ட்விஸ்ட்’ இல்லாமல் இருப்பது

மொத்தத்தில்...

கௌதம் மேனனின் படமாக இதில் புதிததாக எதுவும் இல்லையென்றாலும், அஜித் படமாக அவரின் ரசிகர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவம்தான். க்யூட்டான காதலனாக, அன்பான அப்பாவாக, எதிரிகளைப் பந்தாடும் போலீஸாக என வித்தியாச அஜித்தைக் காட்டியிருக்கிறார் கௌதம். பெரிய எதிர்பார்ப்புகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, சாதாரணமாக தியேட்டருக்குச் சென்றால் ஒரு அழகான, வித்தியாசமான அஜித் படத்தை ரசித்துவிட்டு வரலாம்.

ஒரு வரி பஞ்ச் : ரசனையான ஆக்ஷன் பயணம்!

ரேட்டிங் : 5.5/10

(Yennai Arindhaal Movie Review, Yennai Arindhaal Tamil Movie Review, Yennai Arindhaal Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;