பாரதிராஜாவை பாதித்த படம்!

பாரதிராஜாவை பாதித்த படம்!

செய்திகள் 28-Jan-2015 12:59 PM IST VRC கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ படத்தை பார்த்து வியந்துபோய், இயக்குனராக வேண்டும் என்று தன் மனதில் ஆசையை வளர்த்து கொண்டவர் எம்.மருதுபாண்டியன். அதன் பின் சென்னைக்கு வந்து பல வருட கால போராட்டங்களுக்கு பிறகு அவர் இப்போது இயக்கியுள்ள படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’.

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடிப்பதற்கு முன் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான படம் இதுதானாம்! இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்சன், சரண்யா, பனிமலர், நிஷா, அல்ஃபோன்ஸ் புத்திரன், கார்த்திக், வத்ஸன் வீரமணி, செல்வம், மகுடபதி, விஜயலட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ளனர். கேம்லின் – ராஜா இருவர் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், பேரரசு முதலானோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.

விழாவில் பாரதிராஜா பேசும்போது, “இந்தப் படத்தை பார்க்க அழைத்தபோது இதுவும் வழக்கமான ஒரு படமாக தான் இருக்கும் என்று அசால்ட்டாக தான் படம் பார்த்தேன். ஆனால் படம் என் எண்ணத்தை அப்படியே மாற்றிவிட்டது. அப்படியொரு யதார்த்தமான படமாக எடுத்திருக்கிறார் மருதுபாண்டியன். இப்படத்தில் ஒரு சில கலைஞர்களின் மேக்-அப் தான் என்னை கொஞ்சம் உறுத்தியதே தவிர படம் என்னை மிகவும் பாதித்தது. படம் பார்த்து முடித்ததும் மருதுபாண்டியனிடம், ‘ஏம்ப்பா நீதான் உண்மையிலேயே இப்படத்தை இயக்குனீயா?’ என்று சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன். அவ்வளவு அருமையான படமாக எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்த மறுநாளே என் உதவி இயக்குனர்களையும் வரச்சொல்லி மீண்டும் ஒரு முறை இப்படத்தை பார்த்தேன். ஆத்மார்த்தமாக சொல்லுகிறேன், இப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். மருதுபாண்டியனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.

பல கனவுகளுடன் சென்னைக்கு வரும் இளைஞர்களின் கதையை சொல்லும் படம் இது. இதில் சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து அல்லல் படுபவர்களின் கதையும் அடக்கமாம். இந்தப் படத்திற்கு வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை ‘ஏ.டி.எம்.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம்’ சார்பில் டி.மதுராஜ் தமிழகம் முழுக்க விரைவில் வெளியிட இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;