அருண் விஜய்யை ஆனந்த கண்ணீர்விட வைத்த அஜித் ரசிகர்கள்!

அருண் விஜய்யை ஆனந்த கண்ணீர்விட வைத்த அஜித் ரசிகர்கள்!

செய்திகள் 5-Feb-2015 8:55 AM IST Chandru கருத்துக்கள்

சத்யதேவ் ஐ.பி.எஸ். ஆக அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படத்தின் சிறப்புக்காட்சி காலை 4 மணி முதலே ஆரம்பமானது. சென்னை காசி தியேட்டரிலும் சிறப்புக்காட்சி 4.30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தக் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளிப்பதற்காக இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அருண் விஜய், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா உட்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் காசி தியேட்டருக்கு வந்திருந்தார்கள்.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பே அருண் விஜய் தியேட்டரில் ஆஜராகிவிட்டதால் அவரைக் கண்டுகொண்ட அஜித் ரசிகர்கள் கூக்குரலிட்டும், அவரது பெயரை உச்சரித்தும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். அருண் விஜய்யும் பதிலுக்கு கைகாட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். படம் சரியாக 4.45 மணிக்கு துவங்கியது. முதல் 10 நிமிடங்களுக்கு எந்த வசனத்தையும் கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் விசில் சப்தங்களும், கூச்சலும்தான் தியேட்டரில் கேட்டது. பின்னர் கதை சுவாரஸ்யமாக நகரத் தொடங்கியதும் அமைதியாக அமர்ந்து படத்தை ரசிக்கத் தொடங்கினார்கள். அஜித்தின் ஓபனிங் காட்சிக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அருண் விஜய் அறிமுகமான காட்சியிலும் அஜித்திற்கு இணையாக வரவேற்பு கொடுத்தார்கள் தல ரசிகர்கள்.

இப்படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். அஜித்தும், அவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகவும், பின்னர் ஒருசில காரணங்களால் எதிரும் புதிருமாகவும் நிற்கிறார்கள். க்ளைமேக்ஸில் அஜித்தையே மிரட்டும் கொடூர வில்லனாக அருண் விஜய்யின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. அருண் விஜய்யின் கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் முடிந்து வெளியே வந்ததும் அருண் விஜய்யைப் பார்த்து மொத்த அஜித் ரசிகர்களும் ‘‘விக்டர்... விக்டர்...’’ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ரசிகர்கள் அருகே வந்து கைகுலுக்கி நன்றி தெரிவித்தார் அருண் விஜய். அவரை அருகில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் அருண் விஜய்க்கு ரசிகர்களிடம் இதுவரை இத்தனை உற்சாகமான வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, அவர்களின் அன்பு அருண் விஜய்யை ஆனந்த கண்ணீர்விட வைத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;