STR - ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்!

STR - ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்!

செய்திகள் 3-Feb-2015 9:24 AM IST Chandru கருத்துக்கள்

சினிமாவைப் பொறுத்தவரை ஒருசிலர் மட்டுமே நடிப்பதற்காகவே பிறந்திருப்பார்கள். அப்படி 1984ஆம் வருடம் பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்தவர்தான் சிலம்பரசன் டி.ராஜேந்தர். சுருக்கமாக சிம்பு. பிறந்த மறு வருடத்திலேயே ‘உறவை காத்த கிளி’ படம் மூலம் தமிழ் சினிமாவின் கேமரா கண்களுக்குள் பதிவானார். குழந்தை நட்சத்திரமாகவே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிம்புவை அவரது அப்பா விஜய டி.ராஜேந்தர் செல்லமாக ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்’ என அழைத்தார். அப்படியே ரசிகர்களும் அழைக்கத் தொடங்கினர்.

1999ஆம் வருடம் வெளிவந்த ‘மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் லிட்டில் சூப்பர்ஸ்டார், யங் சூப்பர்ஸ்டாராக உருமாறினார். ஸ்டைல், டான்ஸ், ஃபைட் என இளசுகளின் ஃபேவரைட் நாயகனாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துக் கொண்டார் சிம்பு. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்பதுபோல் நடிப்பு மட்டுமல்லாமல், தன்னால் பாடவும், கதை எழுதவும், திரைக்கதை அமைக்கவும் இயக்கவும் முடியும் என ‘மன்மதன்’ மூலம் நிரூபித்தார். தனி இசை ஆல்பங்களை உருவாக்கி இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்தார்.

சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கௌதம் மேனன்தான். அதுவரை துறுதுறு, சுறுசுறுவென சுற்றிக் கொண்டிருந்த சிம்புவுக்குள்ளிருந்த ஆர்பாட்டமில்லாத, அற்புதமான நடிகனை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் அவர்தான் வெளிக்கொணர்ந்தார். ‘சிம்புவின் கேரக்டரில் உங்களுக்கு பிடித்தது எது?’ என எந்த பெண் ரசிகையைக் கேட்டாலும் ‘விடிவி கார்த்திக்’ என சட்டென பதில் வந்து விழும்! அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த படம் சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தான் ஒரு தல ரசிகன்’ என்பதை எந்த இடத்திலும் சொல்லத் தயங்காத சிம்பு, அஜித் வழியிலேயே தனது ‘யங் சூப்பர்ஸ்டார்’ பட்டத்தையும் துறந்தார். இப்போது அவரது ரசிகர்களின் மனதில் ‘STR’ எனும் மூன்றெழுத்து மந்திரம் மட்டுமே குடியிருக்கிறது. சிம்புவின் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சிம்புவிற்கென ரசிகர்கள் மனதில் ஒதுக்கப்பட்ட இடம் மட்டும் எப்போதும் அவருக்காகவே காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரின் சமீபத்திய டீஸரான ‘இது நம்ப ஆளு’ நிரூபித்தது. இந்த டீஸர் யு டியூப்பில் வெளிவந்த 2 வாரங்களில் 25 லட்சம் பார்வையிடல்களைத் தாண்டியிருப்பதே இதற்கு சாட்சி. ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவார்’ என சிம்புவை நம்புவோம்.

நம்ப முடிகிறதா... இன்னும் பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போலவே இருக்கும் சிம்பு இன்று தனது 31வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிறந்தநாள் காணும் STR-க்கு ரசிகர்களின் வாழ்த்துக்களோடு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்து மாலையை சூடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;