‘டூரிங் டாக்கீஸ்’ எஸ்.ஏ.சந்திரசேகரனின் கடைசி படமா?

‘டூரிங் டாக்கீஸ்’ எஸ்.ஏ.சந்திரசேகரனின் கடைசி படமா?

செய்திகள் 27-Jan-2015 9:09 AM IST VRC கருத்துக்கள்

‘இரண்டு கதைகள், ஒரு படம்’ என்ற டேக் லைனோடு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இரண்டு கதைகளை கொண்ட இப்படத்தில் ஒரு கதையின் ஹீரோவாக எஸ்.ஏ.சந்திரசேகரனே நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். வருகிற 30-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (26-1-15) சென்னையில் நடந்தது. அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன்,

‘‘நான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் அது என்னுடைய முதல் படம் என்று நினைத்து தான இயக்குவேன். இதுவரை நான் எத்தனையோ படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால் அப்படங்களில் கிடைக்காத ஒரு மன திருப்தி இந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் கிடைத்துள்ளது! இதில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை! 75 வயது கிழவன் கேரக்டரில் தான் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் ஒரு படத்தின் ஹீரோ என்பது கதை தான்! அது மாதிரியான ஒரு கதையில் அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்ததால் தான் இதில் நான் நடித்தேன். ‘இவருக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ என்றும், ‘இந்த படம் எஸ்.ஏ.சி. இயக்கத்தில் கடைசி படம்’ என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்! இது என்னுடைய கடைசி படம் என்று நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்றால், இப்படம் தமிழில் வெளியான பிறகு இந்த கதை இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் இயக்கக் கூடிய ஒரு கதையாக அமையும் என்ற நம்பிக்கையில் தான். அப்படி நான் மற்ற மொழிகளில் இயக்கப் போனால் ஒரு வேளை இது நான் தமிழில் இயக்கிய கடைசி படமாக கூட அமையலாம் அல்லவா? இந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்து பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரன், இப்படத்தில் நடித்துள்ள புதுமுகங்கள் அபி சரவணன், அஸ்வின் குமார், சுமலட்சுமி, காயத்ரி, சாய் கோபி, இன்பராஜ், தேனி பிரகாஷ் முதலானோரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ‘கலைப்புலி’ எஸ்.தாணு, செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்ட டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களான பி.எல்.தேனப்பன், எஸ்.கதிரேசன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் உட்பட புதிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அத்தனை பேரும் கலந்துகொண்ட முதல் விழாவும் இதுவாக அமைந்து விட்டதால், இந்த விழாவில் அத்தனை பேருக்கும் பொன்னாடை போர்த்தி, அவர்களுக்கு வாழ்த்துக் கூறி கௌரவித்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இதனை தொடர்ந்து புதிய சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். அதற்கு முன்பாக ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசும்போது,
‘‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை நான் பார்த்தேன்! அதில் எஸ்.ஏ.சி.யின் கேரக்டரும், அந்த கதையும், அவரது நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த கதையை அவர் ஹிந்தியில் அமிதாப்பச்சனை வைத்து இயக்குவதாக இருந்தால் அந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன்’’ என்றார். கலைப்புலி தாணு இப்படி பேசியதும் விழா அரங்கமே அதிரும் விதமாக பலத்த கைத்தட்டல்!

‘ஸ்டார் மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘டூரிங் டாக்கீஸ்’ படத்திற்கு அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 30-ஆம் தேதி ரிலீசாகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டூரிங் டாக்கீஸ் பற்றி S.A சந்திரசேகர் - வீடியோ


;