டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

டூரிங்கு டாக்கீஸ் போகலாம்... போரிங்கு இல்லாமல் பார்க்கலாம்!

விமர்சனம் 30-Jan-2015 5:32 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்டார் மேக்கர்ஸ்
இயக்கம் : எஸ்.ஏ.சந்திரசேகரன்
நடிப்பு : எஸ்.ஏ.சந்திரசேகரன், பாப்ரி கோஷ், அபி சரவணன், அஸ்வின், சுனுலட்சுமி, காயத்ரி, ஜெயபாலன், ‘ரோபோ’ சங்கர், செவ்வாளை
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : அருண் பிரசாத்

‘ஒரு படம் இரண்டு கதைகள்’ என்ற டேக் லைனுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் இடைவேளை வரை ஒரு கதையாகவும், இடைவேளைக்குப் பிறகு இன்னொரு கதையாகவும் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் கதையின் ஹீரோவாக எஸ்.ஏ.சந்திரசேகரனே நடித்துள்ளார். அவரது ஹீரோ அவதாரம் எப்படி?

முதல் கதை:

இளம் வயதில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலி ஹேமாவை (பாப்ரி கோஷ்) ஊர் ஊராக 50 ஆண்டுகள் தேடியும் கிடைக்காத நிலையில், அவர் சிம்லாவில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து அங்கு செல்கிறார் 75 வயது முதியவரான ஆண்டனி (எஸ்.ஏ.சந்திரசேகரன்). சிம்லா சென்ற ஆண்டனி, ஹேமாவை எப்படி கண்டுபிடிக்கிறார்? ஹேமாவால் ஆண்டனியை அடையாளம் காண முடிந்ததா போன்ற பல நெகிழ வைக்கும் காட்சிகளுடன் சொல்லப்பட்டுள்ள காதல் கதை!

படம் பற்றிய அலசல்

உண்மையான காதலுக்கு வயது, முதுமை, மொழி, ஜாதிபேதம் எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக இக்கதை பிரதிபலிக்கிறது. அதை தனக்கே உரித்தான சில சுவாரஸ்யமான காட்சிகளுடன் படம் பார்ப்பவர்களை போரடிக்க வைக்காமல் நேர்த்தியாக சொல்லியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பே காதலர்கள் இருவரும் முதலிரவை முடித்துக் கொண்டது மாதிரி அமைக்கப்பட்ட அந்தக் காட்சியை தவிர்த்திருக்கலாம்! அதை தவிர்த்திருந்தால் அந்த காதல் மீது இன்னும் மரியாதை ஏற்பட்டிருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

கதையில் இளம் வயது ஆண்டனியாக வரும் அபி சரவணனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், வந்த காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். சிகரெட், மது பழக்கத்தால் உடம்பு பூராவும் வியாதிகளை வைத்துக் கொண்டு காதலியை தேடும் 75 வயதுடைய ஆண்டனி கேரக்டரில் யதார்த்தமாக நடித்து எல்லோரது மனதிலும் சிறந்த நடிகராகவும் இடம் பிடித்துவிடுகிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். தன் உடம்புக்கு 75 வயதே தவிர, தான் உள்ளத்தால் 25 வயதுடைய இளைஞர் என்பதை பல காட்சிகளிலாக வெளிப்படுத்தும் எஸ்.ஏ.சி., கடைசியில் காதலியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு, தட்டுத் தடுமாறும் கட்டங்களில் நம்மை கண் கலங்கவும் வைக்கிறார். சிறு வயது ஹேமாவாக வரும் ‘கொல்கத்தா அழகி’ பாப்ரி கோஷ், நடிப்பிலாகட்டும் கவர்ச்சியிலாகட்டும் ‘கொலகத்தா ரசகுலா’தான்! வயதான ஹேமாவாக நடித்திருப்பவர் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பை வழங்கி விட்டுச் செல்கிறார்.

இரண்டாம் பாதி கதை

கொண்டிவீரன்பட்டி கிராமத்தை அடக்கி ஆள்பவர்கள் ‘ஆடுகளம்” ஜெயபாலன், ‘ரோபோ’ சங்கர், செவ்வாளை முதலானோர்! இவர்களது வீட்டில் வேலை செய்யும் சுனுலட்சுமியின் தங்கை செல்வி, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாள்! ஒரு நாள் செல்வி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இறந்து போக, அவளது சாவுக்கு காரணமானவர்களை எப்படி சுனுலட்சுமி அடையாளம் கண்டு பழி வாங்குகிறார் என்பதை பரபரப்பாக சித்தரிக்கும் கதை.

படம் பற்றிய அலசல்

தற்போது நாட்டில் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை கருவாக வைத்து சித்தரித்துள்ளது இப்படம்! படத்தில் முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகள் இருந்தாலும், இன்றைய சமூக சீர்கேடுகளை துணிச்சலாக படமாக்கி, அதற்கு தனது பாணியில் ஒரு துணிச்சலான கிளைமேக்ஸையும் வைத்து அதிர வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி.

நடிகர்களின் பங்களிப்பு

இக்கதையின் நாயகி சுனுலட்சுமிதான்! தன் வயதுக்கும், அந்த கேரக்டருக்கும் மீறிய நடிப்பாற்றலை வழங்கி, அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ள சுனுலட்சுமிக்கு ஒரு சபாஷ் போடலாம்! தொலைக்காட்சி புலனாய்வு நிருபர்களாக வரும் அஸ்வின், காயத்ரி காட்சிகள் ‘கிளு கிளு’ ரகம்! வில்லன் வேடம் ஏற்றுள்ள ‘ரோபோ’ சங்கருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ‘ஆடுகளம்’ ஜெயபாலன் செவ்வாளை, சாய் கோபி ஆகியோரும் தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.

பலம்

1. ஒரு படத்தில் 2 கதை என்ற வித்தியாசமான யுக்தி.
2. எஸ்.ஏ.சி.யின் சீரான இயக்கமும், நடிப்பும்
3. இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும்

பலவீனம்

சொல்லப்பட்ட கதைகளில் புதுமையில்லாதது
இரண்டாம் கதையில் வரும் முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகள்
காமெடி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாதது

மொத்தத்தில்...

ஒரு டிக்கெட்டில் இரண்டு படங்களை பார்க்க விரும்புவர்கள் இப்படத்திற்கு தாராளமாக விசிட் அடிக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : டூரிங்கு டாக்கீஸ் போகலாம்... போரிங்கு இல்லாமல் பார்க்கலாம்!

ரேட்டிங் : 4/10

(Touring Talkies Movie Review, Touring Talkies Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டதாரி - டிரைலர்


;