‘தொப்பி’ விழாவில் பவர் ஸ்டார் பேச்சுக்கு கண்டனம்!

‘தொப்பி’ விழாவில் பவர் ஸ்டார் பேச்சுக்கு கண்டனம்!

செய்திகள் 2-Feb-2015 8:54 AM IST VRC கருத்துக்கள்

‘மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா தனது மூன்றாவது படைப்பாக இயக்கியுள்ள படம் ‘தொப்பி’. இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனின் அண்ணன் மகளது மகன் முரளி ராம் ஹீரோவாக நடிக்க, ரக்‌ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மலையோர கிராமங்களில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழர் ராம் பிரசாத் இசை அமைத்துள்ளார். ‘மைனா’, ‘கும்கி’ புகழ் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ராயல் ஸ்கீரின்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் எஸ்.பரமராஜ் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் டி.சிவா, பி.எல்.தேன்ப்பன், ராதாகிருஷ்ணன், விஜயமுரளி, மற்றும் இயக்குனர்கள் ஜி.என்.ரங்கராஜன், கே.பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், சீனுராமசாமி, சிங்கம் புலி, நடிகர்கள் விமல், பவர் ஸ்டார் சீனிவாசன் என பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது:

‘‘தொப்பி’ என்று இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு காலத்தில் நான் நிறைய பேருக்கு தொப்பி போட்டுள்ளேன் (செக் மோசடி...)! ஆனால் இப்போது எனக்கே எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்காக முதலில் செக் கொடுக்கிறார்கள். செக் கொடுத்தவனுக்கே செக்கா என்று கேட்டால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த செக் எல்லாம் செல்லுபடியாவதில்லை! செக் கொடுத்தவனுக்கே இந்த கதி... பாருங்கள்! கொடைக்கானல் போன்ற உயரமான மலையில் கடும் குளிரில் பலமுறை கஷ்டப்பட்டு நடித்த பின் சம்பளம் கேட்டால் எனக்கு தொப்பி போடுகிறார்கள் (ஏமாத்தி விடுகிறார்கள்). பாருங்க, என்னை திருந்தி வாழவே விடமாட்டார்கள் போல தெரிகிறது. இப்போது நல்லதற்கு காலம் இல்லை. எனவே இந்த படத்திற்கு ‘தொப்பி’ என்பது நல்ல தலைப்பு’’ என்று பவர் ஸ்டார் பேசியதும் விழா அரங்கமே அதிரும் விதமாக பலத்த கைத்தட்டல்!

தொடர்ந்து பேசியவர், ‘‘இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இப்போது ஏராளமான தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருகிறார்கள். அவர்கள் படம் எடுக்க வரும்போது 2 கோடி, அல்லது 3 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்ல வேண்டும். அப்படி செய்தால் என்னை போன்றவர்களுக்கு அதை வைத்து சம்பளம் கொடுக்க முடியும்’’ என்றார். பவர் ஸ்டாரின் இந்த கோரிக்கைக்கும் பலத்த கைத்தட்டல் கிடைத்தது. இப்படி மேடைக்கு மேடை பவர் ஸ்டார் சீனிவாசன் எல்லோரையும் சிரிக்க வைக்க ஏதாவது பேசுவது வழக்கம்! ஆனால் இந்த விழா மேடையில் பவர் ஸ்டாரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்தன!

பவர் ஸ்டாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ‘‘பொது மேடைகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக, கவனமாக பேச வேண்டும். பவர் ஸ்டார் சீனிவாசன் என்பவர் வெளியில் தெரிந்தது எப்படி? அவரை வெளியில் தெரிய வைத்தது ஒரு தயாரிப்பாளர் தான்! பணம் போட்டு படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் இல்லை என்றால் இவர் வெளியில் தெரிந்திருக்க மாட்டார்’’ என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய சிங்கம் புலி, ‘‘பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுவது சரியல்ல. நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டமான வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் நடித்து முடிப்பதுடன் நமது வேலை முடிந்து விடுகிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய பெரும்பாடு படுகிறார்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு பவர் ஸ்டார் சீனிவாசன் பேசவேண்டும்’’ என்றார்.

இப்படி பலர் பவர் ஸ்டாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததால் ‘தொப்பி’ விழாவில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. இந்த படத்தை ‘நிமோ புரொடக்‌ஷன்’ என்ற நிறுவனம் சார்பில் பானு.கே வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;