விஜயகாந்த் மகனுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை!

விஜயகாந்த் மகனுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை!

செய்திகள் 2-Feb-2015 9:38 AM IST VRC கருத்துக்கள்

நேற்று முன் தினம் (31-1-15) மாலை நேரம்... சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டல், கோலிவுட் நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது! அது வேறொன்றுமில்லை! விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘சகாப்தம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து அவர்களை வாழ்த்த வந்த நட்சத்திரக் கூட்டம் தான்!

‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முகபாண்டியனுடன் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார்.

விழாவில் நடிகர் சிவகுமார், சண்முகபாண்டியனை வாழ்த்தி பேசும்போது, ‘‘உங்கள் தந்தை நேரம் தவறாமை கடை பிடிப்பவர். அவரிடம் நேரம் தவறாமை உட்பட பல நல்ல பண்புகள் இருக்கிறது. அதை கற்றுக்கொள்ளுங்கள். ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் உங்கள் தந்தை நடித்தபோது அவரது உடம்பு, ஒரே நேரத்தில் பத்து ஆட்களை அடிக்கக் கூடிய வகையில் ‘கருந்தேக்கில் செய்த சிலை’ மாதிரி இருக்கும். ஆக உங்களுக்கு ரோல் மாடலாக உங்கள் அப்பா ஒருவரே போதும்’’ என்றார்.

சத்யராஜ் பேசும்போது, ‘‘ஒவ்வொருவருக்கும் ஒரு நிர்பந்தம் வரும்போதுதான் அவர்களுக்கு சாதிக்கும் வேகம் வருகிறது.. எனக்கு அப்படி ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியவர் விஜயகாந்த் தான்! நான் கதாநாயகனாக நடிக்க வந்த புதிதில் விஜயகாந்த் தான் எனக்கு இம்சை அரசன்! (அரங்கத்தில் பலத்த சிரிப்பு...) நான் ‘தகடு தகடு’ன்னு டயலாக் பேசி சினிமாவில் நுழைஞ்சுட்டேன். ஆனா என்னை சினிமாவில் ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் எல்லாம் சார் வெறும் டயலாக் மட்டும் பத்தாது. விஜயகாந்த் மாதிரி காலை சுழட்டி சூப்பரா ஃபைட் பண்ணுங்கள். அவர் பரதநாட்டியம் ஆடுகிறார். நீங்களும் டான்ஸ் ஆடுங்கள் என சொல்வார்கள். அந்த நிர்பந்தத்தினாலேயே நான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டேன்’’ என்றார்.

அதை தொடர்ந்து பேசிய இயக்குனர் சுந்தர்.சி, ‘‘நான் படம் இயக்க வந்த காலகட்டத்தில் மொத்தம் எட்டு நடிகர்கள் தான் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களில் ஏழு பேரை வைத்து படம் இயக்கி விட்டேன். ஆனால் கேப்டனை மட்டும் இயக்கும் வாய்ப்பு அமையாமல் போய் விட்டது. அதற்கு காரணம் அவர் கதை கேட்காமல் நடிக்க மாட்டார். ஆனால் எனக்கு சரியாக கதை சொல்லத் தெரியாது. இதனால நாங்க இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணும் வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. (சண்முகப்பாண்டியனை பார்த்து) நீங்களாவது என்னிடம் கதை கேட்காமல் நடிக்க பாருங்க சண்முக பாண்டியன்!’’ என்றார்.

இவர்கள் தவிர இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு என விழாவிற்கு வந்திருந்த பலர் விஜயகாந்தையும், சண்முக பாண்டியனையும் வாழ்த்தி பேசினார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் விஜயகாந்த் நன்றி கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;