இசை - விமர்சனம்

முன்பாதி அயர்ச்சி... பின்பாதி ஆச்சரியம்!

விமர்சனம் 30-Jan-2015 4:21 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
நடிப்பு : எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி, கஞ்சா கருப்பு
இசை : எஸ்.ஜே.சூர்யா
ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன்
எடிட்டிங் : கே.எம்.ரியாஸ்

தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து வெளிவந்த கடைசிப்படமான ‘அன்பே ஆருயிரே’க்குப் பின்னர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் ‘இசை’ மூலம் களத்தில் குதித்திருக்கிறார். இந்தமுறை புதிதாக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’க்கு வரவேற்பு எப்படி?

கதைக்களம்

பிரபல இசையமைப்பாளர் வெற்றிச்செல்வனிடம் (சத்யராஜ்) உதவியாளராக இருக்கும் ஏ.கே.சிவாவிற்கு (எஸ்.ஜே.சூர்யா) தனியாக இசையமைக்கும் வாய்ப்பு ஒன்று வருகிறது. பல திறமைகளுள்ள அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சினிமாவில் முதல் இடத்திற்கு வருகிறார். அதேநேரம் அவரின் குருவான வெற்றிச்செல்வன் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வாய்ப்பில்லாமல் போகிறார். தனக்குக் கிடைத்த புகழையெல்லாம் கொஞ்ச காலத்திலேயே தன் பக்கம் திருப்பிய தன் சிஷ்யன் ஏ.கே.சிவாவை பழிவாங்க நினைக்கிறார் வெற்றிச்செல்வன். அவர் நினைத்தது நடந்ததா? அதற்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த ‘இசை’.

படம் பற்றிய அலசல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கென்று இருக்கும் ரசிகர்கள் இன்னும் அவரின் படைப்புக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது படத்தின் பல இடங்களில் கிடைத்த கைதட்டல்களிலேயே தெரிந்தது. வழக்கம்போல் ‘இதுதான் கதை’ என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே தைரியமாக சொல்லிவிட்டு 3 மணி நேரத்திற்கும் மேல் ரசிகர்களை அமர வைத்ததற்காகவே எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.

முதல் பாதியில் தனது டெம்ப்ளேட் விஷயங்களான ‘கிளு கிளு’ காட்சிகளை வைத்தே படத்தை நகர்த்திவிடுகிறார். இடைவேளைக்குப் பின்னர் கதை கொஞ்சம் ‘சைக்கோ’தனமாக நகர்ந்தாலும் கடைசி 30 நிமிடங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அதுவரை பொறுமையிழந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அந்த 30 நிமிடங்கள் உற்சாகப்படுத்தியதை மறுக்க முடியாது. அதோடு க்ளைமேக்ஸையும் யாருமே யோசிக்காத வண்ணமும் தனக்கே உரிய ‘டச்’சுடன் முடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன்னால் இசையமைக்கவும் முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது. எடிட்டரின் ‘கத்திரி’க்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

எஸ்.சூர்யாவுக்கென்றே உருவாக்கப்பட்ட கேரக்டர்தான் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.சிவா கதாபாத்திரம். அதை இதற்கு முந்தைய படங்களில் எப்படிச் செய்திருந்தாரோ அதைவிட சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸில் அவரின் நடிப்பு மிரட்டல் ரகம். படத்தில் சத்யராஜ் வரும் ஒவ்வொரு இடத்திலும் கைதட்டல்களை அள்ளுகிறார். சத்யராஜிடம் மாட்டிக்கொண்டு கஞ்சா கருப்பு படும் அவஸ்தைகள் சிரிப்பு வெடி! அதோடு க்ளைமேக்ஸில் ஹீரோயின் சாவித்ரியிடம் சத்யராஜ் பேசும் வசனங்களும், அவரின் பாடி லாங்குவேஜும் நிச்சயம் வேறு யாருக்கும் வராது. சல்யூட் சத்யராஜ்! ஹீரோயின் சாவித்ரிக்கு உண்மையிலேயே நடிப்பதற்கேற்ற சரியான கேரக்டர். அவருக்கு இது முதல் படமா? என ஆச்சரியமாகக் கேட்கும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார். கஞ்சா கருப்பு, தம்பி ராமையா ஆகியோருக்கு சின்ன வேடங்கள்தான் என்றாலும் கவனம் பெற்றிருக்கிறார்கள்.

பலம்

1. படத்தின் பவர்ஃபுல்லான கடைசி 30 நிமிடங்களும், சாமர்த்தியமான க்ளைமேக்ஸும்.
2. சத்யராஜ், சாவித்ரி ஆகியோரின் நடிப்பு
3. எஸ்.ஜே.சூர்யாவுக்கே உரிய ஒரு சில காட்சிகளும், அதன் வசனங்களும்

பலவீனம்

1. மெதுவாகவும், போரடிக்கும் வகையிலும் நகரும் படத்தின் முதல்பாதி
2. கிளாமர் தூக்கலாக இருக்கும் ஒரு சில காட்சிகள்
3. படத்தின் நீளம்.

மொத்தத்தில்...

3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் முதல் இரண்டரை மணி நேரங்களை சிரமம் பார்க்காமல் கடந்துவிட்டால், படத்தின் கடைசி நிமிட சர்ப்ரைஸ்கள் உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தைத் தரும். மற்றபடி எஸ்.ஜே.சூர்யாவின் வழக்கமான ‘டச்’களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த ‘இசை’யும் விதிவிலக்கில்லை.

ஒரு வரி பஞ்ச் : முன்பாதி அயர்ச்சி... பின்பாதி ஆச்சரியம்!

ரேட்டிங் : 4.5/10

(Isai Movie Review, Isai Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டீஸர்


;